இங்கிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. பொறுப்பாக பேட் செய்த கோலிங்வுட், ஓவைஸ் ஷா, மார்கன் வெற்றிக்கு கைகொடுத்தனர்.
தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. ஜோகனஸ்பர்க்கில் நேற்று நடந்த லீக் போட்டியில், “பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதின. “டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் பீல்டிங் தேர்வு செய்தார்.
அதிர்ச்சி துவக்கம்:
முதலில் பேட் செய்த இலங்கை அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆனியன்ஸ் வேகத்தில் ஜெயசூர்யாவும் (0), ஆன்டர்சன் பந்து வீச்சில் தில்ஷனும் (2) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அனுபவ வீரர்களான ஜெயவர்தனா (9), கேப்டன் சங்ககராவும் (1) வந்த வேகத்தில் வெளியேற, 17 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது இலங்கை அணி.
கண்டம்பி அபாரம்:
பின்னர் களமிறங்கிய சமரவீரா (30) ஆறுதல் அளித்தார். மிடில் ஆர்டரில் கண்டம்பி, மாத்திவ்ஸ் பொறுப்புடன் ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கண்டம்பி, 53 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் பொறுப்பாக ஆடிய மாத்திவ்ஸ் 52 ரன்களுக்கு அவுட்டானார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 47.3 ஓவரில் ஆல்-அவுட்டான இலங்கை அணி 212 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஆன்டர்சன், பிராட் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
மார்கன் அரைசதம்:
சுலப இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ் (9), டென்லி (5) மோசமான துவக்கம் கொடுத்தனர். பின்னர் இணைந்த ஓவைஸ் ஷா, கோலிங்வுட் ஜோடி இலங்கை பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. இந்த ஜோடி 3 வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தபோது கோலிங்வுட் (46) வெளியேறினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ஓவைஸ் ஷா (44) ஓரளவு நம்பிக்கை தந்தார். பின்னர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்கன், ஒருநாள் அரங்கில் 7வது அரைசதம் கடந்தார். இங்கிலாந்து அணி 45 ஒவரில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மார்கன் (62), பிரையர் (28) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் குலசேகரா 2 விக்கெட் வீழ்த்தினார். ஆட்டநாயகனாக கோலிங்வுட் தேர்வு செய்யப்பட்டார்.
0 Response to "இங்கிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை"
แสดงความคิดเห็น