jkr

தமவிபு கட்சியிலிருந்து விலகியவருக்கு பிரதேச சபைத் தலைவர் பதவி இழப்பு


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளிலிருந்து விலகி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட களுவாஞ்சிக்குடி பிரதேச சபைத் தலைவர் சீனித்தம்பி பாக்கியராசா தனது பதவியை இழந்துள்ளார்.

தனது பதவி நீக்கத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த மனுவை இன்று நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதையடுத்தே தனது பதவியை இவர் இழந்துள்ளார்.

கடந்த ஆண்டு நடை பெற்ற மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் போட்டியிட்டு தெரிவான இவர் 10.03.2009 அன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வதாக அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பொதுச் செயலாளரினால் அவரிடம் விளக்கம் கோரப்பட்ட போதிலும் உரிய காலத்தில், உரிய முறையில் விளக்கமளிக்கத் தவறியதையடுத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டு இது தொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கும் அறிவிக்கப்பட்டது.

தனது பதவி இடை நிறுத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையாளரினால் வர்த்தமானி அறிவித்தல் பிறப்பிக்கப்படுவதற்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்குமாறு அவர் தனது ஆட்சேபனை மனுவில் நீதிமன்றததைக் கேட்டிருந்தார்.

இதன் பிரகாரம் தேர்தல் ஆணையாளருக்கு இடைக்கால தடை உத்தரவு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையாளர், மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் செயலாளர், தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உட்படப் பலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த இம்மனு மீதான விசாரணை மாவட்ட நீதிபதி எம்.சகாப்தீன் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட போது, தேர்தல் சட்டப்படி உத்தியோகத்தர்கள் தடை வழங்க முடியாது, மற்றும் மனுதாரர் தனது மனுவை வாபஸ் பெற்றுள்ளமை போன்ற காரணங்களைக் குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.

இவ்வழக்கு மீதான விசாரணை நடைபெற்ற போது மனுதாரர் சீனித்தம்பி பாக்கியராசா மன்றில் சமூகமளிக்கவில்லை.

பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தவர்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரான கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், அக்கட்சியின் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா, மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ரி.கிருஸ்ணானந்தலிங்கம் ஆகியோர் சமூகமளித்திருந்தார்கள்.

அதேவேளை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட சிவனேசதுரை சந்திரகாந்தன்,

"கட்சிக் கொள்கைகளை விட்டுக் கட்சி மாறுபவர்களுக்கு சிறந்த ஒரு முன் உதாரணமாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது. ஒரு கட்சி சார்பில் தெரிவாகி இன்னுமொரு கட்சியில் இணைவது என்பது வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகம்" என்று குறிப்பிட்டார்.

அதற்கிடையில் களுவாஞ்சிக்குடி பிரதேச சபைத்தலைவர் பதவியில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு தற்போதைய உப தலைவரான காத்தமுத்து சிவகுணத்தின் பெயரை தமது கட்சி, தேர்தல் ஆணையாளரிடம் சிபாரிசு செய்துள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் செயலாளரான எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தமவிபு கட்சியிலிருந்து விலகியவருக்கு பிரதேச சபைத் தலைவர் பதவி இழப்பு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates