jkr

செய்தியறிக்கை


போர்த்துகீஸியப் பிரதமர் ஹோஸே சாக்ரடீஸ்
போர்த்துகீஸியப் பிரதமர் ஹோஸே சாக்ரடீஸ்

ஓருபால் உறவுக்காரர்கள் திருமணத்துக்கு போர்த்துகீஸிய நாடாளுமன்றம் ஒப்புதல்

போர்த்துகீஸிய நாடாளுமன்றம், அந்நாட்டில் வாழும் ஆண் மற்றும் பெண் ஒருபால் உறவுக்காரர்களுக்கு இடையிலான திருமணத்தை அனுமதிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.

இதன் மூலம் தீவிர ரோமன் கத்தோலிக்க நாடான போர்த்துகல், ஒருபால் உறவுக்காரகளின் திருமண பந்தத்தை அங்கீகரிக்கும் ஐரோப்பிய நாடுகளின் பட்டியலில் ஆறாவது நாடாக இணைந்திருக்கிறது.

இந்த சட்டமானது, தேவையற்ற வேதனையை அளித்துவந்த ஒரு அநீதியை சரிப்படுத்தும் ஒன்றாக இருக்கும் என்று போர்த்துகீஸியப் பிரதமர் ஹோஸே சாக்ரடீஸ் அவர்கள் கூறியுள்ளார்.

அதேசமயம் இந்த சட்டமானது, ஆண் மற்றும் பெண் ஒருபாலுறவுக்கார தம்பதிகள் மற்ற குழந்தைகளை தத்தெடுக்க அனுமதிக்கவில்லை. இதுபோன்ற தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கு மற்ற சில நாடுகள் அனுமதிக்கின்றன.

இந்த சட்டத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி அனுமதி அளிக்கும் பட்சத்தில், ஒருபால் உறவுக்காரர்களின் திருமண பந்தத்தை எதிர்க்கும் பாப்பரசர் பெனடிக்ட் அவர்களின் போர்த்துகல் வருகைக்கு முன்பே இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்.


இரானில் எதிர்க்கட்சித் தலைவர் சென்ற கார் மீது துப்பாக்கி சூடு

மெஹ்தி கரூபி
இரானின் வடக்கு நகரான காஸ்வினில் எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான மெஹ்தி கரூபி அவர்களின் காரின் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவரது இணையத்தளம் கூறியுள்ளது.

அண்மைய போராட்டங்களில் கொல்லப்பட்ட எதிர்க்கட்சி ஆதரவாளர் ஒருவரின் அஞ்சலி வைபவத்தில் கலந்துகொண்டிருந்த கரூபி அந்த தருணத்தில் காரில் இருந்திருக்கிறார். ஆனால் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக செய்திகள் இல்லை.

அரசாங்க ஆதரவு பசிஜ் கிளர்ச்சிக் குழுவின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களால் சுற்றிவளைக்கப்பட்டதாக அவரது இணையத்தளம் கூறும் ஒரு வீட்டில் இருந்து வியாழன்று கரூபி அவர்கள் வெளியேறிய சிறிது நேரத்தில் அந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.


விமான தகர்ப்பு முயற்சி எதிரொலி: அமெரிக்காவில் பாதுகாப்பு மறுசீரமைப்புக்கு அதிபர் ஒபாமா உத்தரவு

நத்தார் தினத்தில் டெட்ராய்ட்டுக்கு அருகே விமானம் ஒன்றை குண்டுவைத்து தகர்க்க மேற்கொண்ட முயற்சி பற்றிய அறிக்கை, தொடர்ச்சியான பல தவறுகளை சுட்டிக்காட்டியதை அடுத்து, ஒரு பாதுகாப்பு மறுசீரமமைப்புக்கு அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

மிகவும் கடுமையாக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், உளவுத்தகவல்களை மிகவும் அடிக்கடி பரிமாறிக்கொள்ளுமாறும், அவை குறித்து மிகவும் வேகமாக செயற்படுமாறும், சந்தேகத்துக்குரியவர்களின் பட்டியலை மேலும் செயற்திறனுடன் தயாரித்து, ஆபத்தானவர்களை விமானப் பயணங்களில் இருந்து தள்ளிவைக்குமாறும் தனது உளவுப்பிரிவினருக்கு அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

அல்கயீதாவினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் தோல்வியற்ற தீர்வு என்று எதுவும் கிடையாது என்று ஒப்புக்கொண்டுள்ள அவர், மிகவும் கவனமாக செயற்பட வேண்டும் என்பதில் ஒருபடி அமெரிக்கா முன்னோக்கி செயற்பட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இறைவன் பெயர் சர்ச்சை: மலேசியாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்

தீக்கிரையாகி நிற்கும் தேவாலயம்
மலேசியாவில் இருக்கும் முஸ்லீம் அல்லாதவர்களும் கடவுளை குறிப்பதற்கு அல்லா என்கிற சொல்லை பயன்படுத்தலாம் என்கிற சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக முஸ்லீம் குழுக்கள் சில மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஆர்பாட்டங்கள் நடத்துவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தீப்பந்தங்கள் வீசி தாக்கப்பட்டன.

இந்த தேவாலயங்களின் ஒன்றின் அலுவலகம் மோசமாக தீக்கிரையானது. மற்ற கட்டிடங்கள் குறைந்த அளவில் பாதிக்கப்பட்டன.

இந்த சம்பவங்கள் நடந்ததற்குப் பின்னர், கோலாலம்பூரில் கூடிய பல முஸ்லீம் குழுக்களைச் சேர்ந்தவர்கள், மலேசியாவில் இருக்கும் ரோமன் கத்தோலிக்க செய்தித்தாள் கிறிஸ்தவ மத நோக்கில் கடவுளை குறிப்பதற்கு அல்லா என்கிற வார்த்தையை பயன்படுத்தலாம் என்று நீதிமன்றம் அளித்த சமீபத்திய தீர்ப்புக்கு எதிரான தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.

இவர்களின் ஆர்பாட்டம் அமைதியாக நடந்து முடிந்தன.


ஏற்றுமதியில் உலகில் முதலிடம் பெறுகிறது சீனா

உலகின் மிகப்பெரிய ஏற்றுமதி செய்யும் நாடு என்கிற இடத்தில் இருந்த ஜெர்மனியை பின்னுக்கு தள்ளிவிட்டு அந்த இடத்தை சீனா பிடித்திருக்கிறது.

பிராங்க்பர்டில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி கடந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில், ஜெர்மனி ஆயிரத்தி ஐம்பது பில்லியன் டாலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது.

இதே காலகட்டத்தில் சீனாவானது, இதைவிட இருபது பில்லியன் டாலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்ததாக, சீனா வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

2009ஆம் ஆண்டின் கடைசி மாதத்தில் இந்த இருநாடுகள் ஏற்றுமதி செய்த பொருட்களின் புள்ளிவிவரங்கள் இந்த நிலையைப் பெரிதாக மாற்றாது என்றே கருதப்படுகிறது.

இந்த தகவல்கள் உறுதிசெய்யப்பட்டால், உலக அளவிலான சீனாவின் முதன்மைத்துவம் இதன் மூலம் உறுதிசெய்யப்படும்.

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் என்கிற இடத்திலிருக்கும் ஜப்பானை புறந்தள்ளிவிட்டு அந்த இடத்திற்கும் சீனா இவ்வாண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியரங்கம்
வீடியோ காட்சி
வீடியோ காட்சி

துப்பாக்கி சூடு வீடியோ உண்மையானதுதான்: ஐ.நா. புலனாய்வாளர்கள்

இலங்கையின் அரச படையினர் போன்ற சீருடை அணிந்தவர்கள், கைகள் கட்டப்பட்டு நிர்வாணமாக்கப்பட்ட சிலரை சுட்டுக்கொல்வதுபோல சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்த வீடியோ காட்சி உண்மையானவைதான் என ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட புலனாய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஜனநாயகத்துக்கான இலங்கைப் பத்திரிகையாளர்கள் என்னும் அமைப்பினாலேயே இந்தத் துப்பாக்கிச் சூட்டுக் காட்சி முதலில் அனைவருக்கும் அனுப்பட்டிருந்தது.

ஆரம்பம் முதலே இலங்கை அரசாங்கத் தரப்பினர் இந்த வீடியோ போலியானது என்று கூறிவருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்த ஐ.நா.வின் சிறப்பு நிபுணர்கள், இந்த வீடியோ குறித்த அனைத்து சந்தேகங்களையும் களைந்துவிட்டதாக சட்டத்துக்கு புறம்பான, எதேச்சதிகார மற்றும் விசாரணையற்ற கொலைகள் குறித்த ஐ.நா.வின் சிறப்புத் தூதுவர் பிலிப் அல்ஸ்டன் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தால் இந்த வீடியோ குறித்து ஆராயுமாறு நியமிக்கப்பட்ட குழுவின் முடிவுகளில் குறை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டனவா என்பது குறித்து சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஐ.நா.வின் சிறப்புத் தூதர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த வீடியோ விடுதலைப் புலிகளின் பிரச்சாரமே என பிரிட்டனுக்கான இலங்கையின் தூதுவர் ஜஸ்டிஸ் நிஹால் ஜயசிங்க கூறியுள்ளார்.


மட்டக்களப்பு மாநர முதல்வர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு

சிவகீதா பிரபாகரன்
இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பளராகப் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கப்போவதாக ஆளும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையத்தி்ல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைப் பெற்றுதான் இந்த முடிவை தான் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் சேகு இசதீனும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரை ஆதரிக்கப்போவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தான் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், ஒரு வார காலத்திற்குள் தனது முடிவை அறிவிக்கவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


பத்திரிகையாளர் லசந்த கொலை: ஓராண்டு நிறைவு

இலங்கையில் சண்டே லீடர் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த லசந்த விக்ரமதுங்க ஒரு ஆண்டுக்கு முன்பு இதே நாளில் கொழும்பில் சுட்டு்க் கொல்லப்பட்டிருந்தார்..

லசந்த கொலைக்கு காரணமானவர்கள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவோ தண்டிக்கப்படவோ இல்லாத நிலைதான் அங்கேயுள்ளது.

லசந்தாவின் கொலை குறித்தும் இலங்கையில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை குறித்தும் கனடாவில் இருக்கும் ஊடகவியலாளரும், கவிஞருமான சேரன் தமிழோசையிடம் தெரிவித்த கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


கடும் குளிரில் ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பா எங்கும் மிக மோசமான பனிப்பொழிவு ஏற்பட்டு பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பிரிட்டன் ஒரு தலைமுறை கண்டிராத கடும் பனியிலும் குளிரிலும் உறைந்துபோயுள்ளது.

ஸ்காட்லாந்திலுள்ள குன்றுப் பிரதேசத்தில் சில இடங்களில் வியாழன் இரவு -22.3 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெப்ப நிலை தாழ்ந்து போனது.

செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை பார்க்கையில், பிரிட்டன் நிலப்பரப்பு முழுக்கவுமே வெண் கம்பளம் விரித்தார்போல முழுமையாக பனியால் மூடப்பட்டிருந்தது.

ஜெர்மனியில் இன்று வெள்ளிக்கிழமை பல இடங்களில் 40 செண்டிமீட்டர் அளவிலான பனிப் பொழிவு இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. கூடவே வலுவான காற்றும் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates