இந்தோனேசியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள், பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர்
முழுமையாக மூன்று மாதங்களை எட்ட இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் இந்தோனேசியா, மெராக் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் அனுபவித்து வருகின்ற துன்பங்கள் வர்ணிக்கப்படமுடியாதவை.
குழந்தைகள், பெண்கள் உள்ளடங்கலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் அனைவரினதும் மருத்துவ தேவைகளையோ அல்லது அடிப்படை வசதிகளையோ பூர்த்தி செய்து
தரமுடியாது என்ற நிலையில் ஐ.ஓ.எம் நிறுவனம் செயற்பட்டு வருகின்றமை மனவருத்தத்திற்குரியது.
கப்பலில் உள்ள அதிகமானவர்கள் சொறி, சிரங்கு மற்றும் போசக்கு குறைபாடு போன்றவற்றால் மிகக்கடுமையான தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கின்றார்கள். இவர்களுக்கான மருத்துவ தேவைகள் கோரப்பட்டும் ஐ.ஓ.எம் நிறுவன அதிகாரிகளினால் புறக்கணிக்கப்பட்டு வருவது தொடர்கின்றது.
நோயாளிகளை வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லாமல் துறைமுகச் சோதனை சாவடியில் வைத்து இரத்த பரிசோதனை செய்ய வற்புறுத்தப்படுகிறார்கள். அம்பியுலன்ஸ் வண்டிக்கு மாற்றாக சாதரண வாடகை வண்டியே அனுப்பப்படுகின்றமையும் ஏற்றுக் கொள்ள கூடியதாக இல்லை.
எந்த நோயாளியாக இருந்தாலும் 750 மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்றே மருத்துவ தேவையை தெரிவிக்க வேண்டிய நிலையும் காணப்படுகின்றது. மருத்துவ உதவியை பெற முற்பதிவு செய்யவேண்டும் என்று எண்ணிலடங்காத விதிமுறைகள். இப்படியாக கப்பலில் உள்ளவர்கள் ஓர் குற்றவாளிகளைப்போன்றே நடத்தப்படுவதாகவே உணர்கின்றோம்.
உலக நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை என்பனவும் எங்கள் மீது தங்கள் கருணைப் பார்வையினை இன்னமும் ஏன் செலுத்தவில்லை என்ற ஆதங்கமும் ஏற்பட்டிருக்கின்றது.
இலங்கையில் எங்கள் வாழ்வியல் மறுதலிக்கப்பட்ட நிலையிலேயே இப்படியான அகதி தஞ்சம் கோரி புறப்பட்டோம் என்ற உண்மையினை உலக நாடுகள் உள்ளடங்கலாக ஐக்கிய நாடுகள் சபை உணர்ந்து ஏற்றுக்கொண்டு எங்களையும் மனிதர்களாக நடத்த வேண்டும் என்று மன்றாடி கேட்டுக் கொள்கின்றோம்.
0 Response to "இந்தோனேசியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள், பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர்"
แสดงความคิดเห็น