jkr

செய்தியறிக்கை

செய்தியறிக்கை
சம்பவம் நடந்த ஊரைக் காட்டும் வரைபடம்
சம்பவம் நடந்த ஊரைக் காட்டும் வரைபடம்

பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது 40 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் கைப்பந்து சுற்றுப்போட்டி ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தினர் மீது காரில் வந்த தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடித்துத் தாக்கியதில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இரு கைப்பந்து அணிகளையும் பார்க்க கூட்டம் கூடியபோது, அந்த தற்கொலையாளி களத்துக்குள்ளே வண்டியை செலுத்திவந்து வெடிக்கச் செய்ததாக செய்திகள் கூறுகின்றன.

சுற்றிவரவுள்ள கட்டிடங்களை நிர்மூலம் செய்த குண்டுவெடிப்பு, மக்களை இடிபாடுகளில் சிக்கச் செய்தது.

அண்மைக் காலம் வரை தலிபான்களின் கோட்டையாக பார்க்கப்பட்ட லக்கி மார்வத் நகருக்கு அருகே உள்ள இந்த தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து தலிபான்களை பாகிஸ்தான் இராணுவமும், உள்ளூர் கிளர்ச்சிக்காரர்களும் அண்மையில்தான் விரட்டியிருந்தனர்.


கடும் நெருக்கடியில் இரான்: மீர் ஹுசைன் முஸாவி

மீர் ஹுசைன் முஸாவி
இரான் ஒரு கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கிறது என்றும், அதை அந்நாட்டு அதிகாரிகள் மறுப்பதால் நெருக்கடி இல்லை என்றாகிவிடாது என்றும் அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மீர் ஹுசைன் முஸாவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனது உடன்பிறந்தவர் மகன் ஒருவரும், பிறரும் கடந்த ஞாயிறன்று நடந்த அரசு எதிர்ப்பு கூட்டத்தின்போது கொல்லப்பட்டதன் பின்னர் முஸாவி வெளியிடும் முதல் அறிக்கை இதுதான்.

அமைதிகரமாக ஆர்ப்பாட்டம் செய்வதற்கு மக்களுக்குள்ள உரிமையை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என முஸாவி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

ஆர்ப்பாட்டங்களின்போது வன்முறையைத் தூண்டியது அதிகாரிகள்தான் என்று முஸாவி பழிசுமத்தியுள்ளார்.

தன்னையோ பிற எதிர்க்கட்சித் தலைவர்களோ கைதுசெய்தாலும் சரி, கொன்றாலும் சரி ஆர்ப்பாட்டங்கள் நின்றுவிடப்போவதில்லை என முஸாவி சூளுரைத்துள்ளார்.


நிராயுத பாணிகள் கொல்லப்பட்ட சம்பவம்: அமெரிக்கர்கள் நீதியை நிலைநாட்டவில்லை என்கிறது இராக்

இராக்கில் பிளாக் வாட்டர் நிறுவன பாதுகாப்பு அதிகாரிகள்
பாக்தாத்தில் இரு வருடங்களுக்கு முன்னர் நிராயுத பாணியான பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட விடயத்தில் பிளாக் வாட்டர் நிறுவனத்தின் 5 பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அமெரிக்காவில் நிராகரிக்கப்பட்டதால், நீதி நிலைநாட்டப்படாமல் போய்விட்டது என்று இராக்கிய அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்த தீர்ப்பு ஏற்கப்பட்ட ஆதரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டதே ஒழிய, அது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் வழங்கப்படவில்லை என்று இங்கு லண்டனில் இராக்கிய தூதரகத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்தார்.

மேன்முறையீடு வெற்றிபெறாத பட்சத்தில் மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த வழக்கு இப்போது இராக்கில் எடுக்கப்பட வேண்டுமென்று இராக்கின் தேசிய பாதுகாப்புக்கான முன்னாள் ஆலோசகரான மொவ்வபாக் அல் ருபைய் கூறியுள்ளார்.


மெலமின் கலப்படம்: சீனாவில் பால் பண்ணை மூடப்பட்டது

மெலமின் கலப்படத்தால் குழந்தைகள் உயிரிழந்திருந்தன
சீனாவில் பால் உற்பத்திப் பொருட்கள் சிலவற்றில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இரசாயனமான மெலமின் கலப்படம் காணப்பட்டதை அடுத்து ஷாங்காய் நகரின் பால் பண்ணை ஒன்றை மூடியதுடன், அதன் மூன்று மேலாளர்களை அரசு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

2008ஆம் வருடம் மெலமின் கலப்படம் என்ற விவகாரம் சீனாவில் தேசிய அளவில் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருந்தது.

சில பொருட்களில் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிமமாக மெலமின் கலப்பு இருந்ததே ஷாங்காய் பாண்டா பால் பண்ணை மூடப்படக் காரணம் என்று சீன அரசு செய்தி நிறுவனமான ஸின்ஹுவா கூறுகிறது.

2008ல் மெலமின் கலப்படம் கொண்ட பொருட்களை உட்கொண்டதால் குறைந்தது 6 குழந்தைகள் உயிரிழந்தும் லட்சக்கணக்கான குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டும் இருந்தன.


கொரியா எஃகு உற்பத்தி நிறுவனம் ஒரிஸ்ஸாவில் நிலம் கையகப்படுத்துவதற்கு இந்திய அரசு ஒப்புதல்

இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலத்தில் எஃகுத் தொழிற்சாலை ஒன்றை அமைப்பது தொடர்பில் தென்கொரிய எஃகுத் உற்பத்தி நிறுவனமான பொஸ்கோ அம்மாநிலத்தின் வனப் பகுதியில் நிலத்தை கையகப்படுத்துவதற்கான இறுதி ஒப்புதலை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.

தொழிற்சாலை அமைப்பதற்கென வனப் பகுதியில் சுமார் மூவாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை இந்நிறுவனம் கையகப்படுத்த இந்தியாவின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் இறுதி ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட மிகப் பெரிய வெளிநாட்டு முதலீடு என்று கூறப்படும் 1200 கோடி டாலர்கள் பெறுமதி கொண்ட இந்த எஃகுத் தொழிற்சாலை திட்டத்துக்கு மொத்தம் நான்காயிரம் ஏக்கர்கள் நிலம் தேவைப்படுகிறது.

இத்தொழிற்சாலை வருவதால் தங்களுடைய விவசாய நிலம் பறிபோகும் என்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர நேரிடும் என்றும் கூறி கிராமவாசிகள் அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதால், இத்திட்டத்தின் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தாமதமடைந்துள்ளன.

செய்தியரங்கம்
நீதி தேவதை

குற்றச்செயலால் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க இந்தியாவில் சட்டத்திருத்தம்

குற்றச்செயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு அளிக்கப்படுவதை சட்ட உரிமையாக்கும் வகையில் இந்தியாவின் குற்றவியல் நடைமுறைச்சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

இந்திய குற்றவியல் நடைமுறைச்சட்டத்தில் பல்வேறு முக்கிய திருத்தங்களை இந்திய நடுவணரசு அறிவித்திருக்கிறது.

இதன்படி, குற்றச்செயலால் பாதிக்கப்பட்டவருக்கு, அவரது பாதிப்புக்கேற்ற இழப்பீட்டை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை காலமும், சம்பந்தப்பட்ட வழக்கை விசாரிக்கும் நீதிபதி தமது தீர்ப்பில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு உத்தரவிட்டால் மட்டுமே குற்றச்செயலால் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கப்படும்.

இந்த நிலை மாறி, இனிமேல் குற்றச்செயலால் பாதிக்கப்பட் டவர்கள் அவர்களின் பாதிப்புக்களுக்கேற்ற இழப்பீட்டை பெறும் நடைமுறை எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் விடுவிக்கப் பட்டாலோ, அல்லது அவருக்கு அந்த குற்றத்திற்கு ஏற்ற தண்டனை அளிக்கப்படாமல் எளிதான தண்டனை அளிக்கப் பட்டதாக அந்த வழக்கின் புகார்தாரர் கருதினாலோ, அந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் உரிமை, புகார் தாரருக்கு அளிக்கும் வகையிலும் சட்டத்திருத்தம் செய்யப்பட் டிருக்கிறது. இதுவரை காலமும் இப்படியான மேல்முறையீடு செய்யும் உரிமை அரசு வழக்கறிஞருக்கு மட்டுமே இருந்து வந்தது.

மேலும், ஒரு குற்றச்செயலால் நேரடியாக பாதிக்கப்பட்டவர் மட்டுமல்லாமல், அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவரும் புகார் அளிப்பதற்கு வகை செய்யும் சட்டத்திருத்தமும் செய்யப் பட்டிருக்கிறது.
இந்த சட்டத்திருத்தங்கள் அனைத்தும், குற்றச்செயல்கள் தொடர்பிலான நீதிமன்ற நடைமுறைகளை எளிமைப்படுத்து வதோடு, குற்றச்செயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கின் விசாரணையில் மேலதிக உரிமையை அளிக்கும் என்றும் இதன் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த சட்டத்திருத்தங்கள் குறித்து, ஹிந்து நாளிதழின் சட்டவிவகாரங்களுக்கான செய்தியாளர் ஜெ வெங்கடேசன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரன் காலமானார்

மாரடைப்பில் காலமான அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனுக்கு வயது 52. இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவர், தனது அரசியலை மலையக மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் ஒரு இளைஞனாக ஆரம்பித்தார்.

கம்யூனிஸ கோட்பாடுகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட சந்திரசேகரன், அதேவேளை மலையகத்தில் அப்போது பெரும் அரசியல் தலைவராக திகழ்ந்த சௌமிய மூர்த்தி தொண்டமானின் செயற்பாடுகளாலும் ஈர்க்கப் பட்டிருந்ததாக கூறுகிறார் சிறுவயது முதல் அவரை அறிந்தவரும், அவரது மலையக மக்கள் முன்ன ணியை ஸ்தாபித்த முதல் நால்வரில் ஒருவரும், அந்தக் கட்சியின் முன்னாள் செயலாளருமான பி. ஏ. காதர்.

அமைச்சர் சந்திரசேகரன்
அமைச்சர் சந்திரசேகரன்

இலங்கையில் தொடர்ந்த வன்செயல்கள் காரணமாக மலையக மக்கள் குறித்த சில துணிச்சல் மிக்க முடிவுகளை எடுத்த சந்திரசேகரன், படிப்படியாக தனது அரசியல் தொடர்புகளை வடக்கு கிழக்கு அரசியல் அமைப்புக்களுடனும் விஸ்தரித்துக்கொண்டார்.

இதன் காரணமாக ஒரு கட்டத்தில் தனது மலையக மக்கள் முன்னணியை ஆரம்பிக்கும் முன்னதாக, இ. தொ. காவில் இருந்து வெளியேறிய நிலையில் புளொட் அமைப்பின் அரசியல் பிரிவின் சின்னத்தில் மலையகத்தில் அவர் தேர்தலில் போட்டியிட்டார்.

படிப்படியாக வளர்ந்த அவரது கட்சி பெற்ற ஒற்றை ஆசனம் தான் 2001 இல் சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க ஆட்சியமைக்க உதவியது. அந்த ஆட்சி யில் அவர் அமைச்சரும் ஆனார்.

ஆனால் அதுதான் சந்திரசேகரனின் அரசியல் வாழ்க்கையிலும், மலையக மக்களின் அரசியலிலும் பல பின்னடைவுகளுக்கு வழி வகுத்ததாக கூறுகிறார் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகரும், அதன் முன்னாள் செயலாளருமான பி. ஏ. காதர். அவரது செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


நவீன நீச்சல் உடைக்கு தடை

நீச்சல் வீரர்களின் வேகம் அதிகரிக்க உதவும் அதிநவீன நீச்சல் உடைகளை போட்டிகளின்போது வீரர்கள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தண்ணீரில் நனைந்தாலும் ஈரம் அடையாத இந்த அதிநவீன நீச்சல் உடைகள் புழக்கத்துக்கு வந்ததிலிருந்து நீச்சல் போட்டிகளின் பல்வேறு பிரிவுகளிலுமாக 250க்கும் அதிகமான புதிய உலக சாதனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நீச்சல் வீரர்களின் மிதக்கும் தன்மையையும் அவர்கள் நீரில் பயணிக்கும் வேகத்தையும் இந்த உடை அதிகரித்திருந்தது.

நவீன நீச்சல் உடையணிந்த வீரர்
நவீன நீச்சல் உடையணிந்த வீரர்

இந்த உடைகளின் புழக்கம் தொடர்பில் பெரும் சர்ச்சையும் நீதிமன்ற வழக்குகளும் ஏற்பட, இவற்றைப் பயன்படுத்த தடை விதிப்பது என்று தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போட்டிகளின்போது ஒரு வீரர் அணியக்கூடிய நீச்சல் உடை எப்படிப்பட்ட துணியால் ஆனது, அது எந்த அளவுக்கு மொத்தமாக இருக்கலாம், உடலை எந்த அளவில் மூடும் விதமாக அந்த உடைகள் இருக்கலாம் போன்றவை தொடர்பில் கடுமையான விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates