jkr

பலாலி ஆசிரியப் பயிற்சிக் கலாசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்

பலாலி ஆசிரியப் பயிற்சிக் கலாசாலைக்குச் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் விஜயம் செய்தார்.

ஆசிரியப் பயிற்சிக் கலாசாலைக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை கலாசாலை அதிபர் விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரிய மாணவர்கள் உட்பட அனைவரும் பூரண கும்ப மரியாதைகளுடன் மாலை அணிவித்து வரவேற்றனர்.

இந்த நிகழ்வில் உரை நிகழ்த்திய ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியின் அதிபர் திரு இக்னேசியஸ் நீண்ட காலத்தின் பின்னர் இன்றைய விஜயதஸமி நாளில் அமைச்சர் எமது கலாசாலையில் காலடி எடுத்து வைத்துள்ளமை கலாசாலையின் எதிர்காலம் சிறப்பாக அமைவதற்குக் கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளதாகத் தெரிவித்ததுடன் தற்போது மலையக மாணவர்களும் முஸ்லிம் மாணவர்களும் கல்வி கற்கும் பொருட்டு இக்கல்லூரிக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மலையக ஆசிரிய மாணவர்களும் முஸ்லிம் ஆசிரிய மாணவர்களும் இங்கு வருகை தந்துள்ளதனால் கலாசாலையின் வசதிகளை மேலும் விஸ்தரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் புதிய கட்டிடம் அமைப்பதுடன் மலசல கூட வசதிகளை மேலும் விஸ்தரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள கலாசாலை அதிபர் புத்திஜீவிகளை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள எமது கலாசாலையின் வளர்ச்சிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அனைத்து வசதிகளையும் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இங்கு உரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலாசாலை அதிபரினால் சுட்டிக்காட்டப்பட்ட அனைத்துத் தேவைகளும் மாணவர்களுக்கு அவசியமானது என்பதை தான் உணர்ந்து கொள்வதாகவும் கலாசாலையினதும் மாணவர்களினதும் தேவைகள் குறித்து ஒரு மகஜர் தம்மிடம் ஒப்படைக்குமாறும் கேட்டுக் கொண்டதுடன் தாம் விரைவில் கல்வியமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரைச் சந்தித்து யாழ்.குடா நாட்டின் தேவைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடவுள்ளதாகவும் இக்கலாசாலையின் சார்பில் இருவர் எமது குழுவினருடன் இணைந்து கொள்வதன் மூலம் நேரடியாகக் கல்வியமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் இப்பிரச்சினையை எடுத்துரைத்து தீர்வு காண முடியும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் உப அதிபர் வலயக் கல்வி அதிகாரி திருமதி ஏ.வேதநாயகம் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "பலாலி ஆசிரியப் பயிற்சிக் கலாசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates