இரு இராணுவ வீரர்கள் யாழ்ப்பாணத்தில் தற்கொலை
பலாலி இராணுவ வைத்திய முகாம் மற்றும் பருத்தித்துறை இராணுவ முகாம் ஆகியவற்றில் கடமையாற்றி வந்த இராணுவ வீரர்கள் இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் நேற்று முன் நாள் யாழ்.குடாநாட்டில் இடம்பெற்றுள்ளன.
பலாலி பொலிஸ் பிவுக்குட்பட்ட வசாவிளான் இராணுவ வைத்திய முகாமைச் சேர்ந்த கோப்ரல் பதவி நிலையிலான இராணுவ வீரரான ஆர்.பி.டீ.பி.ரத்னமலல என்பவர் தனக்குத் தானே நஞ்சு மருந்தை உடலுக்குள் செலுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதேவேளை, பருத்தித்துறை இராணுவ முகாமைச் சேர்ந்த உப லெப்டினன்ட் பி.டீ. த சில்வா என்பவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இவ்விரு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ஐ.எம்.கருணாரத்ன தகவல் தருகையில் கூறியதாவது:-
பலாலி மருத்துவ முகாமில் சேவையாற்றிவந்த வைத்திய உதவியாளரான மேற்படி கோப்ரல் நேற்று முன்நாள் மாலை 5.30 மணியளவிலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்தது.
இவரது சடலம் முகாமிற்குள் அமைந்துள்ள படையினர் விடுதியின் மலசலகூடத்துக்குள்ளிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் உரிய மரண விசாரணைகளின் பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளனர். நஞ்சு மருந்தினை தனக்குத் தானே உடலுக்குள் செலுத்திக் கொண்டே அவர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று மேற்படி பிரேத பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பலாலி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் கோப்ரலின் சடலத்தை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பருத்தித்துறை இராணு முகாமைச் சேர்ந்த உதவி லெப்டினன்ட் பதவி நிலை வகிக்கும் இராணுவ வீரர் நேற்று முன்நாள் முற்பகல் 10.45 மணியளவில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
வலஸ்முல்ல பெலியத்த பகுதியைச் சேர்ந்த அவருடைய சடலத்தை உரிய பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க பருத்தித்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேற்படி இரு தற்கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Response to "இரு இராணுவ வீரர்கள் யாழ்ப்பாணத்தில் தற்கொலை"
แสดงความคิดเห็น