சனல் 4 தொலைக்காட்சி காணொளி உண்மை; அதுவே போர்க்குற்ற விசாரணைக்கு சாட்சியாக அமைந்துள்ளது : ஐ.நா.சபை
இலங்கை இராணுவம் தொடர்பிலான சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி காட்சிகள்உண்மையானதாகும். அதுவே, நியாயமான போர்க்குற்ற விசாரணைக்கு சாட்சியாக அமைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இந்த காட்சி நேற்றைய தினம் துன்புறுத்தல் மற்றும் அநீதிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி பிலிப் அல்ஸ்டனினால் ஐக்கிய நாடுகள் சபையில் சமர்பிக்கப்பட்டது.
இதனை சமர்ப்பித்து சிறப்புரை வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்த காட்சிகள் உண்மையானதாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இலங்கை மீதான யுத்த குற்றச்சாட்டு மற்றும் ஏனைய மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை நடத்தப்போவது யார் என்பது குறித்த தகவல்களை அவர் வெளியிடவில்லை.
இலங்கையில் 25 வருடகால யுத்தம் கடந்த மே மாதத்துடன் நிறைவடைந்தது. இதன்போது ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கூடார நகரங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன், யுத்தம் வெற்றி கொள்ளப்பட்ட சிலமாதங்களிலேயே ஜனாதிபதி தேர்தலுக்கும் அரசாங்கம் அறிவிப்பு விடுத்துள்ளது.
யுத்த வெற்றியின் காரணமாக சிங்கள தரப்பு, பெரும்பான்மையின் வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ள போதும், தற்போது தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதில் போட்டி காணப்படுகின்றது.
இந்த யுத்த வெற்றியின் பங்குதாரியான சரத் பொன்சேகாவும் தேர்தலில் களமிறங்கியுள்ளமையே இதற்கான காரணம். இந்த நிலையிலேயே குறித்த காணொளி காட்சி ஐக்கிய நாடுகள் சபையினால் பிலிப் அல்ஸ்டனினால் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன் போது செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அல்ஸ்ட்ன் மூன்று பேர் கொண்ட காணொளி ஆராய்வு நிபுணர்கள் குழுவினர் இந்த காட்சிகளை ஆராய்ந்தாக தெரிவித்துள்ளார்.
இதன் போது, இந்த காட்சி போலியானது என இலங்கை அரசாங்கம் முன்வைத்த வாதங்கள் தகர்த்தெறியப்பட்டதாகவும், அவை அனைத்தும் ஒரு தற்காப்பு நடவடிக்கையே என உறுதியானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சனல் 4 தொலைக்காட்சி கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த காட்சியை ஒளிபரப்பு செய்தது. இதில் இலங்கை இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நிர்வாணப்படுத்தி சுட்டுக்கொல்வது போன்ற காட்சிகள் காண்பிக்கப்பட்டன. இவை கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட காட்சிகளாக அமைந்திருந்தன.
இந்த காட்சிகள் போலியானது என அரசாங்கம் தெரிவித்துள்ள போதும், பிலிப் அல்ஸ்டன் இதனை மறுத்துள்ளதுடன், அந்த காட்சிகள் உண்மையானது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இலங்கையின் மோதல் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுதந்திரமான போர்க்குற்ற விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
0 Response to "சனல் 4 தொலைக்காட்சி காணொளி உண்மை; அதுவே போர்க்குற்ற விசாரணைக்கு சாட்சியாக அமைந்துள்ளது : ஐ.நா.சபை"
แสดงความคิดเห็น