செய்தியறிக்கை
ஹைட்டிக்கு மேலும் 3500 படையினரை அனுப்ப ஐ.நா அனுமதி
ஹெய்ட்டி மக்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகம் |
நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஹைட்டியின் பாதுகாப்பு பணிகளுக்காகவும், அங்கு நிவாரணப் பொருட்கள் விநியோகத்தை பாதுகாப்பதற்காகவும் கூடுதலாக 3500 படையினரை அனுப்புவதற்கு ஐநா மன்றத்தின் பாதுகாப்பு சபை அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக ஹைட்டியில் பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்திலும் உணவு மற்றும் குடிநீர் ஆகிய அத்தியாவசிய பொருட்களை ஆகாயத்திலிருந்தபடி பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் வீசுவது குறித்து அமெரிக்க அதிகாரிகள் பரிசீலித்து வருகிறார்கள். அப்படி செய்தால் அங்கே பெருங்கலவரங்கள் மூளலாம் என்ற அச்சங்களும் நிலவுகின்றன.
முன்னதாக, தலைநகர் போர்தோபிரான்ஸுக்கு அருகில் பாதுகாப்பான இடம் ஒன்றில் உணவுப்பொட்டலங்களும் குடிநீர் போத்தல்களும் ஆகாயத்தில் இருந்தபடி வீசப்பட்டன. காரணம் இத்தகைய நிவாரணப்பொருட்களை சாலை வழியாக கொண்டு செல்வதில் பெரும் பாதுகாப்பு பிரச்சினைகள் இருக்கின்றன.
அமெரிக்காவின் இழுவை படகில் இருந்து, நிவாரணப் பொருட்கள் சரக்குக்கப்பலுக்கு ஏற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவை ஹைட்டியின் முக்கிய துறைமுகம் வழியாக அனுப்பப்படும் முதலாவது நிவாரண பொருட்களாக இருக்கும்.
நிலநடுக்கத்தில் இந்த துறைமுகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் பெரிய கடற்கலங்கள் எவையும் இங்கே இதுவரை நிலைகொள்ள அனுமதிக்கப்படவில்லை.
நைஜீரியாவில் மீண்டும் மத மோதல்கள்- ஊரடங்கு உத்தரவு அமல்
நைஜீரியா-வரைபடம் |
நைஜிரியாவின் ஜோஸ் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பலர் உயிரிழக்க காரணமான மத மோதல்கள் மீண்டும் துவங்கியதையடுத்து அங்கே 24 மணிநேர ஊடரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர் எதிராக மோதிக்கொள்ளும் கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் இளைஞர்களின் குழுக்கள் சாலைத் தடைகளை அமைத்துள்ளன. நகரில் துப்பாக்கிச் சூடு நடப்பதாகவும், பல கட்டிடங்கள் தீப்பிடித்து எரிவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தோரின் சடலங்கள் மருத்துவமனையின் பிரேத அறைகளுக்கு கொண்டு வரப்படுவதாக மருத்துவர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இராணுவத்தினரும், கூடுதல் போலீசாரும் நகரில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 2008 ஆம் ஆண்டில் இங்கே இடம்பெற்ற மத மற்றும் இன மோதல்களில் குறைந்தது 200 பேர் கொல்லப்பட்டனர்.
"ஆப்கானிஸ்தானில் ஊழல்கள் தனிப்பெரும் பிரச்சனை"- ஐ.நா அறிக்கை
ஆப்கானிய பெண்கள் |
ஆப்கானிஸ்தானில் ஊழல் தனிப்பெரும் பிரச்சனையாக இருப்பதாக போதைப் பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐ நாவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியுள்ளது.
ஆப்கான் முழுவதிலும் உள்ள நகர்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்தவர்களிடம் பெறப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, பாதுகாப்பின்மை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளை விட ஊழலை ஆப்கானியர்கள் பெரும் பிரச்சனையாக பார்ப்பதாக கூறியுள்ளது.
நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோக், காவல்துறையினர், நீதிபதிகள், அரசியல்வாதிகள் என அரச பதவிகளில் இருப்பவர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதம், மற்றும் போதை மருந்து கடத்தல் போன்றவைக்கு ஊழல் காரணமாக இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ள ஐ நா அறிக்கை, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும், வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தவும் இது தடையாக இருப்பதாகவும் கூறியுள்ளது
இமயமலையின் பனி முகடுகள் கரைந்து காணாமல் போகும் என்று எதிர்வுகூறும் அறிக்கையில் தவறு
இமயமலை சிகரங்களில் பனிமுகடுகள் |
இமயமலையின் பனிமுகடுகள் காணாமல்போகும் என்ற அறிக்கையை 2007 ஆம் ஆண்டு வெளியிட்ட ஐநா குழுவின் துணைத்தலைவர் ஜீன் பஸ்கல் வான் யபர்செலெ அவர்கள், இதில் நிகழ்ந்த தவறுக்கு இரண்டு காரணங்கள் இருக்கக்கூடும் என்று கூறியுள்ளார்.
அதாவது இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முந்தையை மறு தணிக்கை நடைமுறைகளில் தவறு நடந்திருக்கலாம் அல்லது இந்த அறிக்கையை தட்டச்சு செய்தபோது இந்த தவறு நடந்திருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
இமாலய பனிமுகடுகள் 2035 ஆம் ஆண்டுக்குள் கரைந்து காணாமல் போகக்கூடும் என்கிற எதிர்வுகூறலுக்கு பின்னணியில் முறையான அறிவியல் கணக்கீடுகள் இருந்தனவா என்று இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியிருந்த பின்னணியில் இவருடைய இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
ஓஷியானிக் கப்பலில் உள்ள தமிழ் அகதிகள் சிலருக்கு தஞ்சமளிக்க நியூசிலாந்து முடிவு
ஆஸ்திரேலிய கடற்பரப்பு-வரைபடம் |
ஐ நாவால் அகதிகள் அந்தஸ்த்து உறுதிசெய்யப்பட்ட 13 பேருக்கு, நீயுசிலாந்தின் வருடாந்த அகதிகள் ஒதுக்கீட்டின் கீழ் நாட்டுக்குள் வர அனுமதிக்கப்படுவதற்காக பரிசீலிக்கப்படுவார்கள் என்று குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ஒஷியானிக் வைக்கிங்கில் இருந்து மீட்கப்பட்ட 78 தமிழர்களில் யாரையும் ஏற்க தான் விரும்பவில்லை என்று நீயுசிலாந்து அரசு தெரிவித்திருந்தது. தஞ்சமளிப்பதற்கான வரிசையை மீறி வருபவர்களை ஊக்குவிக்க தான் விரும்பவில்லை என்பதே இதற்கு காரணம் என்றும் அது தெரிவித்துள்ளது.
இலங்கையின் வடக்கு கிழக்கில் மூவினங்கள் சார்ந்த பிரதான அரசியல் கட்சி தலைவர்களும் ஒரே மேடையில்
த.தே.கூ மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் |
இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பிரதான தமிழ், முஸ்லிம்,சிங்கள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து ஒரே மேடையில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என தீர்மானித்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் தற்போது அதற்கான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
கிழக்கு மாகாணத்தில் தற்போது தங்கியிருக்கும் அக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அம்பாறை மாவட்டத்தில் மூவின மக்களும் வாழும் மத்திய முகாம் கிராமத்தில் நடை பெற்ற கூட்டமொன்றிலும் நேற்று கலந்து கொண்டு உரையாற்றினர்.
33 வருடங்களின் பின்னர் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றி உரையாற்றிய இக் கூட்டத்தில் மற்றுமொரு சிறப்பு அம்சமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமுன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி ஜே.வி.பி ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் உரையாற்றினர்.
வங்கதேச பிரதமருடன் இந்திய தலைவர்களும் ஜோதி பாசுவுக்கு இறுதி மரியாதை
ஜோதி பாசுவின் இறுதி ஊர்வலம் |
95 வயதான ஜோதிபாசுவுக்கு அஞ்சலி செலுத்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸீனா, இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட மூத்த அரசியல் தலைவர்கள் பலர் கொல்கத்தாவுக்கு வந்திருந்தார்கள்.
அவரது உடல், சட்டப்பேரவைக் கட்டடத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையகத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு பொதுமக்களும் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர், ஜோதிபாசுவின் விருப்பப்படி மதச்சடங்ககுள் ஏதும் செய்யாமல் அவரது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக அங்குள்ள ஒரு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
திருமணத்திற்கு முன்னரான உடலுறவு பற்றி நடிகை குஷ்பு வெளியிட்ட கருத்துக்களில் குற்றமில்லையென கூறமுடியாது - இந்திய உச்ச நீதிமன்றம்
நடிகை குஷ்பு - ஆவணப்படம் |
எந்தச் சூழ்நிலையில், எத்தகைய கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்திருக்கிறார் என்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று நடிகை குஷ்புவுக்கு தலைமை நீதிபதி இன்று உத்தரவிட்டார்.
இந்தியாவில் மாறிவரும் உடலுறவுப் பழக்கங்கள் தொடர்பாக, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் பத்திரிக்கைக்கு நடிகை குஷ்பு பேட்டியளித்திருந்தார்.
அதில், பெண்கள் திருமணத்துக்கு முன் உடலுறவு வைத்துக் கொள்வதில் தவறில்லை என்றும், அவ்வாறு உறவு கொள்ளும்போது உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும், படிப்பறிவுள்ள ஓர் ஆண்மகன், தனது மனைவி கற்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து குஷ்புவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி நடிகை குஷ்பு உயர் நீதி்மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஆனால், குறறச்சாட்டுக்களுக்கு பூர்வாங்க ஆதாரம் இருப்பதாகக் கூறி, குஷ்புவின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. அத்துடன், பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள எல்லா வழக்குகளையும் சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றி 6 மாதங்களில் விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதை எதிர்த்து நடிகை குஷ்பு உச்சநீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன் விசாரணைக்கு வந்தது. தான் குற்றம் ஏதும் செய்யவில்லை என்றும், யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு அத்தகைய கருத்தைத் தெரிவிக்கவில்லை என்றும் குஷ்பு தனது மனுவில் தெரிவித்திருந்த கருத்துக்களை நீதிமன்றம் ஏற்கவில்லை.
0 Response to "செய்தியறிக்கை"
แสดงความคิดเห็น