jkr

புலிகளின் வங்கிக் கணக்குகளை வெளியிட்டவர் கெஹெலியவே : அநுரகுமார


சர்வதேச ரீதியாக விடுதலைப் புலிகளுக்குள்ள சொத்து விபரங்களை கே.பி. தெரிவித்ததாக அரசாங்கமே தகவல்களை வெளியிட்டுள்ளது. எனவே, அச் சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்பதையும் வெளியிட வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும் என்று ஜே. வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் ஜெனரல் பொன்சேகாவின் பேச்சாளருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

புலிகளின் சர்வதேச முக்கியஸ்தர் கே.பி. க்கு சிறப்புரிமைகளை வழங்கி ஏன் அரசாங்கம் பாதுகாக்கின்றது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, கே.பி. வெளியிட்டதாக கூறி ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானவை என தேசிய புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்தர் தெரிவித்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அநுரகுமார திசாநாயக்க எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாமல் ராஜபக்ஷ புலிகளின் சர்வதேச உளவுப் பிரிவின் முக்கியஸ்தர் எமில் காந்தனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது தவறில்லை என்ற அரசின் மனப்பாங்கு கே.பி.யின் விடயம் தொடர்பில் தேசிய புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்தர் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்துவதிலும் தவறில்லை என்ற போக்கை அரசு கொண்டிருக்கலாம்.

இதுவல்ல முக்கியம். சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளுக்கு 600 வங்கிக் கணக்குகள் இருப்பதாகவும் 14 கப்பல்கள் இருப்பதாகவும் கே.பி. தெரிவித்ததாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இவ்வாறான தகவல்களை நாம் வழங்கவில்லை. எனவே, மக்களுக்கு உண்மையை தெரிந்துகொள்ளும் உரிமை உண்டு. அதற்காகவே கேள்விகளை தொடுக்கின்றோம்.

600 வங்கிக் கணக்குகளுக்கு 14 கப்பல்களுக்கு என்ன நடந்தது? கே.பி. எங்கே? அவருக்கு சிறப்புரிமைகளை வழங்கி அரசாங்கம் பாதுகாக்கின்றது. இது ஏன்? எதற்காக?

புலிகளின் சொத்துக்களை எழுதி வாங்கிக் கொள்வதற்காகவா? வங்கியில் ஒப்படைக்கப்பட்ட புலிகளின் தங்கத்திற்கு என்ன நடந்தது? இக் கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்.

நாமல் புகைப்பட விவகாரம்

நான் கிராமத்தில் பிறந்தவன். எனவே, எவராவது என்னுடன் புகைப்படம் எடுக்க விரும்பினால் தடை போட மாட்டேன் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் இந்நாட்டு ஜனாதிபதியின் மூத்த மகன். இளைஞர்களுக்கான நாளை, நீலப் படையணி போன்றவற்றில் பதவி வகிப்பவர்.

இவ்வாறான ஒருவர், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விடுதலைப் புலிகளின் சர்வதேச உளவுப் பிரிவின் தலைவர்களுடன் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட எமில் காந்தனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதானது பாரதூரமான செயலாகும்.

எனவே, நாமல் ராஜபக்ஷ, எமில் காந்தனை ஏன் சந்தித்தார். இருவருக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் என்ன? இதற்கான அனுமதியை யார் வழங்கினார்கள்? என்ற விபரங்களை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.

எமது படையினர் உயிர்களை தியாகம் செய்து, அங்கவீனர்களாகி பிரிவினைவாத பயங்கரவாதத்தை ஒழித்தனர். அதனை காட்டிக்கொடுக்கும் விதத்தில் எமில் காந்தனை சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது என்றார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "புலிகளின் வங்கிக் கணக்குகளை வெளியிட்டவர் கெஹெலியவே : அநுரகுமார"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates