jkr

செய்தியறிக்கை


 யெமனில் அமெரிக்க தூதரகம்
யெமனில் அமெரிக்க தூதரகம்

யேமன் தூதுரகங்களை அமெரிக்காவும் பிரிட்டனும் மூடியுள்ளன

அந்நிய சக்திகளின் இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என அல் கொய்தா தொடர்ந்து விடுத்து வரும் அச்சுறுத்தல் காரணமாக யேமனில் இருக்கின்ற தூதரகத்தை அமெரிக்காவும், பிரிட்டனும் மூடியுள்ளன.

யேமனில் இருக்கின்ற அமெரிக்க பிரஜைகள் மிகவும் உஷாராக இருக்குமாறு அமெரிக்கா கூறியுள்ளது.

இதற்கிடையே, பயங்கரவாத எதிர்ப்பில் யேமனுடன் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருக்கின்ற அமெரிக்கப் படைகளின் தளபதி ஜெனரல் டேவிட் பெட்ரேயஸ் பேச்சுக்கள் நடத்தியுள்ளார். இதன் போது தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு கொடுக்கப்படும் நிதியுதவியை இரட்டிப்பாக்குவது குறித்தும் பேசப்பட்டுள்ளது.

ஆனால் யேமனில் அமெரிக்க துருப்புகள் தங்குவது என்பதை ஏற்க முடியாது ஒன்று என்று யேமனின் மூத்த அரசியல் ஆலோசகர் பிபிசியிடம் தெரிவித்தார்.


ஹீத்ரோ விமான நிலையத்தில் முழு உடலையும் பரிசோதிக்கும் ஸ்கேனர்கள்

முழு உடல் ஸ்கேனர்கள்
முழு உடல் ஸ்கேனர்கள்

ஐரோப்பாவிலே மிக அதிகமான விமானங்கள் வந்துபோகும் விமான நிலையமான லண்டனின் ஹீத்ரோவில், பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன் அவர்களின் உடல் முழுவதையும் பரிசோதிப்பதற்கான ஸ்கேனர் கருவிகள் நிறுவப்படவுள்ளன.

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் தரையிறங்கவிருந்த ஒரு விமானத்தை வெடித்துத் தகர்க்க, நைஜிரிய நபர் ஒருவர் தனது இடுப்பு உள்ளாடையில் வெடிப்பொருளை மறைத்து எடுத்துச் சென்று முயற்சி செய்ததை அடுத்து உலகெங்கிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் அரசாங்கம் ஒப்புதல் வழங்கியவுடன் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் முழு உடலையும் பரிசோதிக்கும் ஸ்கேன்னர் கருவிகள் செயல்பாட்டுக்கு வரும் என விமான நிலையத்தை நடத்தும் பி.ஏ.ஏ. நிறுவனம் கூறியுள்ளது.

பயணிகளின் ஆடைகளுக்கு உள்ளே இருப்பவற்றை பாதுகாப்பு ஊழியர்கள் பார்க்க இந்தக் கருவிகள் உதவும்.


ஆப்கானிஸ்தான் அமைச்சர் நிராகரிப்புகள் ஒரு அரசியல் பின்னடைவு - ஐ.நா

ஆப்கான் பிரதமர் ஹமீது கர்சாய்
ஆப்கான் பிரதமர் ஹமீது கர்சாய்

ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாயால் அமைச்சர் பதவிக்கு முன்மொழியப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கினரை நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது ஒரு அரசியல் பின்னடைவு என ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஐ.நாவின் தலைமை அதிகாரி கேய் எடி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் செயற்பாடு அமலுக்கு வருவதை இது மேலும் தாமதப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

அமைச்சர் பதவிக்கு முன்மொழியப்பட்ட 24 பேரில் 7 பேரை மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிகரித்துள்ளனர். இதற்கிடையே, அனைத்து அமைச்சு பிரிவுகளும் செயற்பட்டு வரவே செய்வதாகவும், அரசாங்கத்தை மறுசீரமைப்பது குறித்து அதிபர் ஹமீது கர்சாய் ஆராய்ந்து வருவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்

தஜிகிஸ்தான்
தஜிகிஸ்தான்

தஜிகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுமார் 23,000 பேர் வீடுகளை இழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவு கோளில் 5.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பமீர் மலைப் பகுதியில் சனிக்கிழமை காலையன்று இடம்பெற்றுள்ளது. தலைநகர் துஷன்பேவில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் இந்த இடம் இருக்கிறது.

இந்த சம்பவத்தில் உயிர்சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. நிலநடுக்கத்தை உணர்ந்தவுடன் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தியரங்கம்
பிரச்சாரத்தில் சரத் பொன்சேகா
பிரச்சாரத்தில் சரத் பொன்சேகா

ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் - சரத் பொன்சேகா

இலங்கையின் வடக்கே தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள பிரதான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகிய சரத் பொன்சேகா அவர்கள், நாட்டில் தற்போது உள்ள ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனநாயகத்தை நிலைநிறுத்தப் போவதாகத் தெரிவித்திருக்கின்றார்.

சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த சரத் பொன்சேகா அவர்கள் ஞாயிறன்று மன்னார், வவுனியா ஆகிய இடங்களில் இடம்பெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் சம உரிமை உடையவர்களாக, இன, மத, குல வேறுபாடின்றி பாதுகாப்பாக வாழ்வதற்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றியமைக்கப் போவதாக அவர் வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

புதிய ஆட்சியில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாதாந்தம் 2000 ஆயிரம் ரூபா உதவித் தொகை வழங்கவும், இராணுவம் பொலிசார் உட்பட அனைத்து அரச ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் சமத்துவமான முறையில் ஊழலற்ற வகையில் நாட்டில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் சரத் பொன்சேகா அவர்கள் உறுதியளித்துள்ளார்.

இதுபற்றிய மேலதிகத் தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் த தே கூ முடிவில் தொடர்ந்து தாமதம்

த.தே.கூ தேர்தல் குறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லை
த.தே.கூ தேர்தல் குறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லை

இலங்கையில் ஜனாதிபதி பதவிக்கான அறிவிப்பு வெளியாகி ஒரு மாதத்துக்கும் மேலாகியுள்ள நிலையிலும், இரு பிரதான வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் ஜெனரல் சரத் ஃபொன்சேகா அவர்களும் தங்களது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற நிலையிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், இந்தத் தேர்தல் தொடர்பில் தங்களது நிலைப்பாடு என்ன என்பது குறித்து இதுவரை தெரிவிக்காமலேயே உள்ளனர்.

" இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒரு அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில், ஒருமித்த கருத்துடன் இருக்கின்றார்களா என்கிற கேள்வி அனைவரிடமும் இருக்கிறது" என்று தான் கருதுவதாக இலங்கை பகுப்பாய்வாளர் பேராசிரியர் யுவி தங்கராஜா தமிழோசையிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று அவர்களிடம் இருக்கும் குழப்ப நிலை மக்களிடையேயும் உள்ளது என்றும் கூறும் அவர், தமிழ் மக்களின் உணர்வலைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிரதிபலிப்பதா அல்லது அவர்களுடைய முடிவை வடகிழக்கு பகுதியில் உள்ள தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வதா என்பது ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது என்றும் கூறுகிறார்.

தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களோ அல்லது அவர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடல்களை நடத்திவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரோ அந்த விவாதங்களின் தகவல்களை இதுவரை முழுமையாக வெளியிடாததும் தமிழ் மக்களிடையே எந்த வகையான நிலைப்பாட்டை எடுப்பது என்பது தொடர்பில் ஒரு குழப்பமான சூழலையே ஏற்படுத்தியுள்ளது என்றும் இலங்கை பகுப்பாய்வாளர் பேராசிரிய யுவி தங்கராஜா தெரிவிக்கிறார்.

அவர் வெளியிடும் கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


திருகோணமலை மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கம்

'தடைகள்' நீக்கம்
'தடைகள்' நீக்கம்

திருகோணமலை பகுதியில் கடந்த நான்கு வருடங்களுக்குப் பின்னர் பிரதேச மீனவர்கள் கடலுக்குச் சென்று சுதந்திரமாக மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய நிலையானது தங்களைப் பெரிதும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளதாக இந்த மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இருந்த போதிலும் இத்தகைய தடைநீக்கம் தொடர்ந்தும் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் இந்த மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாக மாறிவிடக்கூடாது எனவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய தடை நீக்கமானது கடந்த காலங்களைப் போல் அல்லாது மீனவர்களுக்குப் பாதுகாப்பை வழஙகியுள்ளது என்று அப்பகுதியின் மீனவர்கள் கூறுகிறார்கள்.

கடலில் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால் கடற்பிரதேசத்தின்
எந்தப் பகுதியிலும் கரையேறலாம் என்கிற வசதி தற்போது உள்ளது என்கிறார் மற்றும் ஒரு மீனவர்.

கடல் வலயத் தடை நீக்கப்பட்டதன் விளைவாக நிறைய மீன்
பிடிக்கப்படும் என்றும் இதன்மூலம் எதிர்காலத்தில் பாவனையாளாகள்
குறைந்த விலையில் மீனை வாங்க முடியும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளார் உள்ளுர் மீன் வியாபாரி ஒருவர்.

இத்தகைய தடைநீக்கமானது மீனவர்களின் பொருளாதார
செயற்பாடுகளை மேம்படுத்த உதவலாம் எனவும் மீனவர்கள்
எதிர்பார்க்கின்றனர்.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates