இலங்கை கடற்படையில் சீன இராணுவ வீரர்கள்: தமிழக மீனவர்கள் தெரிவிப்பு
நாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கையில் எங்களை துப்பாக்கி முனையில் கடத்தி சென்ற இலங்கை கடற்படை கப்பலில் சில சீனா இராணுவ வீரர்களும் இருந்தனர். இவ்வாறு அண்மையில் விடுதலை செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இராமேசுவரத்தில் இருந்து செப்டம்பர் 16-ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 21 பேரையும், 5 படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்து அனுராதபுரம் சிறையில் அடைத்தனர். இவர்களை மீட்கக் கோரி, இராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.
இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் மீனவர்கள் 21 பேரையும் இலங்கை அரசு செப்டம்பர் 24 ம் திகதி விடுதலை செய்தது.
இந்த மீனவர்களை மீட்டுவர மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படை கப்பல் சர்வதேச கடல் எல்லைக்கு விரைந்தது. அங்கு கப்பலில் காத்திருந்த இலங்கைக் கடற்படை அதிகாரியிடமிருந்து மீனவர்களைப் பெற்று கொண்டு வெள்ளிக்கிழமை மாலை மண்டபம் கரைக்கு வந்தனர்.
கரைக்கு வந்த 21 மீனவர்கள் கூறுகையில்,
நாங்க மீன் பிடிப்பதற்காக இந்திய கடல் பகுதியில் வலை விரித்துக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எங்களை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். இலங்கை கடற்படை கப்பலில் சில சீனா இராணுவ வீரர்களும் இருந்தனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இலங்கை கடற்படையில் வரும் சீன இராணுவ வீரர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள நாட்டு படகு மீனவர்கள் சிலர் கூறுகையில்,
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இலங்கை கடற்படையின் சிறிய படகு ஒன்று இராமேசுவரத்திற்கு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த எங்களை நோக்கி வேகமாக வந்தது.
அதில் மூன்று சீன வீரர்கள் இருந்தனர்.துப்பாக்கியை நீட்டியபடி எங்களை விரட்டினார்கள். அப்போது அங்கு ரோந்து வந்த இந்திய கடற்படை படகு இலங்கை படகை விரட்டிச் சென்றது.
சிறிது நேரத்திற்குள்ளாகவே இந்திய கடற்படை படகு மீது துப்பாக்கி சூடு நடத்தியபடியே அப்பகுதியிலிருந்து இலங்கை படகு மறைந்து விட்டது. இந்திய கடற்படை படகு வெறுங்கையுடன் திரும்பி விட்டது.
இந்த சம்பவம் பற்றி நாங்கள் வெளிப்படையாக பேசினால் புலனாய்வு துறை எங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்பதால் இது போன்ற சம்பவங்களை பற்றி பேசுவதற்கே பயமாக இருக்கிறது என்று கூறிய மீனவர்கள்,
இந்திய கடல் பகுதியில் அத்து மீறி நுழையும் இலங்கை கடற்படை மற்றும் சீன இராணுவ வீரர்களை கட்டுப்படுத்த வேண்டுமெனவும், மீன்பிடித் தொழிலை நிம்மதியாக செய்வதற்கு மத்திய மாநில அரசுகள் துணை புரிய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.
0 Response to "இலங்கை கடற்படையில் சீன இராணுவ வீரர்கள்: தமிழக மீனவர்கள் தெரிவிப்பு"
แสดงความคิดเห็น