jkr

செய்தியறிக்கை


காபூல் மீது தாலிபன் தாக்குதல்

தாக்குதலுக்குள்ளான பகுதிகள்
காபூல் நகரில் தாக்குதலுக்குள்ளான பகுதிகள்

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலின் மையப் பகுதி மீது தாலிபன் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பல மணித்தியாலங்களாக நீடித்த இந்த தாக்குதலில் பல குண்டுகளை வெடிக்கவைத்துள்ள தாலிபன் குழுவினர், கடைத் தொகுதியொன்றை எரிய வைத்துள்ளதுடன் பாதுகாப்பு படையினருடனும் மோதல்களில் ஈடுபட்டிருந்தனர்.

ஆப்கன் அதிபர் ஹமீட் கர்சாய், புதிய அரசாங்கத்திற்கான அமைச்சவை நியமனத்திற்கான பதவிப்பிரமாணத்தை செய்து கொண்டிருந்த போது இந்த தாக்குதல்கள் வெடித்துள்ளன.

இந்த சம்பவங்களில், ஏழு தாலிபன் ஆயுததாரிகளும் ஆப்கன் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவரும் பொதுமக்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.ஏழுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

சில தாலிபன் ஆயுததாரிகள் தொடர்ந்தும் நகரில் நிலைகொண்டிருக்கக் கூடுமென்ற அச்சமும் தற்போது காணப்படுகின்றது.


கென்யாவில் சோமாலியர்கள் கைது- சோமாலிய அரசு கண்டனம்

மோதல்காயமடைந்த இளைஞர் ஒருவர்
மோதலில் காயமடைந்த இளைஞர் ஒருவர்
கென்யத் தலைநகர் நைரோபியின் புறநகர்ப் பகுதியொன்றில் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக நூற்றுக் கணக்கான சோமாலியர்களை கென்ய பொலிசார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டுள்ள சம்பவத்துக்கு சோமாலிய அரசாங்கம் உத்தியோகபூர்வமான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

நைரோபியில் சோமாலியர்கள் அதிகளவில் வசிக்கும் பகுதியொன்றில் ஞாயிறு இரவு இந்த தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது சுமார் முந்நூறு பேர்வரை கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

சோமாலிய ஆயுதக் குழுவான அல் ஷாபாபின் ஆதரவாளர்கள் என கென்ய அரசாங்கத்தால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் நைரோபியில் வன்முறை மோதல்கள் இடம்பெற்று இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையிலேயே இந்த தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது.


நைஜீரியாவில் முஸ்லீம்கள் - கிறிஸ்தவர்கள் இடையே மோதல்

நைஜீரியா- வரைபடம்
நைஜீரியா- வரைபடம்
நைஜீரிய நகரமான ஜோஸில் ஞாயிறன்று முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ இளைஞர் கும்பல்கள் இடையே மோதல்கள் ஏற்பட்டதையடுத்து இன்று அந்நகர வீதிகளில் இராணுவத் துருப்பினரும் கலவரக் கட்டுப்பாட்டுப் போலிசாரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நடந்த மோதல்களில் வீடுகள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் போன்றவற்றுக்கு தீவைக்கப்பட்டிருந்தன. குறைந்தது மூவாயிரம் பேர் இந்த மோதல்கள் காரணமாக வாழ்விடங்களை விட்டு வெளியேற நேர்ந்துள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.

இருபது பேர் வரை இந்த மோதல்களில் கொல்லப்பட்டதாக சில தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அதிகாரிகள் இந்த எண்ணிக்கையை உறுதிசெய்யவில்லை.

இரண்டாவது இரவாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

இம்மாதிரியான கலவரங்களுக்கு காரணம் மதவாதம்தான் என்று அடிக்கடி கூறப்பட்டாலும், யதார்த்தத்தில் நில உரிமை தொடர்பான சொத்துத் தகராறும் பகைமையும்தான் இக்கலவரங்களின் அடிப்படைக் காரணம் என நைஜீரியாவில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.


மறைந்த கம்யூனிஸத் தலைவர் ஜோதி பாசுவின் நினைவு ஊர்வலம் செவ்வாய்க்கிழமை

அமரர் ஜோதி பாசு
அமரர் ஜோதி பாசு
இயற்கை எய்திய இந்தியாவின் மதிப்புமிக்க மூத்த கம்யூனிஸத் தலைவரான ஜோதி பாசுவின் நினைவு ஊர்வலம் மற்றும் சடங்குகளில் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை செவ்வாய்க்கிழமை நடக்கவுள்ள இச்சடங்குகளில் இந்தியாவின் மூத்த அரசியல் பிரமுகர்கள் பலரும் பங்குகொள்வார்கள் எனத் தெரிகிறது.

ஜோதி பாசு தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் தந்துள்ளார் என்பதால் இறுதிச் சடங்கு என்று ஒன்றும் இல்லை.

கடந்த ஞாயிறன்று காலமான ஜோதி பாசு அவர்களுக்கு கொல்கத்தாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

செய்தியரங்கம்

இலங்கை ஜனாதிபதி தேர்தல் - தமிழ்பேசும் மக்களின் மனநிலை

வவுனியா முகாம்களில் உள்ள மக்கள்
வவுனியா முகாம்களில் உள்ள மக்கள்
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே எஞ்சியிருக்கின்றது. இந்த நிலையிலும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் வவுனியா பிரதேசத்தில் போதிய அளவில் சூடு பிடித்ததாகத் தெரியவில்லை.

தேர்தல் பிரசார கூட்டங்கள் முழு அளவில் நடைபெற இன்னும் ஆரம்பிக்கவில்லை. இந்த நிலையில், இடம்பெயர்ந்து வந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் மத்தியில் இந்தத் தேர்தல் தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

சரத் பொன்சேகா
சரத் பொன்சேகா
சிலர் இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து முடிவு செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும், தேர்தலில் முன்னணியில் உள்ள இரண்டு வேட்பாளர்களுக்கும் வாக்களிப்பதனால் தமக்கு என்ன பயன் விளையப்போகின்றது என்பதில் சிலர் பெரும் சந்தேகம் கொண்டிருப்பதாகவும் கருதுகின்றார்கள்.

மகிந்த ராஜபக்ஸ
மகிந்த ராஜபக்ஸ
இடம்பெயர்ந்துள்ள தங்களின் நலன்களைக் கவனிப்பதில் அரசாங்கம் போதிய அக்கறை காட்டவில்லை என்பதையும் சிலர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

இதேவேளை, கொழும்பு வாழ் தமிழ்பேசும் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எவ்வாறு பார்க்கிறார்கள் என தமிழோசைக்கு அளித்துள்ள கருத்துக்களையும் நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


ஹைட்டியில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு பாதகமான நிலமைகளை ஏற்படுத்தும்- ஐ.நா எச்சரிக்கை

ஹைட்டி மக்களுக்கு உணவு விநியோகம்
ஹைட்டி மக்களுக்கு உணவு விநியோகம்
பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹைட்டியில் மோசமான எரிபொருள் தட்டுப்பாடு நிலவிவருவது அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதாபிமான உதவிகளில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும் என ஐ.நா. எச்சரித்துள்ளது.

எரிபொருள் இல்லையென்றால் சாலைகள் வழியாக நிவாரணப் பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்ல முடியாது என்பதோடு, மின்சாரம் இல்லையென்றால் செல்லிட தொலைபேசி வலையமைப்புகள் கூட வேலை செய்யாது என்று ஐ.நா.வின் மனிதாபிமானப் பணிகள் ஒருங்கிணைப்பு நிறுவனம் கூறியுள்ளது.

பூகம்பத்தில் வீடிழந்த மக்களிடம் கூடாரத் துணிகளை விநியோகிக்கும் பணி இன்னும் ஆரம்பிக்கவே இல்லை என்றும், தேவைப்படும் விசேட மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது.

ஹைதியிலும் அண்டையிலுள்ள டொமினிகன் குடியரசிலும் உள்ள மருத்துவமனைகள் காயமடைந்த மக்களால் நிரம்பி வழிவதாக ஐ.நா. கூறுகிறது.


"சென்னை உயர்நீதிமன்ற வளாக மோதல் குறித்த சீ.பி.ஐயின் குற்றப் பத்திரிகைகளை ஏற்கக்கூடாது" - வழக்கறிஞர்கள் மனு

பொலிசார்- வழக்கறிஞர்கள் மோதலின் போது
பொலிசார்- வழக்கறிஞர்கள் மோதலின் போது
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்குமிடையே நடந்த மோதல்கள் குறித்து மத்திய புலனாய்வுத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகைகளை சென்னை கூடுதல் பெருநகர மாஜிஸ்ட்ரேட் ஏற்றுக்கொள்ளக்கூடாது எனக்கோரி வழக்கறிஞர்கள் மனுச் செய்திருக்கின்றனர்.

31 வழக்கறிஞர்கள், மேலும் ஒரு சட்டக்கல்லூரி மாணவர் மீது கலவரத்தில் ஈடுபடுவது குறித்த பல்வேறு இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குக்கள் தொடர்ந்திருக்கும் சி.பி.ஐ யின் இரு குற்றப்பத்திரிகைகளில், 6 காவல்துறையினரின் பெயர்கள் மட்டுமே காணப்படுகிறது.

மேலும் 22 காவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று சி.பி.ஐ சிபாரிசு செய்திருந்தாலும் கூட, வழக்கு 6 பேர் மீதுதான். அது தங்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்கின்றனர் வழக்கறிஞர்கள்.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates