jkr

நெஞ்சை உலுக்கும் காட்சிகள் - இந்தோ.மெராக் துறைமுக இலங்கை அகதிகள் விடயத்தில் சர்வதேசத்தின் பாராமுகம் ஏன்?

அகதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கையில் இந்தோனேசிய கடற்படையினரால் சர்வதேச கடற்பரப்பில் கடந்த 11-10-2009 அன்று கைது செய்யப்பட்டு மெராக் துறைமுகத்தில் இன்றுடன் 100 வது நாளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் விடயத்தில் சர்வதேசத்தின் பார்வை அருகிவருவதாகவே தெரிகின்றது.

நிறைமாத கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளடங்கலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகள் எதிர்நோக்கும் நடைமுறை பிரச்சினைகளையும் துன்பியல் வாழ்வினையும் ஆதார பூர்வமாக ஊடகங்கள் மூலமாக எடுத்துக் காட்டியும் இந்தோனேசிய அரசோ, ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது சர்வதேச நாடுகளோ தங்கள் பரந்து பட்ட பார்வையினை இவர்கள் மீது செலுத்தாமல் இருப்பது ஏன்? என்று ஆதங்கப்படுகின்றார்கள்.

சொறி, சிரங்கு, வயிற்றோட்டம் மற்றும் இதர நோய்த்தாக்கங்களிற்கு உட்பட்டு அனைத்து அகதிகளும் அல்லற்படுகின்ற அதேநேரத்தில் அதற்குரிய தகுந்த மருத்துவ சிகிச்சைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருவதும் வருத்தத்திற்குரியது.

கடுமையான காலநிலை சீர்கேட்டாலும் அசாதாரண பேர் அலைகளாலும் அதிகப்படியாக உருக்குலைந்து போயிருக்கும் கப்பலும் எந்த நேரத்திலும் இவர்களை கைவிட்டுவிட
கூடிய சந்தர்ப்பமும் இருக்கின்றது. இன்றும் மூன்று அகதிகள் கடற்பரப்பில் கட்டுக்கடங்காத அலைகாரணமாக ஆடிக்கொண்டிருக்கும் கப்பலில் நிலை தடுமாறி விழுந்து காயப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கையின் சமகால யுத்த அரசியல் மற்றும் துன்பியல் நிகழ்வுகளை சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக நம்பிக் கொண்டு,
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஸ்தானிகராலயம் இவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கும் பட்சத்தில், இவர்களை ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பேற்க வேண்டும் என்றும்,

ஓசியானிக் வைக்கிங் கப்பலின் அகதிகளுக்கு அவுஸ்திரேலியாவும், இதர சர்வதேச நாடுகளும் இந்தோனேசிய அரசும் வழங்கிய தீர்வினை ஒத்ததான ஓர் தீர்வினை இவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சிற்கு அகதிகள் சார்பாக விடுக்கப்பட்ட செய்தியும் இந்தோனேசிய அரசால் கருத்திற் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், இந்தோனேசியாவில் ஓர் ஹெய்டியோ அல்லது மீண்டும் ஓர் மெனிக்பாம் முகாமோ உருவாவதை சர்வதேசம் விரும்புகிறதா? என்ற அகதிகளின் கேள்வி நியாயமாகின்றது.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "நெஞ்சை உலுக்கும் காட்சிகள் - இந்தோ.மெராக் துறைமுக இலங்கை அகதிகள் விடயத்தில் சர்வதேசத்தின் பாராமுகம் ஏன்?"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates