jkr

செய்தியறிக்கை


இந்த ஓளிநாடா உண்மையாக இருக்கலாம் என்று ஐ நா அதிகார் கூறுகிறார்
இந்த ஓளிநாடா உண்மையாக இருக்கலாம் என்று ஐ நா அதிகார் கூறுகிறார்

இலங்கை படுகொலை ஒளிநாடா உண்மையானது என்று ஐ நா அதிகாரி கருத்து

இலங்கை படையினர் சட்ட விரோதமாக கொலைகளில் ஈடுபடுவதாகக் காட்டும் ஒளிநாடாக் காட்சிகள், பெரும்பாலும் உண்மையானவையே என்று ஐ நா வின் மூத்த அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

சித்ரவதை மற்றும் சட்ட விரோத கொலைகள் குறித்த ஐ நா மன்ற சிறப்பு அதிகாரி பிலிப் ஆல்ஸ்டன் மூன்று பக்கசார்பற்ற வல்லுநர்கள், இந்த ஒளிநாடா உண்மையானதுதான் என்று உறுதிப்படுத்தியுள்ளார்கள் என்றும், எனவே இது குறித்து ஒரு விசாரணை வேண்டும் என்றும் மீண்டும் கோரியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஜனநாயகத்துக்கான இலங்கை பத்திரிகையாளர்கள் என்கிற ஒரு அமைப்பு அனுப்பிய அந்த ஒளிநாடாவில், அரச படையினர் போல தோற்றம் அளிப்பவர்கள், நிர்வாணமாக்கப்பட்ட நிராயுதபாணிகள் சிலரை சுட்டுக் கொல்வது போன்ற காட்சிகள் காணப்பட்டன.

இந்த ஒளிநாடா போலியானது, திரிபுபடுத்தப்பட்டது என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறிவந்துள்ளது.


எகிப்தில் 6 கிறிஸ்துர்வர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்

எகிப்தில் 6 கிறிஸ்துவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்
எகிப்தில் 6 கிறிஸ்துவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்
எகிப்திய கிறிஸ்தவர்களில் ஒருபிரிவான காப்டிக் கிறிஸ்தவர்கள் ஆறுபேரும், காவல்துறையைச்சேர்ந்த ஒருவரும், வாகனத்தில் வந்த ஒருவரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, காப்டிக் கிறிஸ்தவர்கள் நடத்திய ஆர்பாட்டத்தின்போது அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல் உருவானது.

எகிப்தின் தெற்குப்பகுதியில் இருக்கும் ஒரு கிறித்தவ தேவாலயத்திலிருந்து பிரார்த்தனை முடித்து விட்டுத் திரும்பிய கிறித்தவர்கள் மீது வாகனத்தில் வந்தவர் நடத்திய ஆறுபேர் கொல்லப்பட்டனர்.

காப்டிக் கிறித்தவர் ஒருவர், முஸ்லீம் பெண்ணை கற்பழித்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்வினையாக இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பிரதான துப்பாக்கிதாரி முஸ்லீம் என்று காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். ஆனாலும் இது தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் குழுமிய ஆர்பாட்டக்காரர்கள் கல்லெறிதலில் ஈடுபட்டதைத்தொடர்ந்து இந்த மோதல்கள் உருவாயின.


காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை கொன்றுள்ளதாக இந்தியா கூறுகிறது

காஷிமீரில் இந்திய பாதுகாப்பு படையினர்
ஸ்ரீநகரில் இந்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவர்
இந்திய நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காஷ்மீர் மாநிலத்தின ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் இருந்த விடுதியை தாம் தாக்கி அதிலிருந்த 2 தீவிரவாதிகளை கொன்றுவிட்டதாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதன் மூலம் அங்கே 24 மணிநேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட ஒருவர் பாகிஸ்தானிய பயங்கரவாத இயக்கமான, லஷ்கர் இ தோயிபாவைச் சேர்ந்தவர் என்று மாநில காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமையன்று, ஐன நெருக்கடி மிக்க சந்தைப் பகுதியில் கையெறிகுண்டுகளை வீசிய தீவிரவாதிகள் அதன் பிறகு அங்கே துப்பாக்கிப் பிரயோகமும் செய்தனர்.

அதன் பிறகு அவர்கள் ஒரு ஒட்டலில் பதுங்கினர். இந்திய ஆளுகைக்கு எதிராக காஷ்மீரில் நெடுங்காலமாக கிளர்ச்சி நடைபெற்று வருகிறது.


ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
ஆஸியில் இந்திய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
ஆஸ்திரேலியாவுக்கு மேற்படிப்பு படிப்பதற்காக விசா கோரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஜூலை அக்டோபர் காலத்தில் 46 வீதம் குறைந்து விட்டதாக ஆஸ்திரேலிய அரசு கூறியுள்ளது.

2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்திய மாணவர்கள் மீது மெல்போர்னிலும், சிட்னியிலும் நடந்த தொடர் தாக்குதல்களுக்குப் பிறகு விசா விண்ணப்பங்கள் குறைந்துள்ளன.

மெல்போர்னில் இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா செல்ல விரும்பும் மாணவர்களுக்கு இந்திய அரசு இவ்வார முற்பகுதியில் பயண எச்சரிக்கை ஒன்றை அளித்துள்ளது.


நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் முன்னாள் சிறார் போராளிகளுக்கு மறுவாழ்வுப் பணிகள் துவக்கம்

நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் முன்னாள் சிறார் போராளிகள்
நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் முன்னாள் சிறார் போராளிகளுக்கு மறுவாழ்வு
நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் அமைப்பின் சார்பில் போராடிய ஆயிரக்கணக்கான முன்னாள் சிறார்போராளிகளை படையணிகளிலிருந்து கலைக்கும் நடவடிக்கையை நேபாள அரசாங்கம் துவங்கியிருக்கிறது.

நேபாளத்தின் மத்திய பகுதியில் இன்று வியாழக்கிழமை நடந்த ஒரு வைபவத்தில் இருநூறு இளம் போராளிகள் இன்று படையணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படும் அல்லது பள்ளிகளில் படிப்பதற்கான வாய்ப்புகள் அளிக்கப்படும்.

2006 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட சமாதான ஒப்பந்தப்படி, பத்தொன்பதாயிரம் முன்னாள் மாவோயிய போராளிகளில் ஒரு தொகுதியினர் நேபாள ராணுவத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும்.

ஆனால் இது எப்படி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் உருவான கருத்து மோதல்கள் காரணமாக நேபாள அரசியலில் மோதல்களும் தேக்கநிலையும் உருவாகியுள்ளது.


பர்மாவின் மூத்த இரு அதிகாரிகளுக்கு மரண தண்டனை

பர்மாவின் மூத்த அரசாங்க அதிகாரிகள் இரண்டு பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதாக பிபிசிக்கு தெரியவந்திருக்கிறது.

பர்மிய அரசு அதிகாரிகள் ரஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கும் மேற்கொண்ட ரகசிய பயணங்கள் மற்றும் பர்மிய ராணுவத்திற்காக வடகொரியாவால் உருவாக்கப்பட்டுவரும் சுரங்கப்பாதைகள் குறித்த விவரங்களை வெளியிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் அவர்களுக்கு
இந்த தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சுரங்கப்பாதைகள் நீண்டகாலமாக கட்டப்பட்டு வருகின்றன. ஒருவேளை பர்மா மீது வெளிநாட்டு படையெடுப்பு நடந்தால் அந்த காலகட்டத்தில் பர்மிய ராணுவத்துருப்புக்கள், அவர்களின் ஆயுத தளபாட தொழிற்சாலைகள் மற்றும் அவர்களின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு ஆகியவற்றை பதுக்கி வைக்க இந்த சுரங்கங்கள் அமைக்கப்படுவதாக கருதப்படுகிறது.

தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் ராணுவத் தைச்சேர்ந்த முன்னாள் மேஜர். மற்றவர் வெளியுறவுத் துறையின் அதிகாரி. இவர்களோடு மூன்றாவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நபருக்கு 15 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

செய்தியரங்கம்
பிரச்சாரத்தில் சரத் ஃபொன்சேகா
பிரச்சாரத்தில் சரத் ஃபொன்சேகா

சரத் ஃபொன்சேகாவின் தேர்தல் அறிக்கை வெளியீடு

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான பிரதான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா வியாழனன்று பத்து அம்சங்கள் அடங்கிய தனது தேர்தல் அறிக்கையை கொழும்பில் வெளியிட்டுள்ளார்.

முதலாவது நடவடிக்கையாக நாட்டில் அமைதியை ஏற்படுத்தி, ஜனநாயகத்தை நிலைநாட்டுவேன் என்றும், இரண்டாவதாக ஊழலையும், மோசடிகளையும் ஒழிப்பேன் என்றும் சரத் ஃபொன்சேகா தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இவை தவிர ஒவ்வொரு குடும்பத்தினதும் நிதிநிலைமையை உறுதிப்படுத்துவேன் என்றும், வாழ்க்கைச் செலவினங்களை குறைப்பேன் என்றும் கூறியுள்ள அவர் பத்து அம்சங்கள் அடங்கிய தனது தேர்தல் உறுதி மொழிகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.

தேசிய நல்லிணக்கத்துக்கான செயற்பாடுகளை ஆரம்பித்து, சுகாதார மற்றும் கல்வி சேவைகளை மேம்படுத்துவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

வடகிழக்கு இணைப்பு மற்றும் அரசியல் தீர்வு குறித்து கருத்துக்கள் இல்லை

பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்றும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவேன் என்றும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் என்றும் அவர் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தமிழ் மக்களின் பிரதான கோரிக்கைகளில் ஒன்றாக கருதப்படும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் இணைப்பு குறித்தோ அல்லது சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்தோ எந்த விதமான கருத்துக்களும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பிராபகரனின் தந்தை காலமானார்

பிராபகரனின் குடும்பத்தினர்
பிரபாகரனின் குடும்பத்தினர்
விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் புதன்கிழமை இரவு காலமானதாக இலங்கை இராணுவத்தின் பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்கார தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த 86 வயதான அவரது மரணம் இயற்கையாக ஏற்பட்டது என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவிக்கிறார்.

பிராபகரன் அவர்களின் பெற்றோர் பனாகொடையில் இருந்த ராணுவ கண்டோன்மெண்ட் பகுதியில் இராணுவத்தின் பாதுகாப்பில் இருந்ததாகவும் இலங்கை இராணுவம் கூறுகிறது.

மறைந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மனைவியின் விருப்பத்தின் பேரில் அவரது இறுதிக் கிரியைகள் இடம் பெறும் என்றும், அவரது இரு மகள்களோ அல்லது மகனோ உடலைக் கோரினால் அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவப் பேச்சாளர் கூறுகிறார்.


இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் மூன்றாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தி வருகிறார்கள்.

தமக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க வேண்டும், அல்லது தம்மை பிணையிலாவது விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி அவர்கள் இந்தப் போராட்டத்தை நடத்திவருவதாக அவர்களைச் சென்று பார்த்து வந்த இலங்கை மேல்மாகண சபை உறுப்பினரான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

பல வருடங்களாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 108 கைதிகள் மகசின் சிறைச்சாலையில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருவதாகவும், அவர்களில் சிலரையே நேற்று தாம் சந்தித்ததாகவும் பிரபா கணேசன் தெரிவித்தார்.

இவை குறித்த மேலதிகத் தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையின் வடபகுதியிலிருந்து பேருந்து சேவைகளில் மேலும் முன்னேற்றம்

யாழ்ப்பாணம்-பருத்தித்துறை பேருந்து
யாழ்ப்பாணம்-பருத்துத்துறை பேருந்து
இலங்கையின் வடக்கே பல வருடங்களாக நிலவி வந்த போர் முடிவுக்கு வந்ததன் பின்னர், முதன்முறையாக யாழ்ப்பாணத்திற்கும் வெளியிடங்களுக்குமான பேருந்து சேவைகள் சுதந்திரமாக நடைபெறத் தொடங்கியிருக்கின்றன.

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்துகள் யாழ் முற்றவெளிக்குச் சென்று அங்கிருந்து இராணுவத்தின் வழித்துணையுடனேயே நேற்று வரை சேவையில் ஈடுபட்டு வந்தன.

வவுனியா தேக்கவத்தையில் உள்ள இராணுவ சோதனைச்சாவடிக்குச் சென்று, சோதனைகளின் பின்னர் பேருந்துகளில் ஏறி இராணுவ வழித்துணையுடன் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பயணிகள் தமது பிரயாணத்தை மேற்கொண்டு வந்தார்கள்.

இப்போது இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. பேரூந்துகள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பேருந்து நிலையங்களில் இருந்து நேரடியாகத் தமது பிரயாணத்தை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன.

இந்தப் புதிய நடைமுறையையடுத்து, ஏ9 வீதியின் பல இடங்களிலும் பிரயாணிகள் இறங்கி ஏறுவதற்காக பேருந்து வண்டிகள் நிறுத்தப்பட்டதாகவும், சுமுகமான நிலையில் பிரயாணம் நடைபெற்று வருவதாகவும் பேரூந்து சாரதி ஒருவர் தெரிவிக்கின்றார்.

புதிய நடைமுறை குறித்து பயணிகள் பலரும் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்திருக்கின்றார்கள்.

இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


புலிகள் பாதுகாப்பு: உலக வங்கியின் நிதியை இந்தியா நிராகரிப்பு

இந்தியப் புலி
இந்தியப் புலி
புலிகளை பாதுகாப்பதற்காக உலக வங்கி தர முன்வந்த உதவியை இந்தியா நிராகரித்து விட்டது புலிகளை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட புலி பாதுகாப்பு ஆணையத்தின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் உதவியைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தான் விரும்பியதாகவும், ஆனால் கூட்டத்தில் பங்கு கொண்ட வன உயிர் ஆர்வலர்களும், நிபுணர்களும் உலக வங்கியின் நிபந்தனைகளுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தால் உதவியை நிராகரிப்பதென முடிவு செய்யப்பட்டதாகவும் இந்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் உலக வங்கியின் உதவியுடன் நடத்தப்பட்ட வன உயிர் திட்டங்களில் பெரும் ஊழல் நடந்ததாகவும், இதனால்தான் மீண்டும் உலக வங்கியின் உதவியைப் பெற நிபுணர்கள் தயங்குவதாகவும் வன உயிர் நிபுணர் எ ஜெ டி ஜான்சிங் தமிழோசையிடம் தெரிவித்தார்.

மேலும் வன உயிர் பாதுகாப்பு திட்டம் குறித்து ஆலோசனை கூற அமெரிக்க நிபுணர்களை நியமிக்குமாறு உலக வங்கி விதித்த நிபந்தனையை இந்திய நிபுணர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். இந்தியாவிலேயே பல நிபுணர்கள் இருக்கும் போது புலிகளை பாதுகாப்பது தொடர்பில் அதிக பணம் கொடுத்து வெளிநாட்டு நிபுணர்களை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்த ஜான் சிங், அதே நேரம் பணத்தைப் பெற்று புலிகளைப் பாதுகாக்க வேறு வழிகளில் செலவழிக்க இந்தியா முயற்சி செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்திய வனஉயிர் நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றி ஒய்வு பெற்ற வன உயிர் நிபுணர் ஏ ஜெ டி ஜான் சிங் அவர்களின் செவ்வியை இன்றைய நிகழ்சியில் நேயர்கள் கேட்கலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates