யாழ்ப்பாணத்து மக்களின் காதில் பூச்சுற்றிய முன்னாள் பிரதம நீதியரசர்!
- முல்லை ஈஸ்வரன்
வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் இணைந்திருக்க வேண்டுமா அல்லது பிரிந்திருக்க வேண்டுமா என்ற பிரச்சினை, ஜனாதிபதி தேர்தல் நேரத்தில் மீண்டும் அரங்கிற்கு வந்திருக்கிறது. அதை அரங்கிற்கு கொண்டு வந்திருப்பவர் வேறு யாருமல்ல. வடக்கு – கிழக்கு இணைப்பு சட்டப்படி செல்லுபடியற்றதென தீர்ப்பு வழங்கிய முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவே அதை கிளப்பியிருக்கிறார்.
அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்ட, எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவுடன் இணைந்து கொண்ட சரத் என் சில்வா, ‘யாராவது வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என நோக்கம் கொண்டிருந்தால், அதற்கான மக்கள் கருத்து கணிப்பு நடாத்தும் நேரம் இதுவாகும்’ என குண்டொன்றை தூக்கி போட்டுள்ளார். முன்னாள் பிரதம நீதியரசர் ஓய்வுபெற்ற பின்னர், தனிப்பட்ட முறையில் வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றி என்ன நினைக்கிறார் என்பது பற்றி எதுவும் கூறாமல், இது மற்றவர்களுக்கு மட்டும் உரிய பிரச்சினை என்ற கணக்கில் குழப்பமான அறிக்கையொன்றை விடுத்திருக்கிறார்.
அவரது கூற்றுப்படி, இந்த நேரத்தில் இணைப்பு பற்றி வாக்கெடுப்பு நடாத்த வேண்டுமென்றால், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பா அல்லது பின்பா, இல்லாதுவிடின் ஜனாதிபதி தேர்தலுடன் இணைத்தா என்பதை விளக்கியிருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் பொத்தாம் பொதுவாக சரத் என் சில்வா குண்டை தூக்கி வீசியிருப்பது சில அந்தரங்க நோக்கங்களுடன் என்பது தெளிவாகிறது.
அதாவது சரத் என் சில்வா பிரதம நீதியரசராக இருந்த போது, பிரதானமாக ஜே.வி.பி கட்சியே வடக்கு கிழக்கை பிரிக்க வேண்டும் என்ற வழக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஜே.வி.பி இந்த வழக்கை தாக்கல் செய்ததின் நோக்கம் கிழக்கு மாகாண மக்களின் நலன் கருதி அல்ல. ‘தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை என்று எதுவுமில்லை.
வடக்கு கிழக்கு அவர்களது தாயகம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே வடக்கு கிழக்கை இணைத்து அவர்களுக்கு அதிகார பகிர்வு வழங்குவது தேவையில்லை’ என்ற ஜே.வி.பியின் இனவாத நிலைப்பாட்டிலிருந்தே, அது இந்த வழக்கை தாக்கல் செய்தது.
வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது முழுக்க முழுக்க ஒரு அரசியல் ரீதியான பிரச்சினையாகும். எனவே அதை சட்டரீதியாக கையாள்வதை விட, அரசியல் ரீதியாக கையாண்டிருக்க வேண்டும். ஆனால் அந்த பிரச்சினை நீதிமன்றத்திற்கு வந்தபோது, அதை அரசியல் ரீதியான பிரச்சினையாக காட்டி கொள்ளாத, பிரதம நீதியரசராக இருந்த சரத் என் சில்வா, வெறுமனே சட்ட நுணுக்க அடிப்படையில் அதை அணுகி, வடக்கு கிழக்கை பிரிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். உண்மையில் அவர் செய்திருக்க வேண்டும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்தது, இது ஒரு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை என்ற படியால், அரசாங்கமும், சம்பந்தப்பட்ட அரசியல கட்சிகளும் இதுபற்றி கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வர கால அவகாசம் வழங்கி தீர்ப்பு வழங்குவதை ஒத்தி வைப்பார் என்பதையேயாகும்.
ஆனால் சரத் என் சில்வாவோ, எங்கே தனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று இருந்தவர் போல, சட்ட பிரச்சினையை காரணம் காட்டி உடனடியாகவே வடக்கு கிழக்கு இணைப்பை ரத்து செய்து தீர்ப்பு வழங்கிவிட்டார். அவரது தீர்ப்பால் உயர்நீதி துறையின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்ததுடன், பிரதம நீதியரசரும் இனவாத போக்குடையவர் என்ற கருத்தும், அவர்கள் மத்தியில் வேர் விட்டதை யாரும் மறுத்துவிட முடியாது.
இந்த சூழ்நிலையில் தற்பொழுது எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளராக போடடியிடும் முன்னாள் இராணுவ தளபதி ஒரு இனவாதி என்பது நன்கு தெரிநதிருந்தும் அவருக்கு முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தனது ஆதரவை வழங்கி வருகிறார். அதுமட்டுமல்ல, சரத் பொன்சேகாவை முன்னிறுத்தியிருக்கும் ஜே.விபியும் ஒரு இனவாத கட்சி என்பதும் முன்னாள் நீதியரசருக்கு நன்கு தெரிந்த விடயமாகும். சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் இன்னொரு கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி இலங்கையில் இன பிரச்சினையை தீர்க்க மேற்கொள்ளப்பட்ட அத்தனை முயற்சிகளையும் குழப்பிய கட்சி என்பதும் சரத் என் சில்வாவுக்கு தெரியாத விடயமல்ல. இருந்தும் அந்த இனவாத கூட்டில் தன்னை இணைத்து கொண்டதின் மூலம், முன்னாள் பிரதம நீதியரசரின் நிலைப்பாடும் அதுதான் என்பது புலனாகின்றது.
ஆனால், யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்த வேளையில், வடக்கு கிழக்கு இணைப்பை பற்றி முன்னாள் பிரதம நீதியரசர் பிரஸ்தாபித்ததின் நோக்கம், ஒன்று தன்னை பற்றி தமிழ் மக்கள் கொண்டிருக்கும் தப்பான அபிப்பிராயத்தை (கோபமானதும் கூட) நீக்குவதும், தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளை சரத் பொன்சேகாவிற்கு கொள்ளையிட்டு கொடுப்பதும் தான் என்பது தெளிவானது.
இன்று வடக்கு கிழக்கு இணைப்பை பிரிக்க கோரி வழக்கு தாக்கல் செய்த ஜே.வி.பியும், அதை பிரிக்கும்படி தீர்ப்பு வழங்கிய முன்னாள் பிரதம நீதியரசரும், ‘இலங்கை சிங்களவர்களுக்கு மட்டுமே உரிய நாடு’ என பச்சை இனவாதம் பேசிய சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்காக ஒரே அணியில இணைந்திருக்கினறனர். அப்படி இணைந்திருப்பது மட்டுமின்றி, இந்த இனவாத கூட்டு துணிச்சலுடன் யாழ்ப்பாணம் சென்று, தமிழ் மக்களுக்கு அது செய்வோம், இது செய்வோம் என, அங்குள்ள மக்களுக்கு காதில் பூச்சுற்றிவிட்டும் வந்திருக்கிறது.
‘அவர்களை சொல்லி குற்றமில்லை’ என்று யாரோ சொன்னது போல, ஏமாற்றுவதையே தொழிலாக கொண்ட இலங்கையின் எதிர்க்கட்சி அணியை குற்றம் சொல்லி பயனில்லை. ‘வீடு கொளுத்துகிற ராசாவுக்கு, கொள்ளி எடுத்து கொடுத்த மந்திரி கணக்காக’ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன் கோஷ்டியினர், ‘யார் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, எமது ஆதரவு பொன்சேகாவுக்கே’ என்று ஒரு மோசமான இனவாதியை ஆதரித்து ஒற்றை காலில் நிற்கையில், யார் என்ன செய்துவிட முடியும்?
இந்த நெருக்கடியான காலகட்டத்தில், தமிழ் மக்கள் தாமாகவே முன்வந்து, தமது வரலாற்று பட்டறிவிலிருந்து சரியாக சிந்தித்து செயல்பட்டால் ஒழிய, அவர்களுக்கு வேறு ஒருவரும் விமோசனத்தை கொண்டு வந்துவிட போவதில்லை.
0 Response to "யாழ்ப்பாணத்து மக்களின் காதில் பூச்சுற்றிய முன்னாள் பிரதம நீதியரசர்!"
แสดงความคิดเห็น