த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம் நிபந்தனையுடன் விடுதலை
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம் நேற்று முன்தினம் வவனியா மாவட்ட நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் 3 மாதங்களுக்கு பயங்கரவாத தடுப்புப்பிரிவில் கையொப்பம் இடவேண்டும் மற்றும் இன்று வெள்ளிக்கிழமை தனது கடவுச்சீட்டினை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அவருடைய துணைவியாரின் முன்னிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது:-
கடந்த மே மாதம் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த நிலையில் வவுனியா நலன்புரி முகாமில் தங்கியிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டார்.
வன்னியில் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அங்கு படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மனித அழிவுகள் தொடர்பாக வெளிநாடுகளுக்கு தகவல் அளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கனகரத்தினம் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவர் கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு இதுவரை காலமும் விசாரிக்கப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டுள்ள அவர் தற்போது வவுனியா வாடி வீட்டில் தனது குடும்பத்தினருடன் தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட அவரை தமது பிரசாரங்களுக்கு பயன்படுத்தும் வகையில் அரசாங்க தரப்பு முனைப்புகளை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கனகரட்ணம் தமது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அவர் விடுவிக்கப்பட்ட செய்தியை அறிந்துக் கொண்டதாக தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு அவரை இன்னும் சந்திக்கவில்லை என தெரிவித்துள்ளது.
0 Response to "த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம் நிபந்தனையுடன் விடுதலை"
แสดงความคิดเห็น