தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட வரலாறு காணாத துரோகம்!: வைகோவுக்கு உள்ள உணர்வு கூட சம்பந்தனுக்கு இல்லாமல் போய்விட்டது!!
யாழின் மைந்தன்
தமிழ் மக்களின் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத துரோகம் ஒன்று அரங்கேறியுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சம்பந்தன் கோஷ்டி, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இராணுவத்தளபதியும், பேரினவாதியும், போர்வெறியனுமான சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என முடிவு செய்துள்ளது. இந்த முடிவு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஏகமனதான முடிவு என்று சம்பந்தன் அறிக்கை விடுத்தாலும், உண்மை அதுவல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோரும், அதன் ஆதரவாளர்களில் ஏகப்பெரும்பான்மையோரும், சம்பந்தன் கோஷ்டியின் காட்டிக்கொடுப்புக்கு விரோதமாகவே உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஜனவரி 27ம் திகதி தேர்தல் முடிவு வெளியாகும் போது அந்த உண்மை நிச்சயம் தெரியவரும்.
சம்பந்தன் கோஷ்டி சரத் பொன்சேகாவைத்தான் ஆதரிப்பார்கள் என்பது, தமிழ் தலைமைகளின் 60 வருட சரித்திரத்தை அறிந்தவாகள் எல்லோருக்கும் முன்கூட்டியே தெரிந்த விடயம் தான். ஆனால் முன்னைய கால தமிழ் தலைவர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், எஸ்.ஜே.வி. செல்வநாயகம், அ.அமிர்தலிங்கம் போன்றோரும், பின்னர் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும் கூட, இவ்வளவு தூரம் எவ்வித தயக்கமோ, கூச்ச நாச்சமோ இன்றி, இப்படி தமிழினத்தை எதிரியின் காலடியில் மண்டியிட வைத்த, சம்பந்தன் குழுவின் நடவடிக்கை போன்று ஒருபோதும் செய்ததில்லை!
எந்த சரத் பொன்சேகா வன்னி போர் முனையில் பிரபாகரன் உட்பட அனைத்து புலித்தலைவர்களையும், பல்லாயிரக்கணக்கான புலி உறுப்பினர்களையும், தமிழ் பொதுமக்களையும் கொன்று குவித்தாரோ, அவரை தேர்தலில் ஆதரிப்பது என்று சம்பந்தன் கோஷ்டி செய்துள்ள முடிவை என்னவென்பது? இதைப் பார்க்கையில், இவ்வளவு காலமும் புலிகளின் விசுவாசிகள் போல் நடித்து பிரபாகரனையும் அவரது கூட்டத்தையும் இவர்கள் தான் காட்டிக் கொடுத்து அழிக்க வைத்தார்களோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.
இவர்கள் யார் யாரோடு எல்லாம் கூட்டுச் சேர்ந்து பொன்சேகாவை ஆதரிக்கிறார்கள் என்று பாருங்கள்!
தமிழர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை, எனவே அவர்களுக்கு என எந்தத் தீர்வுத் திட்டத்தையும் முன்வைக்கக்கூடாது, தமிழர் பிரச்சினைக்கு அரைகுறை தீர்வைத்தன்னும் வழங்கிய மாகாணசபைகளை கலைத்துவிட வேண்டும் என வாதிட்டு வரும் ஜே.வி.பியுடன் கூட்டுச்சேர்ந்து சரத் பொன்சேகாவின் வெற்றிக்குப் பாடுபடப்போகிறார்கள். இந்த ஜே.வி.பி தான் வடக்கு கிழக்கு இணைப்பை பிரிக்கும் படி நீதிமன்றத்தில வழக்கு தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்ற கட்சியாகும்.
தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் கூட்டுச் சேர்ந்து சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் இன்னொரு சகா, வடக்கு கிழக்கு இணைப்பை செல்லுபடியற்றது என தீர்ப்பு வழங்கி, சிங்கள இனவாதிகள் மத்தியில் கதாநாயகனாக பவனி வந்த, முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் என் சில்வா!
ஐக்கிய தேசியக்கட்சியின் பாத்திரம் பற்றி இங்கு அதிகம் எழுதத் தேவையில்லை. ஏனெனில் 1957ல் பண்டா – செல்வா உடன்படிக்கையை எதிர்த்து கண்டி யாத்திரை சென்று அதை கிழித்தெறிய வைத்தது முதல், 2000ம் ஆண்டில் சந்திரிகா முன்வைத்த தீர்வுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் கிழித்து வீசி தீ வைத்தது வரை, இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் எல்லாவற்றையும் குழப்பி, நாட்டில் இரத்த ஆறு ஓட வைத்தது அந்தக் கட்சிதான் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
இத்தகைய தமிழர் விரோத சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்துதான், எல்லோருக்கும் மேலான இனவாதியான சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என சம்பந்தன் குழு முடிவு செய்துள்ளது. அதுமாத்திரமின்றி, பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த சரத் பொன்சேகா, இராணுவ உடையைக் கழற்றிய பின்னர் நல்லவராகிவிட்டார் எனவும் சம்பந்தன் கறுப்பை வெள்ளையாக்கிக் காட்டி, கயிறு திரிக்க முனைந்துள்ளார். குறைந்த பட்சம் தென்னிந்திய அரசியல்வாதி வை.கோபாலசாமிக்கு உள்ள அறிவு தன்னும் சம்பந்தனுக்கு இல்லாமல் போனது பெரிய ஆச்சரியம் தான்!
அண்மையில் ‘ஆனந்தவிகடன்’ இதழுக்கு வழங்கிய பேட்டியொன்றில், “பொன்சேகா இராணுவ உடையைக் களைந்துவிட்டு அரசியலுக்கு வந்துள்ளாரே?” என நிருபர் வினவியதற்கு, “பாம்பு செட்டையைக் கழற்றிவிட்டால் விஷம் போய்விடுமா?” என வை.கோ மிக ஆணித்தரமாக பதில் இறுத்திருந்தார்!
திருவாளர் சம்பந்தன் அவர்களே!
நீங்களும், உங்கள் கூட்டமும் தமிழ் மக்களை ஏமாற்றி, உங்கள் சதித்திட்டத்தை நிறைவேற்றிவிட்டதாக உள்ளுர மகிழக்கூடும். ஆனால் இந்தத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வென்றாலும் சரி, சரத் பொன்சேகா வென்றாலும் சரி, தோற்கப்போவதும் பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ளப்போவதும் நீங்கள்தான் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள். அப்பொழுது உங்களுக்காக அனுதாபப்படுவதற்கு தமிழ் மக்களில் ஒரு சிலராவது தயாராக இருப்பார்களோ தெரியாது!!
0 Response to "தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட வரலாறு காணாத துரோகம்!: வைகோவுக்கு உள்ள உணர்வு கூட சம்பந்தனுக்கு இல்லாமல் போய்விட்டது!!"
แสดงความคิดเห็น