செய்தியரங்கம்
பிரச்சாரத்தில் சரத் பொன்சேகா |
காத்தான்குடியில் பொன்சேகா பிரச்சாரம்
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எதிர் கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கை சிங்களவர்களுக்கு மாத்திரம் சொந்தமானது என எந்தவொரு வெளி நாட்டு ஊடகத்திற்கும் தான் கருத்து தெரிவிக்கவில்லை என பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு காத்தான்குடியில் செவ்வாய் மாலை நடை பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ள அவர், தனது கருத்து அந்த ஊடகத்தில் திரிபு படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
இந் நாட்டில் வாழும் சகல இனங்களுக்கும் இந் நாடு சொந்தமானது என்பதை திட்டவட்டமாக கூறுகிறேன் என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந் நாட்டில் வாழும் சகல இன மக்களும் சமாதானமாகவும், சமத்துவமாகவும் வாழ வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் தெரிவித்தார்.
1990 ம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை, குருக்கள் மடத்தில் ஹஜ் யாத்திரிகர்கள் படுகொலை போன்ற சம்பவங்களையும் தனது உரையில் நினைவு படுத்திய ஜெனரல் சரத் பொன்சேகா, அது குறித்து தனது கண்டனத்தையும் வெளிப்படுத்தினார்
இத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் எதிர் கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்க, ஐனநாயக மக்கள் முன்னனியின் தலைவர் மனோ கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தியா வங்கதேசம் இடையே நதிநீர் தொடர்பான பிரச்சனை நீடிப்பு
வங்கேதேசத்தில் ஒடும் ஒரு ஆறு |
இந்தியாவுக்கும், வங்கதேசத்துக்கும் இடையே ஓடுகின்ற ஆறுகளின் கரைகளை பலப்படுத்துவதற்கான பணிகளை பிப்ரவரி மாத முற்பகுதியில் ஆரம்பிப்பதற்கு இந்தியாவும் வங்கதேசமும் உடன்பட்டுள்ளன.
வங்கதேச தலைநகர் டாக்காவில் இணைந்த நதிகளின் ஆணைக்குழுவின் இரு நாள் கூட்டத்தை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இருந்த போதிலும், வங்கதேசத்தின் வட பகுதியில் உள்ள நீர்ப்பாசன திட்டத்துக்கு நீர் வழங்குவதற்கான டீஸ்டாவில் இருந்து நீரைப் பெறுவது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த விவகாரம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவின் இந்திய விஜயத்துக்கு ஒரு வாரம் முன்னதாக இந்த சந்திப்பு நடந்துள்ளது.
இந்தியாவும், வங்கதேசமும் ஐம்பதுக்கும் அதிகமான ஆறுகளைப் பகிர்ந்துகொள்கின்றன. ஆனால், கங்கை நதியின் நீரைப் பகிர்வது தொடர்பில் மாத்திரமே இருதரப்பும் இதுவரை உடன்பட்டுள்ளன.
இரு தரப்பு உறவில் நதிகளின் நீரைப் பகிர்வது ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்து வருகிறது.
தெலங்கானா விவகாரத்தில் முன்னேற்றமில்லை
தெலங்கானா விவகாரத்தில் இரு தரப்பினரும் வன்முறை போராட்டங்களில் இறங்கியுள்ளனர் |
ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தெலங்கானா தனி மாநிலம் உருவாக்குவது தொடர்பாக இன்று டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமித்த முடிவு ஏற்படவில்லை. இதுதொடர்பாக மேலும் ஆலோசனைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஆர்எஸ் எனப்படும் தெலங்கானா ராஷ்டிர சமிதி மற்றும் பாரதீய ஜனதா ஆகிய இரு கட்சிகள் மட்டும், தெலங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாகத் துவக்க வேண்டும் என்று வலியுறுத்தின. பிரஜா ராஜ்யம் கட்சியின் தலைவரான நடிகர் சிரஞ்சீவி, ஆந்திர மாநிலத்தைப் பிரிப்பதை தங்கள் கட்சி எதிர்ப்பதாகத் தெரிவித்தார்.
தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் துவக்கப்படும் என கடந்த மாதத் துவக்கத்தில் மத்திய அரசு அறிவித்தை அடுத்து, ஆந்திராவின் மற்ற பிராந்தியங்களில் வன்முறை ஏற்பட்டது. காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் பதவிகளை ராஜிநாமா செய்வதாக அறிவித்தனர்.
இதையடுத்து, மத்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தளர்த்திக் கொண்டது. இந்தப் பிரச்சினையில் ஒருமித்த கருத்தை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது. அதன் முதல் கட்டமாக, இன்று டெல்லியில் எட்டு கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூட்டியிருந்தார்.
காங்கிரஸ், பாஜக, தெலுங்கு தேசம், டிஆர்எஸ், பிரஜா ராஜ்யம், எம்ஐஎம், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் இறுதியில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அதை ஒப்புக்கொண்டார்.
மேலும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுமா, அரசியல் கட்சிகள் அல்லாத மற்ற அமைப்புக்களுடனும் ஆலோசனை நடத்தப்படுமா என்று சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ``மற்ற குழுக்களுடனும், இதில் சம்பந்தப்பட்டவர்களுடனும் ஆலோசனை நடத்துவதற்கு தீவிரமாக யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அப்படிப்பட்ட ஆலோசனை அவசியம் என்று கருதினால், அதை ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிக்க வேண்டும் என்றுதான் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்’’ என்றார்.
முன்னதாக அந்தக் கூட்டத்தில் துவக்க உரையாற்றிய சிதம்பரம், இந்தப் பிரச்சினையில் அரசியல் கட்சிகள் சுமுக உடன்பாட்டை எட்டாவிட்டால், மாவோயிஸ்டுகள் அதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எச்சரித்தார்.
இதனிடையே, அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நார்த் பிளாக் கட்டிடத்துக்கு எதிரே, தெலங்கானாவுக்கு ஆதரவு தெரிவிப்போரும், மாநிலத்தைப் பிரிப்பதை எதிர்ப்பவர்களும் தனித்தனியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
0 Response to "செய்தியரங்கம்"
แสดงความคิดเห็น