jkr

சரத் பொன்சேகாவின் ‘நம்பிக்கைக்குரிய மாற்றங்கள்’ நம்பமுடியாத பாதகங்களை ஏற்படுத்தும்:சுற்றாடல், இயற்கைவள அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க!


சரத் பொன்சேகாவின் ‘நம்பிக்கைக்குரிய மாற்றங்கள்’ என்ற கோட்பாட்டை பின்பற்றினால் நம்பமுடியாத அளவுக்கு பாதகமான நிகழ்வுகள் பல இந்த நாட்டில் நிகழும் என்று சுற்றாடல், இயற்கைவள அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.மக்கள் இவற்றை நம்பினால் ஜனவரி 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தான் நாட்டின் கடைசி ஜனநாயகத் தேர்தலாக இருக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஜாதிக ஹெல உறுமயவின் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை கொழும்பில் இடம்பெற்றது. கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:-

யுத்தத்தை எதிர்த்து நாட்டில் பயங்கரவாதம் பாதுகாக்கப்பட வேண்டும் என விரும்பிய குழுவினர்களுடன் சரத் பொன்சேகா தற்பொழுது கைகோர்த்துள்ளார்.

தற்பொழுது அமைதியாக இருக்கும் இந்த நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட வேண்டுமா என்றும் இதனை மக்கள் அனுமதிப்பார்களா என்றும் அவர் இங்கு கேள்வி எழுப்பினார். சர்வதேச பிடியின் கீழ் இந்தக் குழுவினர் நாட்டைக் கொண்டுவர முயற்சிப்பதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

சரத் பொன்சேகா எமது படைவீரர்களை சர்வதேச யுத்த நீதிமன்றத்துக்கு முன்னால் நிறுத்த முயற்சித்தார்.ஆனால் எமது படையினர் யுத்த குற்றங்கள் எதனையும் புரியாததால் தப்பிக்கொண்டனர்.

பொன்சேகாவுக்கும் சம்பந்தனுக்கும் இடையிலான உடன்படிக்கை 14 அம்சங்களைக் கொண்டது. அதில் வடக்கு, கிழக்கு இணைப்பு, பாரம்பரிய தாயகம் என பல விடயங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன.

ரணில் - பிரபா ஒப்பந்தம் ஐக்கிய தேசியக் கட்சி செய்த எல்லா ஒப்பந்தங்களையும் மறைத்தும், மறுத்துமே வந்துள்ளது.புலிகள் - ரணில் ஒப்பந்தம் செய்து கொண்ட போது அப்போது மங்கள சமரவீர இது பற்றி ரணிலிடம் கேள்வி எழுப்பினார். அப்போதும் ரணில் அதனை மறுத்தார். ஆனால் இறுதியில் அது உண்மையானது. இது போன்றே பொன்சேகா - சம்பந்தன் ஒப்பந்தமுமாகும் என்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ‘ஒரே தேசம், ஒரே மக்கள்’ என்ற கொள்கையை வலியுறுத்தியுள்ளார். ஆனால் பொன்சேகா இந்த முக்கியமான விடயத்தை விட்டு விட்டார் என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

ஹெல உறுமயவின் பாராளுமன்றக் குழுத் தலைவர் வண. அதுரெலி ரத்ன தேரர், மேல் மாகாண அமைச்சர் உதய கம்மம்பில, ஊடகப் பேச்சாளர் நிஷாந்த வர்ணசூரிய ஆகியோர் கலந்து கொண்டனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "சரத் பொன்சேகாவின் ‘நம்பிக்கைக்குரிய மாற்றங்கள்’ நம்பமுடியாத பாதகங்களை ஏற்படுத்தும்:சுற்றாடல், இயற்கைவள அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates