ரஜனி திரணகம நினைவுகள் 20 ஆண்டுகளின் பின்
தி. ஸ்ரீதரன் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்
மனித உரிமையாளரும், பெண்ணியவாதியும், மருத்துவ பேராசிரியருமான ரஜனி திரணகம அவர்கள் படுகொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
அவர் 35 வயதில் படுகொலை செய்யப்பட்டார். எமது சமூகம் அதனுள் பிரசவித்த அரசியல் இயக்கங்கள் அவற்றின் செயற்பாடுகள் தொடர்பாக ஆக்கபூர்வமான முறையில் விமர்சித்திருந்தார். ‘முறிந்த பனை’ என்ற நூலினூடாக அவரும் அவரது சகாக்களான பல்கலைக்கழக ஆசியர்களும் இதனை மேற்கொண்டிருந்தனர்.
வெளிப்படையாகவும், பகிரங்கமாகவும் தமிழ் மக்கள் மத்தியில் நிலவிய ஜனநாயக விரோத செயற்பாடுகள் தொடர்பாக விமர்சனங்களையும், விழிப்புணர்வு கருத்துக்களையும் கேள்விகளையும் முறிந்த பனை எழுப்பியிருந்தது. இதற்காகவே அவர் குரூரமானமுறையில் புலிகளால் படுகொலைசெய்யப்பட்டார்
அவரது பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை கடந்த 20 வருட அனுபவங்களிலும், எமது சமூகத்துக்கு ஏற்பட்ட பேரழிவுகளிலும், பின்னடைவுகளிலும் நாம் உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. அவரது விமர்சனங்கள் பின்னாளில் வரக்கூடிய பேரழிவுகள் பற்றிய எச்சரிக்கையாகவும் இருந்தது.
ஆரோக்கியமான விமர்சனங்கள் செவிமடுக்கப்பட்டிருந்தால் அதற்கான இடைவெளி எமது சமூகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தால் பெருமளவு உயிரழிவுகளை தவிர்த்து அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக்கூடிய பல சந்தர்ப்பங்களை நாம் இழந்திருக்கமாட்டோம்.
பகுத்தறிவிற்கு புறம்பாக அழிவை நோக்கி எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி எந்த பிரக்ஞையும் இன்றி அழைத்துச் செல்வதில் இருந்த வன்முறை உணர்வு ஆயுதங்களை நேரடியாக கையாள்பவர்களிடம் மாத்திரம் இருக்கவில்லை தமிழ் ஊடகம், தமிழர்கள் மத்தியில் நிலவிய ஆதிக்கத்தை வழிபடும் அரசியல் எல்லா இடங்களிலுமே வன்முறை வௌ;வேறு வடிவங்களில் காணப்பட்டது.
ஏகபிரதிநிதித்துவ கருத்துரு தமிழர்கள் மத்தியில் பலவந்தமாக விதைக்கப்பட்டிருந்தது. கேள்விக்கு இடமற்ற பாசிசம் மெல்ல வளர்ச்சியடைந்தது. பௌத்த சிங்கள பேரினவாதமும், தமிழ் பாசிசமும் ஒன்றையொன்று போஷித்து வளர்ந்தன.
இவற்றிற்கிடையிலான ஆதிக்கப் போட்டியில் காயடிக்கப்பட்டது குறிப்பாக தமிழ் மக்களினதும், பொதுவாக இந்த நாட்டின் அனைத்து மக்களினதும் வாழ்வே.
இன்று நாம் ஆரம்பித்த இடத்திற்குக் கூட திரும்பி வரவில்லை. அதைவிட மோசமான, இழிவான, அவலமான, அவமானகரமான நிலைமையை அடைந்துள்ளோம்.
ஆனால் தமிழ் பாசிசம் தனது வரலாற்றுத் தோல்வியை அடைந்தது. தனது அழிவிற்கான பொறிமுறையை உலகளாவிய எல்லா பாசிச இயக்கங்களை போலவே தமிழர்கள் மத்தியில் நிலவிய பாசிசமும் கொண்டிருந்தது.
ஆனால் தற்போது பாரிய யுத்தத்தின் பின்னர் மக்கள் மிகவும் பலவீனமடைந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முகாம்களில் உள்ள மக்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும். அங்கு சுயமானதும், பாதுகாப்பானதுமான வாழ்வு கட்டியெழுப்பப்பட வேண்டும். மூன்று இலட்சம் மக்கள் பாரிய இழப்புக்களுக்குப் பின்னர் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் வாழ்வதை யாரும் எளிதாக எடுத்துவிட முடியாது.
தாமதமின்றி அவர்கள் மீளக் குடியேற்றப்பட வேண்டும்.
அதேவேளை தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளும் ஏனைய இலங்கையின் முஸ்லீம், மலையக மக்களின் உரிமைகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும். இலங்கை ஒரு பல்லினங்களின் நாடாக கட்டியெழுப்பப்பட வேண்டும்.
மக்களுக்கிடையே உறவுகளும், புரிதலும் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
வௌ;வேறு கருத்துக்களுடன் சமூகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
ஆயுத கலாச்சாரத்தின் மிச்சம் மீதி முடிவுக்கு வர வேண்டும்.
மக்கள் சுதந்திரமாக நாட்டின் எப்பகுதிக்கும் சென்று வருவதற்கான உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
மொத்தத்தில் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் அடிப்படையாகக் கொண்ட வாழ்வொன்று கட்டியெழுப்பப்பட வேண்டும்.
இதுவே ரஜணி திரணகம அவர்களின் சிந்தனைகளுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்க முடியும்.
தி. ஸ்ரீதரன் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்
0 Response to "ரஜனி திரணகம நினைவுகள் 20 ஆண்டுகளின் பின்"
แสดงความคิดเห็น