பிஜி தீவில் 2 தமிழர்கள் கொலை ; தமிழர் உள்பட 3 பேர் கைது
சென்னை: தொழில்போட்டி காரணமாக பிஜி தீவில் 2 தமிழர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். இவரது கொலைக்கு காரணமான தமிழர் உள்பட இந்தியர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (36 ) . இவர் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள வீனஸ் காலனியில் வசித்து வந்தார். இவரும் முகப்பேரில் வசித்து வந்த ராஜமாணிக்கமும் இணைந்து பிஜி தீவில் ஏற்றுமதி தொழில் செய்து வந்தனர். அங்குள்ள நபூவா என்னும் பகுதியில் புளு வேவ்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து தொழில் நடத்தினர். இங்கு தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்டு பிஜி தீவில் நிரந்தர குடியுரிமை பெற்ற ரவி என்பவர் மானேஜராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் வழக்கமாக சென்னையில் உள்ள குடும்பத்தினருடன் அவ்வப்போது தொடர்பு கொள்ளும் இருவரும் திடீரென அதாவது கடந்த டிசம்பர் மாதம் 14 ம் தேதி முதல் தொடர்பு கொள்ளவில்லை. இதனால் ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் மத்திய அமைச்சர்கள் ஜி.கே., வாசன், மு.க., அழகிரி, எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோரிடம் முறையிட்டனர். இதனையடுத்து அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விசாரிக்குமாறு உத்தரவிட்டனர்.
சூட்கேசுக்குள் அடைக்கப்பட்ட பிணங்கள் : ராமகிருஷ்ணன் தம்பி லட்சுமி நாராயணன் பிஜி தீவுக்கு சென்று அங்குள்ள தூதரக அதிகாரிகளின் உதவியுடன் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து விசாரித்த போலீசார் காணாமல் போன இருவரையும் தேடினர். இருவரும் இவரது வீட்டு அருகே உள்ள விவசாய நிலத்தில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடல்கள் வெட்டப்பட்டு சூட்கேசில் அடைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து விசாரித்த போலீசார் மானேஜர் ரவி மற்றும் கூட்டாளிகள் இணைந்து கொலை செயதிருக்கலாம் என்ற கோணத்தில் இவருடன் நசீம், பிரகாஷ் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் மாத்யூஸ், முனா, அஜய் ஆகிய 3 பேரை தேடிவருகின்றனர். பணம் கேட்டு மிரட்டி தராத பட்சத்தில் இவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட இருவரது உடல்களும் அழுகிய நிலையில் இருப்பதால் அங்கேயே அடக்கம் செய்து சென்னைக்கு சாம்பல் கொண்டு வர முடிவு செய்துள்ளனர் இவரது குடும்பத்தினர்.
0 Response to "பிஜி தீவில் 2 தமிழர்கள் கொலை ; தமிழர் உள்பட 3 பேர் கைது"
แสดงความคิดเห็น