குஷ்பு பேசியதில் ஆபாசம் இல்லை
திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு தொடர்பாக நடிகை குஷ்பு பேட்டியளித்ததில் எந்தவித ஆபாசமும் இல்லை என்று அவரது வக்கீல், சுப்ரீம்கோர்ட்டில் வாதிட்டார்.
திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு தொடர்பாக, நடிகை குஷ்பூ அளித்த பேட்டி ஒன்று, 2005ம் ஆண்டு, "இந்தியா டுடே' பத்திரிகையில் வெளியானது. இந்தப் பேட்டி பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. தமிழகத்தில் 23 இடங்களில் அவருக்கு எதிராக அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன."இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க வேண்டும். ஆறு மாதங்களில் வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும்' என, 2008ம் ஆண்டு ஏப்ரலில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.இதை எதிர்த்து குஷ்பூ சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவில் நடிகை குஷ்பு, பத்திரிகை ஒன்றுக்கு நான் அளித்த பேட்டியின் அடிப்படையில், என்னை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு எனக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசியல் சார்புடைய சில அமைப்புகள், அரசியல் ஆதாயம் மற்றும் விளம்பரம் தேடும் நோக்கத்தோடும், 2005ம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தல்களை கருத்தில் கொண்டும் எனக்கு எதிராக அவதூறு பிரசாரத்திலும் ஈடுபட்டன.அதனால், அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சென்னை ஐகோர்ட்டின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், அவரின் மனு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பாஞ்சால் மற்றும் சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது குஷ்பூவின் வக்கீல் பிங்கி ஆனந்த் கூறுகையில், "திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு தொடர்பாக, "இந்தியா டுடே' பத்திரிகை, 2005 செப்டம்பரில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய நகரங்களிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, இளம் தலைமுறையினருக்கு செக்ஸ் கல்வி போதிக்க வேண்டியதன் அவசியம் பற்றி குஷ்பூ தெரிவித்தார். அவரின் அறிக்கையில் எவ்விதமான ஆபாசமும் இல்லை,'' என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், "குஷ்பூவின் அறிக்கை வரம்பிற்கு அப்பாற்பட்டது. அதை எளிதில் ஏற்க முடியாது. அதனால், அவர் ஏதும் தவறாக கூறவில்லை என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள்? குஷ்பூவிடம் கேட்ட கேள்வி என்ன, அதற்கு அவர் அளித்த பதில் என்ன என்பதை எல்லாம் நாங்கள் பார்க்க வேண்டும். அதனால், குஷ்பூவின் பேட்டி தொடர்பான முழு விவரங்களையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அதை நாங்கள் பார்க்க வேண்டும். இரண்டு வாரத்திற்குள் இதைச் செய்ய வேண்டும்' என்றனர்.
0 Response to "குஷ்பு பேசியதில் ஆபாசம் இல்லை"
แสดงความคิดเห็น