jkr

இதுவரை செய்த தவறையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இப்போதும் செய்கிறது-சம்பந்தனின் அறிவிப்பு தமிழ்ச்சமூகத்தின் குரல் அல்ல!


தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதுவரை காலமும் செய்து வந்த தவறையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறதென அமைச்சரவை பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் சமூகத்தின் விடிவுக்காக இதுவரை என்ன செய்துள்ளது எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பினார். சம்பந்தனின் கொள்கை தமிழ் சமூகத்தின் கொள்கை அல்ல என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அநுஷ பல்பிட உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் குறிப்பிடு கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நாட்டில் சட்டம், ஒழுங்கு, சமாதானம், ஸ்திரத்தன்மை, ஜனநாயகம் மற்றும் வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கான வாழ்வுரிமை என்பவற்றை நிலைநாட்டினார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பல பிரிவுகளாக தற்பொழுது பிளவுபட்டுள்ளது. அதில் சம்பந்தன் பிரிவினர் ஜனாதிபதியை பழிவாங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். புலிகளின் பிடியில் சிக்கித் தவித்து வந்த தமிழ் மக்களின் உரிமைகளை மீளப் பெற்றுக் கொள்ள சம்பந்தன் என்ன பங்களிப்பை செய்துள்ளார் என்று அமைச்சர் வினா எழுப்பினார்.

யுத்தம் முடிவடைந்த கையோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவதிலும், வட பகுதிக்கான முதலீடுகளிலும், அபிவிருத்திகளிலும் மற்றும் தமிழ் சமூகத்தின் ஏனைய தேவைகளிலும் கூடிய கவனம் செலுத்தினார்.

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக பல பில்லியன் ரூபாவை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொகையானது அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்த தொகையை விட பெருமளவு அதிகமானதாகும் என்றும் அமைச்சர் சொன்னார்.

இயல்பில் பிடிவாத போக்குடைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எல்லா சந்தர்ப்பங்களிலும் புலிகளுக்கு சாதகமான நிலைப்பாட்டையே கடைப்பிடித்து வந்ததால், தமிழ் சமூகம் அதன் தற்போதைய நிலை குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

சம்பந்தன் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டதால் தமிழ் சமூகத்திற்கு தேவையானவற்றை அவர்களால் செய்து கொடுக்க முடியாமல் போனது. இவர்களால் தமிழ் சமூகத்தினர் பல்வேறு இன்னல்களுக்கே முகம் கொடுத்து வந்தனர். ஆனால், தமிழ் சமூகத்தை அழிவிலிருந்து பாதுகாத்து பூரண கெளரவத்தை பெற்றுக் கொடுத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
எனவே மக்கள் ஜனாதிபதியுடன் உள்ளனர்.

பயங்கரவாதத்தை ஜனாதிபதி முற்றாக இல்லாதொழித்ததால் சம்பந்தன் குழுவினர் ஜனாதிபதியை வைராக்கியத்துடனும், பழிவாங்கும் நோக்குடனும் பார்க்கின்றனர். ஏற்கனவே பிரிவினை வாதத்தை ஏற்படுத்திய அவர்கள் தற்பொழுது வேறு வழிகளில் அதனை செயலுருப்பெற முயற்சிக்கின்றனர்.

தமிழ் சமூகத்திற்கு தேவையான சகலவற்றையும் பெற்றுக் கொடுத்தது அரசாங்கமே. நாங்கள் தனிப்பட்டவர்களுக்காக செய்வதை விட சமூகத்திற்காக செய்வதையே முக்கியமாக கருதுகின்றோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இதுவரை செய்த தவறையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இப்போதும் செய்கிறது-சம்பந்தனின் அறிவிப்பு தமிழ்ச்சமூகத்தின் குரல் அல்ல!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates