தனங்கிளப்புச் சந்தியில் இருந்து அருகுவெளிச் சந்தி வரை மக்கள் மீளக்குடியமர்வு!
தென்மராட்சி தனங்கிளப்புச் சந்தியில் இருந்து கேரதீவு நோக்கி அருகுவெளிச் சந்தி வரையிலான 640 ஏக்கர் விவசாய நிலம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் அப்பகுதி மக்களிடம் விவசாய நடவடிக்கைகளுக்காக இன்று கையளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் தேவைகளைக்காக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக இப்பகுதிகள் பொதுமக்களின் பாவனைக்கு இதுவரை விடப்படாது இருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் ஏற்கனவே முதற்கட்டமாக 1450 ஏக்கர் நிலப்பகுதி விவசாயச் செய்கைகளுக்காக அப்பகுதி மக்களிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் கையளிக்கப்பட்டுள்ளதுடன் 2ம் கட்டமாக 525 ஏக்கர் விவசாய நிலம் கையளிக்கப்பட்டு தற்போது அப்பகுதிகளில் நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 13ம் திகதி தனங்கிளப்புப் பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அப்பகுதிப் பாதுகாப்புத் தரப்பினருடன் கலந்துரையாடியதுடன் அப்பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டதும் குறிப்பிடத்தக்கதாகும். இதற்கிணங்க இன்றைய தினம் 640 ஏக்கர் நிலப்பகுதி விவசாயச் செய்கைகளுக்காக பயன்படுத்தும் பொருட்டு அமைச்சர் அவர்களால் அப்பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதி மக்கள் மீளக்குடியமர்வதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனங்கிளப்புப் பகுதியில் மீளக்குடியமரவுள்ள மக்கள் அனைவரும் தங்களது பிரிவுகளுக்குரிய கிராம சேவகர்களிடம் தம்மைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். |
0 Response to "தனங்கிளப்புச் சந்தியில் இருந்து அருகுவெளிச் சந்தி வரை மக்கள் மீளக்குடியமர்வு!"
แสดงความคิดเห็น