jkr

செய்தியறிக்கை


டோகோ அணியினர்
டோகோ அணியினர்

ஆப்பிரிக்கக் கோப்பை போட்டியில் இருந்து விலகுகிறது டோகோ

நாடுகளுக்கிடையிலான ஆப்பிரிக்கக் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் விளையாடுவதற்காக டோகோ அணியினர் பயணித்த பேருந்து துப்பாக்கிதாரிகளால் வெள்ளிக்கிழமை தாக்கப்பட்டதை அடுத்து, அந்த சுற்றுப் போட்டியில் இருந்து விலகுவது என்று டோகோவின் தேசிய விளையாட்டு அணியின் உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக அங்கோலாவில் இருந்து வருகின்ற செய்திகள் கூறுகின்றன.

இதில் கொல்லப்பட்ட ஓட்டுனரை அடுத்து மேலும் காயமடைந்த ஒரு ஊடக அதிகாரியும், துணை பயிற்றுவிப்பாளரும் மரணமானதால் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது மூன்றாக அதிகரித்துள்ளது.

மேலும் ஆறு பேர் இதில் காயமடைந்துள்ளனர்.

காங்கோ பிரசவில்லில் இருந்து அங்கோலிய கபிந்த பகுதிக்கு பேருந்து நுழைந்தபோது துப்பாக்கிதாரிகள் அதன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பிரிவினைவாதத் தீவிரவாதிகள் தாமே இந்தத்தாக்குதலை நடத்தியதாகக் கூறியுள்ளனர்.


ஆப்கானிஸ்தான் தற்கொலை தாக்குதல் காட்சி பாகிஸ்தான் தொலைக்காட்சியில்

வீடியோ காட்சி
வீடியோ காட்சி

ஆப்கானிஸ்தானில், கடந்த வாரத்தில் அமெரிக்க படை முகாமொன்றில் ஏழு சி.ஐ.ஏ அதிகாரிகள் உள்ளடங்கலாக எட்டு பேர் கொல்லப்பட்ட தற்கொலை தாக்குதலை காட்டும் வீடியோ காட்சியை பாகிஸ்தானிலுள்ள தொலைக்காட்சி சேவையொன்று ஒளிபரப்பியுள்ளது.

இந்த வீடியோ காட்சியில், இராணுவ சீருடையில் தாடியுடன் தோன்றும், ஜோர்தானைச் சேர்ந்த இரட்டை உளவாளி என அறியப்பட்ட ஹுமாம் காலி அபு-முலால் அல்-பலாவி என்பவர், பாகிஸ்தானிய தாலிபன் தலைவர் பைத்துல்லாஹ் மெஹ்சுத் கொல்லப்பட்டமைக்கு பழிவாங்கும் முகமாக இந்த தாக்குதலை நடத்துவாக கூறுகிறார்.

பைத்துல்லாஹ் மெஹ்சுத் அமெரிக்க ஏவுகணை தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டதாக கடந்த ஓகஸ்டில் அறிவிக்கப்பட்டது.

மெஹ்சுதின் மரணத்துக்கான பழிவாங்கும் நடவடிக்கை அமெரிக்காவுக்கு உள்ளேயும் வெளியேயும் மேற்கொள்ளப்படவேண்டும் என அந்த நபர் கூறுகிறார்.

இந்த வீடியோ காட்சியின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை.


ஆப்கானுக்கு புதிய அமைச்சரவை பட்டியல்

ஆப்கான் நாடாளுமன்றம்
ஆப்கான் நாடாளுமன்றம்

ஆப்கான் அதிபரால் கடந்தவாரம் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பட்டியலில் உள்ளவர்களில் மூன்றில் இரண்டு பங்கினரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்ததை அடுத்து புதிய அமைச்சரவை பட்டியல் ஒன்றை அவர் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ளார்.

இந்தப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்ற 16 பேரில் நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டவர்கள் எவரது பெயரும் இடம்பெறவில்லை.

அதிபர் கர்சாயின் பாதுகாப்பு ஆலோசகரான ஷல்மே ரசூல் அவர்கள் வெளியுறவு அமைச்சர் பதவிக்கு பிரேரிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு, நிதி மற்றும் உள்துறை அமைச்சுப் பதவிகள் உட்பட 7 பேரது பெயர்கள் மாத்திரமே கடந்த வாரம் ஏற்கப்பட்டது.


மலேசியாவில் தேவாலயங்கள் மீது தொடர்ந்து தாக்குதல்

தேவாலயங்கள் தாக்கப்பட்ட இடங்கள்
தேவாலயங்கள் தாக்கப்பட்ட இடங்கள்

மலேசியாவில் முஸ்லிம்கள் அல்லாதவர்களால் அல்லா என்ற வார்த்தை பிரயோகிக்கப்படுகின்றமை தொடர்பான குழப்பங்கள் அதிகரித்துவருகின்ற நிலையில், அங்கு நான்காவது கிறிஸ்த தேவாலயத்துக்கும் தீ வைக்க முயற்சிக்கப்பட்டுள்ளமை குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இன்று காலை குட் ஷெப்பர்ட் லுத்தரன் தேவாலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சில் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

தலைநகர் கோலாலம்பூரை அண்டிய பகுதிகளில் மூன்று தேவாலயங்கள் நேற்று தாக்கப்பட்டுள்ளன.

கத்தோலிக்க செய்திப் பத்திரிகை தமது கிறிஸ்தவ கடவுளைக் குறிக்க அல்லா என்ற வார்த்தையைப் பிரயோகிக்க முடியும் என்று கடந்த மாதம் நீதிமன்ற தீர்ப்பொன்று வெளியானது முதல் மலேசியாவில் மதங்களுக்கிடையிலான குழப்பங்கள் தீவிரமடைந்துள்ளன.

செய்தியரங்கம்
இந்தியர் பயணித்த கார்
இந்தியர் பயணித்த கார்

ஆஸ்திரேலியாவில் இந்தியர் மீது தாக்குதல்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சிலரால் தாக்கப்பட்டு உடலில் எரியூட்டப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய பிரஜையின் உடல் நிலை தேறிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

விருந்துபசாரம் ஒன்றில் கலந்துவிட்டு மனைவியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது 29 வயதான இந்த நபரின் உடல் மீது கும்பலொன்று திரவம் ஒன்றை வீசி தீ மூட்டியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவம் இனத் துவேசத்தால் மேற்கொள்ளப்பட்டதா என்பது தொடர்பில் தெளிவில்லையென பொலிசார் கூறுகின்றனர்.

மெல்பன் நகரில் இந்திய பட்டதாரி மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டு ஒருவாரம் கழிந்த நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்திய மாணவர்கள் மீது ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் தாக்குதல்கள் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


சிறிநகரில் ஆர்ப்பாட்டத்தினர் மீது பொலிஸார் தடியடி

இந்திய பாதுகாப்புப் படையினர்
இந்திய பாதுகாப்புப் படையினர்

இந்திய பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் ஒரு சிறுவனின் மரணத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள் கூட்டத்தைக் கலைப்பதற்கு இந்திய நிர்வாகத்தில் உள்ள பொலிஸார் தடியடிப் பிரயோகமும், கண்ணீர்ப்புகைப் பிரயோகமும் செய்திருக்கிறார்கள்.

காஷ்மீரின் கோடைகாலத் தலைநகரான சிறிநகரில் இந்திய ஆட்சியை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது இந்த 16 வயதுப் பையன் கடுமையான காயங்களுக்கு உள்ளானான் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகிறார்கள்.

பின்னர் அந்தச் சிறுவன் மருத்துவமனையில் மரணமானான்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தாங்கள் புலன்விசாரணை செய்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரக் கோரியும், சிறுவனின் மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் நூற்றுக்கணக்கானவர்கள் ஐ.நா அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.


திருநெல்வேலியில் காவல்துறை அதிகாரியை காப்பாற்ற முயற்சிக்கவில்லை என குற்றச்சாட்டு

தமிழக காவல்துறையினர்
தமிழக காவல்துறையினர்

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் ரவுடி கும்பலால் வெட்டப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்த தமிழக அமைச்சர்கள் இருவர், அவரைக் காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

ஆழ்வார்க்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் என்பவர், சனிக்கிழமையன்று மோட்டார் சைக்கிளில் சென்றபோது, ஒரு கும்பல் அவர் மீது வெடிகுணடு வீசி, அரிவாளால் வெட்டியது.

அந்த நேரத்தில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மைதீன்கான், மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அந்த வழியாக வந்தனர். அவர்களது கார்கள் அங்கு நின்றவுடன், சப்-இன்ஸ்பெக்டரைத் தாக்கிய கும்பல் தப்பி ஓடியது. சாலையின் நடுவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் சப்-இன்ஸ்பெக்டர்.

அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கவோ, முதலுதவி அளிக்கவோ நடவடிக்கை எடுக்காமல், அமைச்சர்களும் அதிகாரிகளும் வேடிக்கை பார்த்ததாக நேற்று பல்வேறு தொலைக்காட்சிகளில் வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. அதில், போலீஸ் அதிகாரி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததையும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் விலகி நின்று கொண்டிருந்ததையும், அதன்பிறகு அமைச்சருடன் சென்ற சிலர், ரத்தம் வழிந்துகொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டரின் முகத்தில் தண்ணீரை ஊற்றியதையும் காண முடிந்தது. அத்துடன், அந்த போலீஸ் அதிகாரி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் கையை நீட்டி உதவிக்கு அழைத்ததையும், பின்னர் மயங்கி விழுந்ததையும் அந்த வீடியோவில் காணக்கூடியதாக இருந்தது.

அமைச்சர்கள் உடனடி நடவடிக்கை எடுத்திருந்தால் அந்த போலீஸ் அதிகாரியைக் காப்பாற்றியிருக்கலாம் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான கருத்துக்கள் வெளியிடப்பட்டன. எதிர்க்கட்சியான அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, அந்த இரு அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், இன்று சட்டப் பேரவையில் இந்தப் பிரச்சினை தொடர்பாக பதிலளித்த அமைச்சர் பன்னீர் செல்வம், போலீஸ் அதிகாரியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததில் காலதாமதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.

இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates