jkr

குருநகர் கடற்கரை வீதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது!






மேற்படி கடற்கரை வீதியை மக்களின் போக்குவரத்திற்காகத் திறந்து வைத்து உரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஏற்கனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க இன்றைய தினம் படைத் தரப்பினரதும் அரச உயர் அதிகாரிகளினதும் ஒத்துழைப்புடன் இந்த வீதியை மக்களின் போக்குவரத்திற்காகத் திறந்து வைப்பதில் தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்ததுடன் மக்களின் சார்பில் ஜனாதிபதி அவர்களுக்கும் படைத் தரப்பினருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
ஏற்கனவே கடற்தொழிலாளர்களுக்குத் தொழிலில் ஈடுபடுவதற்கு 24 மணிநேர அனுமதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வழங்கியுள்ளது என்றும் இவ்வாறானதொரு சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு பாதுகாப்புப் படையினரும் எமது மக்களும் பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த 30 வருடங்களாக எங்களை நாங்களே அழித்துக் கொண்ட நிலையை முழுமையாக மாற்ற வேண்டும் எனில் நாம் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதுடன் அத்தகையதொரு சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் நாம் இழந்த அனைத்தையும் ஒரு சில வருடங்களில் மீளவும் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த மாநகர சபைத் தேர்தலில் நாங்கள் பெரும்பான்மையைப் பெற்று மாநகர நிர்வாகத்தைக் கைப்பற்றியுள்ள போதிலும் மாநகர சபையின் எதிர்க்கட்சியில் தெரிவு செய்யப்பட்டுள்ள திரு.றெமிடியாஸ் கூட அண்மையில் தன்னைச் சந்தித்து மாநகர நிர்வாகத்தைச் சிறப்பாக நடாத்துவதற்குத் தாம் ஆதரவு தருவதாகத் தெரிவித்துள்ளார் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எத்தகைய சூழ்நிலை ஏற்பட்ட போதிலும் தேர்தல் காலத்தில் மக்களிளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மாநகர சபை நிர்வாகம் நிறைவேற்றும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.
யுத்தகால சூழ்நிலையைக் கடந்து வந்துள்ள எமது மக்கள் உயிர்வாழும் உரிமை உட்பட சகல ஜனநாயக உரிமைகளையும் பெற்றுள்ள நிலையில் எதிர்காலத்தில் இன்றைய துன்ப துயரங்களில் இருந்து முற்றாக விடுபடுவதற்கு சரியான அரசியல் தலைமையின் கீழ் அணிதிரள்வது அவசியமாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த 1995ம் ஆண்டில் இடம்பெற்ற இடப்பெயர்வின் போது மூடப்பட்ட இந்த வீதி இன்று மக்களின் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளதுடன் 14 வருட காலத்தின் பின்னர் இந்த வீதியில் தேசியக் கொடியசைத்து பஸ் சேவையை ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஆசியுரை வழங்கிய வணக்கத்திற்குரிய ஜெரோ செல்வநாயகம் அவர்கள் இன்று வீதியைத் திறந்து வைத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது மக்களின் வாழ்வையும் மலர வைப்பார் என்பதால் அமைச்சருக்குத் தனது நன்றிகளையும் ஆசிகளையும் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்த வைபவத்தில் யாழ் கட்டளைத் தளதிபதி யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் படை அதிகாரிகள் பிரதேச செயலாளர் மாநகர முதல்வர் உதவி முதல்வர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட அரச உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.














  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "குருநகர் கடற்கரை வீதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates