செய்தியறிக்கை
ஹைடி பூகம்பம்: பெரும் சேதம், ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது
ஹைடி அதிபர் மாளிகை - பூகம்பத்துக்கு முன்னும் பின்னும் |
ஹைடியை செவ்வாயன்று தாக்கிய பெரும் பூகம்பம் மோசமான அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமானோர் இதில் கொல்லப்பட்டுள்ளதாகக் அஞ்சப்படுகிறது.
வீதிகளில் உடல்கள் இறைந்து கிடப்பதையும், கட்டிடங்கள் கூளங்களாகி நொறுங்கிக் கிடப்பதையும் ஹைடி தலைநகர் போர்த்-ஓ-பிரன்ஸிலிருந்து வரும் தொலைக்காட்சிப் படங்கள் காட்டுகின்றன.
கட்டிட இடிபாடுகளிலிருந்து மக்கள் உதவி கேட்டு குரல் எழுப்புவதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். ஆனால் சிக்கியுள்ளவர்களை மீட்க பெரிய அளவிலான பணி ஏதும் நடந்துவருவதற்கான அறிகுறி எதனையும் அவர்கள் கண்டிருக்கவில்லை.
ஐம்பதாயிரம் ஜனத்தொகை கொண்ட ஹைடியின் ஜக்மெல் என்ற ஊரிலும் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஜக்மெல் நகரத்தில் ஐந்தில் ஒரு பங்கு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக அங்குள்ள ஐ.நா. குழந்தைகள் நிதியமான யூனிசெஃப்பின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
ஐ.நா. அமைதிப் படையினர் உயிரிழப்பு
போர்த்-ஓ-பிரன்ஸ் நகரில் உள்ள அதன் தலைமையகம் முற்றாக இடிந்து போய்விட்டது. அங்கு பணியாற்றிய தலைமை அதிகாரியான ஹேடி அன்னாபியும், அவரோடு உடன் பணியாற்றிய பலரும் என்ன ஆனார்கள் என்பது குறித்து தெரியவில்லை.
பிரேசிலும், ஜோர்டானும் அங்கு பணியில் இருந்து தமது நாட்டு படையினர் உயிர் இழந்ததாக தெரிவித்துள்ளன. தமது நாட்டை சேர்ந்தவர்கள் பலர் கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளதாக சீனா கூறியுள்ளது.
பாக்தாத்தில் தனது கட்டிடத்தில் 2003 ஆம் ஆண்டில் நடந்த குண்டு வெடிப்புக்குப் பிறகு இதுதான் ஐ.நா. சந்திக்கும் பெரிய சவால் என்று ஐ.நா. அதிகாரி ஒருவர் நியூயார்க் நகரில் தெரிவித்துள்ளார்.
மீட்பு நடவடிக்கைகள்
பெரும் சிரமங்களுக்கு இடையில் மீட்புப் பணிகள் நடக்கின்றன |
ஹைடியில் பெரிய மீட்பு மற்றும் உதவி நடவடிக்கை ஒன்று தொடங்கப்பட்டுவருகிறது. ஹைட்டியின் தொலைதொடர்பு இணைப்புகளை மீண்டும் நிலைநாட்டவும், சாலைகளில் ஏற்பட்ட தடைகளை நீக்கவும் முயற்சிகள் தொடர்கின்றன.
தலைகர் போர்த்-ஓ-பிரன்ஸ் நகரில் இருக்கும் விமானநிலையம் இப்போது முழுமையாக இயங்கும் நிலைக்கு வந்துவிட்டதாக ஐ.நா கூறியது.
மூவாயிரம் ஐ.நா மன்றப் படைகள் போர்த்-ஓ-பிரன்ஸ் நகரில் விமானநிலையத்தையும் துறைமுகத்தையும் பாதுகாத்துக் கொண்டிருப்பதுடன், வீதிகளிலும் ரோந்து சுற்றி வருவதாகவும் ஐ.நா.மன்ற அமைதிகாக்கும் அதிகாரி ஆலன் லெ ராய் கூறினார்.
சர்வதேச உதவி நிறுவனங்கள் நிதி உதவி கோரியுள்ளன. பன்னாட்டு நாணய நிதியம் தான் உதவ தயாராக உள்ளதாகக் கூறியிருக்கிறது.
போப்பாண்டவர் பெனடிக்ட் அவர்களும் இந்த துயர சூழ்நிலையில் அனைவரும் தாராளாமாக உதவக் கோரியுள்ளார்.
பிற நிறுவனங்களும் பல நாடுகளும் தேடி மீட்கும் குழுக்களையும், உயிர் பிழைத்திருப்போருக்கு உதவத் தேவையான பொருட்களையும் அனுப்ப தயாராகிக்கொண்டிருக்கின்றன.
ஆப்கானிஸ்தான் யுத்தத்தில் 2009ஆம் ஆண்டே மிக அதிக உயிரிழப்பு: ஐ.நா. அறிக்கை
ஆப்கன் யுத்தத்தில் பொதுமக்களுக்கே அதிக பாதிப்பு |
கடந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக 2400 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், இதில் பெரும்பான்மையானவர்கள் தாக்குதல்களில் கொல்லப்பட்ட தாலிபான்கள் என்றும் ஐ.நா. அறிக்கை கூறுகிறது.
அமெரிக்கா தலைமையிலான நோட்டோ நேசப்படையினரால் ஏற்படும் இழப்புகள் முன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது. இருந்தும் 2009ஆம் ஆண்டு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2008ஆம் ஆண்டு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட 14 சதவீதம் உயர்ந்துள்ளது.
சீனாவுக்கான இணைய தணிக்கை நிறுத்தப்படுகிறது: கூகுள்
சீனாவில் இணைய பாவனையாளர்கள் மிக அதிகம் |
கூகுள் அளிக்கும் இணைய சேவையின் சில வசதிகளை பயன்படுத்தி சீன அரசு தனது அதிருப்தியாளர்களைப் பற்றி தகவல் பெற முயற்சி செய்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை என்று கூகுள் கூறியுள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து, பீஜிங்கில் உள்ள கூகுள் அலுவலகத்துக்கு சீன குடிமக்கள் குழு ஒன்று மலர் கொத்துக்களுடன் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளது. அதேநேரம் இது தொடர்பாக கடுமையான விமர்சனங்களும் வந்துள்ளன.
கூகுள் அவ நம்பிக்கையுடனும் முட்டாள்தனமாகவும் செயல்படுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இது தொடர்பாக கூகுளிடம் கூடுதல் விபரங்கள் கோரியுள்ளதாக சீன அரசு கூறியுள்ளது.
தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் சின்னம் |
இலங்கையில் தேர்தல் வன்முறை அதிகரிக்கிறது: கண்காணிப்பு அமைப்பு
இலங்கையில் இம்மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரங்களில் கவலையளிக்கக்கூடிய வன்முறை இடம்பெற்று வருவதாக தேர்தலை கண்காணிக்கும் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
தவிர அரசு இயந்திரம் முறைதவறி தேர்தல் பணிகளில் பயன்படுத்தப்படுவதாகவும் அந்த அமைப்புகள் கூறுகின்றன.
தேர்தல் கண்காணிப்பாளர்கள் இதனை அறிவித்துக்கொண்டிருக்கும்போதேகூட, வேட்பாளர்களின் ஆதரவாளர்களிடையே மத்திய இலங்கையில் மோதல்கள் நடந்துள்ளன.
எதிர்கட்சியின் பெண் ஆதரவாளர் ஒருவர் செவ்வாயன்று சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். தேர்தல் வன்முறைகள் என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கஃப்பே கூறுகிறது.
மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிராதான எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளரான சரத் ஃபொன்சேகா ஆகிய இருவர் தரப்பிலுமே அரச இயந்திரம் சட்டவிரோதமான வகையில் பயன்படுத்தப்படுகிறது என்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கூறுகின்றன.
பிபிசி செய்தியாளர் மீது தாக்குதல்
இலங்கையின் கிழக்கே பொலன்னறுவை நகரில் பணிபுரியும் பிபிசி சிங்கள சேவையின் பெண் செய்தியாளர் தக்ஷிலா தில்ருக்ஷி ஜெயசேனா, தேர்தல் பிரச்சாரக் மோதல் பற்றி செய்தி சேகரித்துக்கொண்டிருக்கும்போது ஆளுங்கட்சி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
இந்த சம்பவம் குறித்து செய்தியை சேகரித்துவிட்டு வெளியேறும் போது, ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் என்று கூறப்படுபவர்களால் தஷிலா தாக்கப்பட்டு, அவரது செய்தி சேகரிக்கும் கருவி மற்றும் அவர் அணிந்திருந்த நகைகள் பிடுங்கப்பட்டதாக செய்திகள் கூறின.
காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு போலிஸ் பிரிவு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக போலிஸ் வட்டாரங்கள் கூறின.
பத்திரிகையாளர் திசைநாயகம் பிணையில் வெளிவந்துள்ளார்
பிணையில் வெளிவந்துள்ள திசைநாயகம் |
நார்த் ஈஸ்டர்ன் மந்த்லி என்ற சஞ்சிகையின் ஆசிரியராக இருந்த இவர், ஐம்பதாயிரம் இலங்கை ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்று அவரது சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.
மேலும் அவரது கடவுச்சீட்டையும் நீதிமன்றத்தில் திசைநாயகம் ஒப்படைத்துள்ளார்.
பிணையில் வெளியே வந்தவுடன் செய்தியாளர்களிடம் பேசிய திசைநாயகம் தன்னை சிறையிலிருந்து மீட்கக் குரல்கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்திய ஹாக்கி வீரர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே ஊதியப் பிரச்சினையில் சுமூக முடிவு
சுரேஷ் கல்மாதி |
அதன்படி, ஹாக்கி அணி வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் தொகை விரைவில் பகிர்ந்தளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு வர வேண்டிய ஊதியம் மற்றும் சன்மானங்களை ஹாக்கி இந்தியா அமைப்பின் நிர்வாகம் வழங்க வேண்டும் என்று கோரி ஹாக்கி அணி வீரர்கள் கடந்த ஒரு வாரமாக பயிற்சியில் ஈடுபடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.
அடுத்த மாத இறுதியில் டெல்லியில் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் துவங்கும் நிலையில், இந்தப் பிரச்சினை இந்திய ஹாக்கி விளையாட்டுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது.
வீரர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள ஹாக்கி இந்தியா அமைப்பின் நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தி, தர அடிப்படையில் வீரர்களுக்கு ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பிரச்சினைகள் முடிவு செய்யப்படும் என்றும் சுரேஷ் கல்மாதி தெரிவித்துள்ளார்.
வீரர்கள் மேம்பாட்டுக்காக தனி நிதியம் ஏற்படுத்தப்படும் என்றும், இதற்கு பல்வேறு மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் திரைப்படப் பிரமுகர்கள் உதவ முன்வந்துள்ளதாகவும் சுரேஷ் கல்மாதி தெரிவித்தார்.
இந்த உடன்பாட்டை அடுத்து, நாளை காலை முதல் பயிற்சி முகாமுக்குத் திரும்புவதாக வீரர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொத்துக் கணக்கு காட்டும் விவகாரம்: டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது பற்றி உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை
இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் |
டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை அளித்த முக்கியமான தீர்ப்பில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகம், பொதுமக்களுக்கான அமைப்பு என்ற முறையில், தகவல் அறியும் உரிமை சட்டத்திற்குக் கட்டுப்படக்கூடியது என்று தெரிவித்திருந்தது.
மேலும், உச்சநீதிமன்ற நீதிபதிகளும் தங்கள் சொத்துவிவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் கீழ் நீதிமன்ற நீதிபதிகளைவிட அவர்கள் எந்த வகையிலும் பொறுப்பு குறைந்தவர்கள் அல்ல என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருந்தது.
ஒருமைப்பாட்டுக்கு அடையாளமாக உள்ள நீதித்துறை, ஜனநாயகத்தையும், சட்டத்தையும் முழுமையாகப் பின்பற்றும் அமைப்புக்கான அடித்தளமாகத் திகழ வேண்டும் என்றும், மற்ற அமைப்புக்கள் அதில் தோல்வியடைந்தாலும், மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் நீதித்துறை நிற்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தமது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர்.
வட இலங்கை உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் மீள்குடியேற்றத்துக்கு அரசாங்கம் அனுமதி
உயர் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் மக்களை அழைத்துச் செல்லும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா |
இந்தப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த சுமார் ஆயிரம் பேரை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தினுள் முதன் முறையாக அழைத்துச் சென்றுள்ளார்கள்.
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள்ளே மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயம் வரையிலும், அங்கிருந்து மேற்குத் திசையில் கீரிமலை மற்றும் சேந்தாங்குளம் வரையிலும் பொதுமக்கள் வாகனங்களில் சென்று தமது காணிகள் இடங்களைப் பார்வையிடலாம் என்றும், இவ்வாறு செல்பவர்கள் இராணுவத்தினரால் சோதனையிடப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மூன்று தினங்களில் சொந்த காணிகளைத் துப்பரவு செய்யும் பணிகளை இடம்பெயர்ந்த மக்கள் ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
எனினும் இந்தப் பகுதிக்குள் மக்கள் மீளக்குடியமர்வதற்கு ஏற்ற அடிப்படை வசதிகள் பல செய்யப்பட வேண்டியிருப்பதாக வலிகாமம் மீள்குடியேற்ற புனர்வாழ்வுக்குழு தலைவர் கூறுகின்றார்.
போலீஸ்-வழக்கறிஞர் மோதல் சம்பவம்: சென்னை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல்
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்குமிடையே மோதல்கள் நடந்திருந்தன |
வழக்கறிஞர்கள் 31 பேர், மற்றும் போலீசார் 10 பேர் மீது கலவரத்தில் ஈடுபடுவது குறித்த பல்வேறு இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் பிரிவுகளின் கீழ் வழக்குக்கள் தொடரப்படுகின்றன, மேலும் போலீசார் 22 பேர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் சி.பி.ஐ சிபாரிசு செய்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
மோதல்கள் நிகழ்ந்த நேரத்தில், சென்னை காவல்துறை ஆணையராக இருந்த, கே.ராதாகிருஷ்ணன், அன்றைய கூடுதல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், வடசென்னை இணை ஆணையர் எம்.ராமசுப்பிரமணியம் மற்றும் துணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் குறித்து சி.பி.ஐ எதுவும் கூறியிருப்பதாகத் தெரியவில்லை.
இந்நிலையில் வழக்கறிஞர்கள் 31 பேர் மீதான குற்றப்பத்திரிக்கைகள் வழக்கறிஞர்கள் மத்தியில் மேலும் அதிருப்தியை உருவாக்கக்கூடும், குற்றப்பத்திரிக்கைகளை தள்ளுபடி செய்யச்சொல்லி அவர்கள் வழக்கு தொடரக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
0 Response to "செய்தியறிக்கை"
แสดงความคิดเห็น