jkr

செய்தியறிக்கை


உதவிப் பொருட்கள்
உதவிப் பொருட்கள்

ஹெய்ட்டியில் அவசர உதவிகள் சென்று சேர ஆரம்பித்துள்ளன

ஹெய்ட்டியில் கடந்த செவ்வாயன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பேரழிவுக்குள்ளான தலைநகர் போர்ட் ஒ பிரான்சின் சில பாகங்களில் தன்னார்வ தொண்டர்கள் மற்றும் அமெரிக்க இராணுவத்தினரின் உணவு மற்றும் குடிநீர் விநியோகங்கள் காரணமாக தற்போது இறுதியாக அவசர உதவிகள் சென்றடைந்து வருகின்றன.

அமெரிக்கப் படையினர் ஒருவாறாக விமானநிலையப் பகுதியைக் கடந்து நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுவரும் மலைப்பகுதியொன்றில் முகாமிட்டு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஐ.நாவின் உலக உணவுத்திட்டம், ஆக்ஸ்பார்ம் என்ற பிரித்தானிய தொண்டு நிறுவனம், உள்ளிட்ட அமைப்புக்கள் உணவு மற்றும் குடிநீர் விநியோகங்களில் ஈடுபட்டுள்ளன.

ஆனால் பணியாளர்களால் சீராக எட்ட முடியாதுள்ள சில பகுதிகளில் இன்னும் அவசர உதவிகள் தேவைப்பட்ட வண்ணமே உள்ளன.

இதற்கிடையே, ஹெய்ட்டி நிலமைகளை பார்வையிடுவதற்காக ஜக்கிய நாடுகளின் செயலர் பான் கீ மூன் அங்கு பயணமாகியுள்ளார்.

இந்த தசாப்தத்தின் மிக மோசமான மனிதாபிமான பிரச்சனையாகியுள்ள ஹெய்ட்டிக்கு கனத்த இதயத்துடன் செல்வதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

நில நடுக்கத்தால் ஏற்பட்டுள்ள அழிவுகளும் உயிரிழப்புக்களும் மிக அதிகமானவையென அவர் குறிப்பிட்டுள்ளார்.


தெற்கு வசிரிஸ்தான் தாக்குதலில் 15 ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளனர் - பாகிஸ்தான்

வசிரிஸ்தானில் பாக் துருப்புகள்
வசிரிஸ்தானில் பாக் துருப்புகள்

ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகாமையில் இருக்கின்ற தெற்கு வசிரிஸ்தானில், அமெரிக்க விமான தாக்குதலில் குறைந்தப்பட்சம் 15 ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலிபான்களின் ஆதரவாளர்கள் என்று கண்டறியப்பட்டவர்களின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் தலிபான்களின் தலைவரான ஹகிமுல்லா மெஹ்சுத் கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் காயமடைந்தார். அவர் இந்த பகுதியில் தான் இருப்பதாக பிபிசி செய்தியாளர் கூறுகின்றார்.


அமைச்சரவை பட்டியலை அங்கிகரிக்காமல் ஆப்கான் நாடாளுமன்றம் விடுமுறையில் செல்லவுள்ளது

ஆப்கான் நாடாளுமன்றம்
ஆப்கான் நாடாளுமன்றம்

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் அதிபர் ஹமீது கர்சாயின் அமைச்சரவை பரிந்துரையில் பாதியை கூட அங்கிகரிக்காமல் குளிர்கால விடுமுறைக்காக மூடவுள்ளது.

திங்கட்கிழமையன்று விடுமுறையில் செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிப்ரவரி 28 ஆம் தேதியன்று தான் திரும்புவார்கள் என்று நாடாளுமன்றத்தின் சார்பில் பேசவல்லவர் ஒருவர் கூறினார்.

இதற்கு முன்பு அதிபர் ஹமீது கர்சாயால் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு அமைச்சரவை பட்டியலில் பெரும்பாலானவர்களை நிராகரித்து கர்சாய்க்கு நாடாளுமன்றம் வலுவான அரசியல் அடியை கொடுத்தது.

தனது அதிகாரத்தை பயன்படுத்தி குளிர்கால விடுமுறை முடிவடைவதற்கு முன்பாக நாடாளுமன்றத்தை அதிபர் ஹமீது கர்சாய் கூட்டுவாரா என்பது தெரியவில்லை.


இராக் எண்ணெய் வயல் ஒப்பந்தங்கள் கையொப்பமாகி வருகின்றன

இராக் எண்ணெய் வயல் ஒன்று
இராக் எண்ணெய் வயல் ஒன்று

இராக்கின் மிகப்பெரிய எண்ணெய் வயல்களில் ஒன்றை மேம்படுத்துவதற்கான இறுதி ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இராக்கின் எரிபொருள் தொழிற்துறையை மேம்படுத்துவதற்காக தொடர்ச்சியாக பல ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.

சுமார் 12.5 பில்லியன் டாலர் மதிப்பிலான மஜ்நூன் எண்ணெய் வயலை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை கடந்த மாதம் ராயல் டச் ஷெல் நிறுவனமும், மலேசியாவின் பெட்ரோனஸ் நிறுவனமும் சேர்ந்து வென்று இருந்தன.

இது போன்ற ஒப்பந்தங்கள் மூலம் இராக் எண்ணெய் தயாரிக்கும் நாடுகளில் மூன்றாவது இடத்தை எட்ட முடியும் என இராக் அரசாங்கம் நம்புகிறது.

செய்தியரங்கம்
முன்னாள் முதலமைச்சர் ஜோதிபாசு
முன்னாள் முதலமைச்சர் ஜோதிபாசு

மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சர் ஜோதிபாசு காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சருமான ஜோதிபாசு அவர்கள், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மரணமடைந்தார்.

95 வயதான ஜோதிபாசு, நிமோனியா காய்ச்சல் காரணமாக, இந்த மாதம் முதல் தேதி கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 17 தினங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஞாயிறு காலை 11 மணி 47 நிமிடங்களுக்கு அவரது உயிர் பிரிந்தது

ஜோதிபாசு தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாகக் கொடுத்திருக்கிறார். செவ்வாய்கிழமை இறுதியாத்திரைக்குப் பிறகு, அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அவரது சடலம் ஒப்படைக்கப்படும்.

இந்திய அரசியலிலும், இடதுசாரிக் கொள்கைகளுக்கு வலுச்சேர்ப்பதிலும் முக்கியப் பங்கு வகித்த ஜோதிபாசு, 1977-ம் ஆண்டு முதல் 23 ஆண்டுகள் தொடர்ந்து மேற்குவங்க மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தார். அதன் மூலம், நீண்ட காலம் முதலமைச்சர் பதவி வகித்தவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

இந்திய அரசியலில் எளிமையான, தன்னலமற்ற தலைவர்களாகக் கருதப்பட்ட ஜோதிபாசு, ரஷ்யப் புரட்சிக்கு முன்பு பிறந்து இதுவரை உயிரோடு இருந்த கடைசி கம்யூனிஸ்ட் தலைவராகவும் பார்க்கப்படுகிறார்.


டப்ளின் விசாரணைக்குழு சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது

விசாரணை குழு பார்வையாளர்கள்
விசாரணை குழு பார்வையாளர்கள்

இலங்கையில் கடந்த மே மாதத்தில் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்ட மோதல்கள் நடைபெற்ற காலப்பகுதியில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகளை நடத்திய டப்ளின் விசாரணைக் குழுவொன்று இலங்கை அரசு மீது குற்றச்சாட்டுக்களுக்கான பொறுப்பை சுமத்தியுள்ளது.

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் விசாரணைக்காக கூடிய டப்ளின் போர்க்குற்றங்கள் தொடர்பான நியாயசபை இந்த தீர்மானத்தை இறுதியாக வெளியிட்டுள்ளது.

இலங்கையில் போர் நடைபெற்ற காலப்பகுதியில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டமை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் புரிந்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களையும் இலங்கை அரசு மீது சுமத்தியுள்ள இந்ந விசாரணைக்குழு இனப்படுகொலை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்த தீர்மானத்தை எட்டுவதற்கு மேலும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டியுள்ளதமாக தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த நியாய சபையின் தீர்மானத்தை இலங்கை அரசு அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.


ஹெய்ட்டி நிலநடுக்கத்தின் மையப்புள்ளியில் பெரும் பாதிப்பு

நிலநடுக்கத்தினால் பெரும்பாலான கட்டிடங்கள் பெரும் சேதமடைந்துள்ளன
நிலநடுக்கத்தினால் பெரும்பாலான கட்டிடங்கள் பெரும் சேதமடைந்துள்ளன

ஹெய்ட்டியில் நிலநடுக்கம் ஏற்பட்ட மையபுள்ளியில் இருந்து வரும் தகவல்கள், தலைநகரை விட இந்த பகுதியில் பாதிப்பு மிக மிக அதிகமாக இருப்பதாக தெரிவிக்கின்றன என பிபிசி செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தலைநகர் போர்த் ஒ பிரான்ஸ்க்கு மேற்கே இருக்கின்ற லேகோனில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அங்கு இருக்கின்ற கட்டிடங்கள் அனைத்துமே நாசமாகி, பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

ஐ.நா வின் கணக்குப்படி இந்த நகரத்தில் 80 முதல் 90 சதவீத கட்டிடங்கள் நாசமாகியுள்ளன. இந்த நகரத்தில் தப்பி உயிர்பிழைத்த மக்கள் அருகில் இருக்கின்ற கரும்பு தோட்டங்கள் அல்லது சதுப்புநில காடுகளில் தஞ்சம் அடைந்திருப்பதாக பிபிசி செய்தியாளர் மார்க் டோயல் கூறுகின்றார்.

இதே நேரத்தில் தலைநகர் போர்த் ஒ பிரான்ஸில் அமைப்புகளிடம் இருந்து உதவிகளை எதிர்நோக்கி காத்திருக்கும் மக்களிடம் ஒரு விதமான பதற்ற நிலை காணப்படுகிறது.

இப்போது ஆக்ஸ்பாம், ஐ,நா போன்றவை உணவு மற்றும் குடிநீரை விநியோகித்து வருகின்றன. மக்களுக்கு தற்போது சென்று சேரும் உதவிப்பொருட்களின் அளவு குறைவாக இருந்தாலும், குறைந்தப்பட்சம் இதுவாவது தற்போது நடக்கிறதே என்ற நிறைவு காணப்படுவதாக அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

செவ்வாய்கிழமையன்று ரிக்டர் அளவு கோளில் 7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில் 50,000 முதல் 1 லட்சம் பேர் வரையில் பலியாகியிருக்கலாம் என பான் அமெரிக்கன் சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ஹெய்ட்டி பிரதமரோ, இந்த நிலநடுக்கத்தில் குறைந்தப்பட்சம் ஒரு லட்சம் பேராவது பலியாகிருப்பார்கள் என்று கூறியுள்ளார்.

இது குறித்த செய்திக்குறிப்பை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates