jkr

ஏ9 வீதியூடாக அனுமதி எதுவுமின்றி 24 மணிநேர பயணம் புனர்வாழ்வு பெற்ற முதல் ஆயிரம் புலி உறுப்பினர்கள் விடுதலை உயர் பாதுகாப்பு வலயத்தில் மீள்குடியேற்றம். - பசில் ராஜபக்ச அறிவிப்பு.

சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் ஈபிடிபி செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்குத் தொடர்ச்சியாக விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் ஏ-9 வீதியூடாகப் பொதுமக்கள் சுதந்திரமான போக்குவரத்தை மேற்கொள்ள முடியும்.

இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்றையதினம் மாலை வேலணை மத்திய கல்லூரியில் இடம்பெற்ற பிரமாண்டமான கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ். தீவக மக்கள் மற்றும் தீவக கடற்றொழிலாளர்கள் பங்குகொண்ட மேற்படி கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய பசில் ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளும் அதன் தொடர்ச்சியாக தன்னுடனும் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் போது பல்வேறு அனுமதிகளும் இணக்கப்பாடுகளும் பெறப்பட்டுள்ளன. அந்த வகையில் இன்று (06.01.2010) நள்ளிரவு முதல் யாழ்ப்பாணத்திற்கும் தென்பகுதிக்குமான ஏ-9 பாதை முற்று முழுதாக மக்கள் பாவனைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அவர்களோடு காணப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் 24 மணி நேரமும் மக்கள் தாம் விரும்பிய வகையில் பயணம் செய்ய முடியும். பாதுகாப்பு அனுமதி மற்றும் பாதுகாப்பு வாகனத் தொடரணி ஆகியவை இனி ஏ-9 பாதையில் போக்குவரத்தில் ஈடுபடும் மக்களுக்கு தேவையற்றதாகின்றது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

மேலும் வலிகாமம் வடக்கு பகுதியில் இதுவரை அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த பகுதிகளில் அங்கு வாழ்ந்த மக்களை மீளக் குடியமர்த்தும் கோரிக்கைகள் ஜனாதிபதி அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று 509 குடும்பங்களைச் சேர்ந்த 1862 பேர் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் உதவிப் பணம் வழங்கப்படவுள்ளதோடு முதற்கட்டமாக இன்று 5 ஆயிரம் ரூபா ரொக்கப்பணம் வழங்கப்பட்டுள்ளது இதே வேளை அந்த மக்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதைத் தொடர்ந்து அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக இருக்கும் பலாலி வலிகாமம் வடக்கு வடமராட்சி கிழக்கு அரியாலை தென்மராட்சி கொழும்புத்துறை ஆகிய பகுதிகளிலும் 75 வீதமான பகுதிகளில் இடம்பெயர்ந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மீளக்குடியேறுவதற்கு அனுமதிக்கப்படவுள்ளனர். அதைவிடவும் யுத்த காலத்தில் சரணடைந்தவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்வது தொடர்பாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சரணடைந்த ஆயிரம் இளைஞர் யுவதிகள் எதிர்வரும் 9ம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளனர். ஏனையவர்கள் விரைவாக கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்படுவார்கள். தமிழ் அரசியல் கைதிகளின் விடயமும் கவனத்தில் கொள்ளப்பட்டு அவர்களும் விரைவாக விடுதலை செய்யப்படவுள்ளனர்.

காணாமற்போனவர்கள் தொடர்பில் விரைவான விசாரணைகளை மேற்கொள்ளவும் உறவினர்களுக்கு நியாயங்களை கிடைக்கச் செய்யவும் விசாரணை கமிசன் அமைக்கப்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு ஜனாதிபதி அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார். இவை தவிரவும் வடக்கு கடற்பிராந்தியத்தில் கடற்றொழில் மேற்கொள்வோர் இதுவரையில் முகங்கொடுத்த நெருக்கடிகள் முற்றாகத் தளர்த்பட்டுள்ளன. அந்த வகையில் 24 மணிநேரமும் எந்த பகுதியிலும் கடற்றொழிலாளர்கள் தமது தொழிலை மேற்கொள்ள முடியும். இவ்வாறு பசில் ராஜபக்ச அவர்கள் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கரகோசம் எழுப்பியதுடன் ஜனாதிபதி வாழ்க. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வாழ்க. பசில் ராஜபக்ச வாழ்க என விண்ணதிர கோசமிட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாம் செய்வதையே சொல்லுவோம் சொன்னதையே செய்வோம். கடந்தகால தமிழ் தலைமைகள் கிடைத்த பல்வேறு சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்த தவறிவிட்டன. தற்போது மீண்டுமொரு சந்தர்ப்பம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் ஊடாக தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை மக்கள் அனைவரும் சரியாகப் பயன்டுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட தீவக விளையாட்டுக் கழகங்களுக்கு ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் கடற்றொழில் சங்கங்களுக்கு கடல் தொழில் உபகரணங்களும் வழங்கப்பட்டன. அத்துடன் தீவக கடல் தொழிலாளர் சம்மேளனத்தின் மேம்பாட்டிற்கென 20 மில்லியன் ரூபா நிதி மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





















  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஏ9 வீதியூடாக அனுமதி எதுவுமின்றி 24 மணிநேர பயணம் புனர்வாழ்வு பெற்ற முதல் ஆயிரம் புலி உறுப்பினர்கள் விடுதலை உயர் பாதுகாப்பு வலயத்தில் மீள்குடியேற்றம். - பசில் ராஜபக்ச அறிவிப்பு."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates