முன் கதவால் பொன்சேகா! பின் கதவால் மகிந்தா! : தமிழர்களிடம் பிச்சை.....!!
இலங்கையின் தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் யுத்தகாலத்தில் செய்யப்பட்ட யுத்தக் குற்றங்கள் மற்றும் ஊழல்கள் என்று எதுகைமோனையுடன் சொல்லி வாக்குப் பிச்சை எடுக்கின்றனர் அரசாங்கமும் எதிர்கட்சியும். வாக்குறுதிகள் அள்ளிவீசப்படுகின்றன. ஆனால் எந்த வாக்குறுதிகளுக்கும் உத்தரவாதமில்லை.
இந்த நிலையில் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் தமிழ்,முஸ்லிம், மற்றும் மூன்றாம் தரப்பு சிங்களக் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு இரண்டு பிரதான கட்சிகளுக்கும் ஆதரவு கொடுக்கின்றன. இடதுசாரிகள்,சுயேட்ச்சை வேட்பாளர் என்று இன்னுமொரு பகுதியில் சிலர். இவ்வாறு இலங்கையின் தேர்தல் உற்சவத்துக்கு தயார் நிலையில் இருக்கின்றது. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே மீதம் இருக்கின்றது. தேர்தலின் பிரச்சாரங்கள் பிரமாண்டமாகவும் மிகுந்த பொருட்செலவுகளிலும் ஆடம்பரமாக செய்யப்படுகின்றது. உடுதுணிக்கும் உண்ணச் சரியான உணவுக்கும் உறங்குவதற்க்கு இடமில்லாமல் அலையும் தமிழர்களின் வாக்குக்களை குறிவைத்து வண்ண வண்ண கலர்களில் கனவுகதைகள் சொல்லப்படுகின்றன.
ஆனால் இந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? இன்றைய ஜனாதிபதி மகிந்தாவா? இல்லை இலங்கையின் முன்னாள் படைத்தளபதியும் மகிந்தாவின் உற்ற நண்பனுமான சரத் பொன்சேகாவா? மிகுந்த இறுக்கமான போட்டி நிலவுகின்றது. கருத்துக் கணிப்புக்கள் எல்லாம் இன்று இருப்பதுபோல் நாளையிருப்பதில்லை என்று எல்லாம் நாளுக்கு ஒரு கருத்தாக இருக்கின்றது. இன்று மகிந்தா என்றால் நாளை பொன்சேகா என்று எதையும் கணிக்கமுடியாதபடி இலங்கையின் அரசியல் குதிரை கட்டுக்கடங்காமல் ஓடிக்கொண்டுருக்கின்றது. மகிந்தா நான் பிடிப்பேன் என்றும் பொன்சேகா நான் பிடிப்பேன் என்றும் அந்த அரசியல் குதிரையை விரட்டிப்பிடிக்க முயற்ச்சிக்கின்றனர். இதில் குறிப்பிட்ட சில சிறிய அரசியல் கட்சிகள் மகிந்தாவுக்கும் சில அரசியல் கட்சிகள் பொன்சேகாவுக்கும் அரசியல் குதிரைபிடிக்க உதவிபண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
ஒன்றுமட்டும் நிச்சயம். வெற்றி தோல்வியை தீர்மானிக்கப்போவது தமிழர்கள் என்பது உண்மைதான். ஆனால் தமிழர்களின் மனநிலை எவ்வாறு இருக்கின்றது? தமிழ் தேசியக் கூட்டமைப்பு சொல்வதின்படி அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதா இல்லை மாற்று அணிகள் அதாவது டக்ளஸ், கருணா, பிள்ளையான் ஆகியோரின் இசைவுக்குச் செல்வதா?இல்லை மூன்றாம் தரப்பு அணிகள் சொல்வதற்கு செவிசாய்ப்பதா? மூன்றாம் தரப்பு அணிகள் என்று குறிப்பிடப்பட்டவர்கள் இடதுசாரிகள் மற்றும் சிவாஜிலிங்கம் போன்றோர் குறிப்பிடப்படுகின்றனர்.
அல்லது இந்த தேர்தலை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதா? இவ்வாறு தமிழர்களுக்கு பல தெரிவுகள் இருக்கின்றன. இன்நிலையில் இலங்கையின் அரசியல் கட்சிகளும். மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகத்துறைகளும் தமிழர்களின் தீர்மானம் என்னவாக இருக்கப்போகின்றது என்று நாடிபிடித்து அறிய துடிப்பது யாவரும் அறிந்தவிடயம். ஆனால் தமிழர்களின் சிந்தனை ஓட்டம் என்னவென்று புரியாமல் அரசியலும் ஊடகங்களும் புரியாமல் விழிப்பது மட்டும் உண்மை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சொல்வதை தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்களா? இல்லை அதை நிராகரிப்பார்களா? அதை கூட்டமைப்பால் மட்டுமில்லை எவராலும் சொல்லமுடியாத ஒரு இக்கட்டான நிலைகாணப்படுவதை யாவரும் உணர்ந்துள்ளனர். ஆனால் எந்த நிலைவரும்போதும் தமிழ் தேசியத்தை விட்டுக்கொடுப்பதற்கு தமிழர்கள் தயராக இல்லை என்பது புலம்பெயர் தேசங்களிலும் சரி தாயகத்தில் வார்த்தைகளுக்குள் அடக்கமுடியாத துன்பத்துக்குள் இருக்கும் தமிழர்களும் சரி தயாராக இல்லை. அதற்கு அண்மையில் நடந்த யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை தேர்தல்களின் முடிவுகள் சொன்ன சங்கதிதான் அது.
வவுனியா நகரசபை புளொட் அமைப்பின் கோட்டை தொண்ணுறுக்கு பிந்தியகாலங்களில் இருந்து வவுனியா நகரமும் நகரசபையும் புளொட் அமைப்பின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து வருவது யாவரும் அறிந்த ஒரு நிதர்சனம். ஆனால் அந்த கோட்டைக்கு கூட்டமைப்பு எந்த ஒரு கடின முயற்சியும் செய்யாமல் மிக மிக இலகுவாக முடிசூடிக்கொண்டது. இது பல்வேறு தரப்பினரையும் வாய்பிளக்க வைத்தது. காரணம் வவுனியா நகரசபை தேர்தல் இடம்பெற்ற காலத்தில் தமிழ் மக்கள் மிகுந்த இழப்புக்களை சந்தித்து வேதனையில் இருந்த ஒரு காலம். அதைவிட மிகுந்த அடக்குமுறைக்குள் மக்கள் இருந்த நேரம் இந்த நேரத்தில் கூட்டமைப்புக்கு வாக்களிக்க தமிழர்கள் துணியமாட்டார்கள் என்று மகிந்தாவின் அரசும் மாற்று தமிழ் கட்சிகளும் எண்ணியிருந்தனர். ஆனால் இவர்களின் கணக்கு கூட்டல் எல்லாம் பொய்யாகிப் போனது. இது எப்படி சாத்தியமானது?
வவுனியாவில் புளொட் அமைப்பின் இரண்டு பிரதான கோட்டைகள் உண்டு ஒன்று கோவில்குளம் பகுதி மற்றது திருநாவற்குளம் பிரதேசம். இந்த இரண்டு பகுதிகளிலும் இருந்தும் நகரசபை தேர்தல் அன்று மக்கள் எவரும் வீடுகளை விட்டு வெளியேற விடாது இலங்கையின் இராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். அதற்கு காரணம் என்ன? அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்ட டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமையவே கோவில்குளம் மற்றும் திருநாவற்குளம் மக்கள் வாக்களிக்க முடியாதபடி தடுத்து நிறுத்தப்பட்டனர். மற்றைய பகுதிகள் எல்லாம் விடுதலைப்புலிக்கு ஆதரவான பகுதிகள் என்று யாவரும் அறிந்த உண்மை. அப்போதிருந்த நிலையில் தமிழ்த் தேசிய கூட்டணியை தமிழர்கள் ஆதரிக்கமாட்டார்கள் என்று மகிந்தாவும், டக்ளஸ்சும் முடிவு பண்ணியிருந்தனர். ஆக அந்த வாக்குக்கள் மூலமாக நகரசபையை வெற்றி கொள்ள மகிந்தாவும் டக்ளஸ்சும் கனவில் இருந்து கணக்கு கூட்டியிருந்தனர். ஆனால் தமிழ்மக்கள் நாங்கள் தமிழர்கள் என்று குட்டி புரிய வைத்தனர். அதன் விளைவுதான் ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்புக்கு இரண்டு பிரதான கட்சிகளும் வலைவீசியது. இந்த வலை வீச்சில் மகிந்த தோற்றுப்போக பொன்சேகா கூட்டமைப்பு என்ற வெற்றிக்கனியை பறிந்துக்கொண்டார். ஆனால் தேர்தல் முடிவுகளே சொல்லும் தமிழர்களின் வாக்கு கனிகளை பறித்த வெற்றியாளர் யார் என்று.
யாழ் மாநகரசபை வவுனியா நகரசபை ஆகியவற்றின் தேர்தல் முடிவுகளை கணக்கு கூட்டியே புளொட் தலைவர் சித்தார்த்தன் விடுதலைப்புலிகளின் செல்வாக்கு இன்னும் தமிழர்களிடையே இருக்கின்றது என்று புலம்புகின்றாரோ என்று சிலர் வவுனியாவுக்குள் பேசுவதாய் ஒரு பேச்சு. இப்போது இலங்கையில் எல்லாருக்கும் தேர்தல் காய்ச்சல் மகிந்தா வருவாரா இல்லை பொன்சேகா வருவாரா என்று ஆனால் தமிழர்கள் யுத்ததில் உறவுகளை பலிகொடுத்து சிறைக்குள் உறவுகளை பரிதவிக்கவிட்டு காணாமல் போனவர்கள் வருவர்களா என்ற ஏக்கத்திலும் உண்ண சரியான உணவு இல்லாமலும் படுக்க பாய் இல்லாமல் உரப்பைகளிலும் வீடு வாசல் எல்லாம் அழிந்து கொட்டில்களிலும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர், இதை வியாபாரமாக்கி சிலர் வயிறு கழுவிக்கொள்வது வெட்கமாக இருக்கின்றது. இப்படி சொல்ல முடியாத துயரங்களுக்குள் அகப்பட்டு இருக்கும் தமிழர்களின் கண்ணீரை மகிந்தா வந்தாலும் சரி பொன்சேகா வந்தாலும் சரி தீர்க்கப்போவதில்லை காரணம் அதற்கும் தமிழன் என்று சொல்வது வெட்கக்கேடானாலும் சொல்லவேண்டிய நிலையில் இருக்கின்றோம்.
ஒரு பறவைக்கு அல்லது மிருகத்துக்கு உணவு கொடுக்காமல் சித்திரவதை செய்தால் அதற்கு இந்த உலகத்தில் குற்றவியல் சட்டம் உண்டு கேள்வி கணக்கு உண்டு. உலகத்தில் எங்கு மனிதனுக்கு ஒரு சின்ன கொசுக்கடித்தாலும் கொடி பிடிக்கவும் அதை விசாரிக்கவும் கேட்கவும் அமைப்புக்கள் ஜ, நா என்று பலர் கிழம்பிவருவார்கள். ஆனால் தமிழர்கள் நாங்கள் கொல்லப்பட்டால் மாத்திரம் எவரும் கண்டுகொள்வதில்லை காரணம் இங்கே எதுவும் நடக்கவில்லை. நாங்கள் மிக மிக அருமையாக இருக்கின்றோம் என்று சொல்ல சிங்களத்துடன் கூட சுற்றும் தமிழ் ஒட்டுண்ணிகள் வாசல் வரை வந்தவனை திருப்பி அனுப்பிவைக்கும் இதனாலோ என்னவோ எங்கள் அவலங்கள் ஒரு போதும் மறைவதாயுமில்லை. இல்லை இந்த அவலத்தின் குரல்கள் சர்வதேசத்தின் கதவுகளை திறப்பதாயுமில்லை.
இந்த தேர்தலில் மகிந்தா ஆட்சிக்கு வந்தாலும் சரி பொன்சேகா ஆட்சிக்கு வந்தாலும் சரி அது தமிழர்களின் தயவில்தான் ஆக தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுமா? இல்லை அடுத்த தேர்தல் வரையில் கவனிக்கப்படாத இனமாக தமிழர்கள் கைவிடப்படுவர்களா?
0 Response to "முன் கதவால் பொன்சேகா! பின் கதவால் மகிந்தா! : தமிழர்களிடம் பிச்சை.....!!"
แสดงความคิดเห็น