jkr

தேர்தலில் வெற்றி பெற்ற முதல் வருடத்தில் 2 இலட்சம் பேருக்கு வெளிநாட்டு வேலை:ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!


பிரபாகரனின் பெற்றோரிடம் பணம் பெற்று தேர்தல் பிரசாரம் நடத்துவோம் என்று கூறுபவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுப்பதென்பது அதிசயமான விடயமல்ல என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.கேகாலை நகரில் நேற்று (21ம் திகதி ) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி; நாட்டைக் காட்டிக்கொடுப் போரை எதிர்வரும் 26ம் திகதி மக்கள் நிராகரிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (21ம் திகதி ) கேகாலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.அமைச்சர்கள் அதாவுத செனவிரட்ன, ரஞ்சித் சியம்பலாபிடிய, விஷ்வ வர்ணபால, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட அமைச்சர்கள், மாகாண முதல்வர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இக் கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-

கிராமத்தில் பிறந்த எனக்கு கிராம மக்களின் பிரச்சினைகள் என்னவென்று நன்றாகத் தெரியும். கிராமப்புறங்களை மேம்படுத்தும் செயற்திட்டங்களை நாம் நிறைவேற்றுவோம். அத்துடன் தேர்தல் முடிந்ததும் முதல் வருடத்திலேயே இரண்டு இலட்சம் பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அது தொடர்பாக பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண் டுள்ளோம்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டின் அதிகாரத்தை மக்கள் எனக்கு வழங்கினர். நாம் இந்த குறுகிய காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினோம்.

ரணில் – பிரபாகரன் ஒப்பந்தக் காலத்திலேயே இந்த நாட்டை நான் பொறுப்பேற்றேன். அச்சமயம் இனம், மதம், குலம், கட்சி என நாடு பேதப்பட்டுக் கிடந்தது. பயங்கரவாதிகளை பயங்கரவாதிகள் என்று சொல்ல தலைவர்கள் தயங்கிய யுகம் அது. அந்த யுகத்தை நாம் மாற்றியமைத்தோம்.

பிரபாகரன் தமது இனத்துக்காகவே யுத்தம் செய்கிறார் என எமது தலைவர்கள் கூறினார்கள்.

எனினும் பிரபாகரன் ஒரு பயங்கரவாதி, பிரிவினைவாதி என்று நாம் சர்வதேசத்திற்குக் காட்டினோம். அதனால்தான் பயங்கரவாதத்துக்கு எதிராக யுத்தம் செய்தோம்.

நாம் யுத்தம் மட்டும் செய்யவில்லை. நாட்டின் பல பகுதிகளிலும் துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் விமான நிலையம் என பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து எமது இளைஞர்களுக்குத் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.

அத்துடன் 45 ஆயிரம் பட்டதாரிகளுக்குத் தொழில் வழங்கி ஆறு இலட்சமாகவிருந்த அரச ஊழியர்களை 12 இலட்சமாக அதிகரித்தோம். நாடு முழுவதும் அபிவிருத்திப் பணிகள் புதிய பாதைகள், பாலங்கள் என எமது அபிவிருத்தி தொடர்கின்றது.

‘ஆங்கிலப் பயிற்சி’ நெனசல அறிவகம் ஆகியவற்றை ஆரம்பித்து முறையாக முன்னெடுத்தோம். நாம் இவற்றையெல்லாம் தேர்தலுக்காக செய்யவில்லை. தேர்தலா - நாடா என வந்தபோது நான் நாட்டையே அப்போதும் முன்னிலைப்படுத்திச் செயற்பட்டேன். இப்போதும் அதனையே முன்னிலைப்படுத்தியுள்ளோம். நாம் மேற்கொண்ட திட்டங்கள் நாட்டின் எதிர்கால பொருளாதாரத்திற்கு உறுதுணையாக அமைவது உறுதி.

மஹிந்த சிந்தனையின் முதற்கட்ட நடவடிக்கைகள் போன்றே இரண்டாம் கட்ட நடவடிக்கைகளும் ஒன்றிணைந்த இலங்கையிலேயே முன்னெடுக்கப்படும் என்பது உறுதி. நாம் எதைச் செய்தாலும் ஒன்றிணைந்த இலங்கைக்குள்ளேயே அதனைச் செய்வோம்.

சம்பந்தன் - பொன்சேகாவுக்கு இடையிலான இரகசிய உடன்படிக்கை ஒன்றிணைந்த நாட்டை உட்படுத்தியதல்ல. நாட்டைச் சீரழிக்கும் உடன்படிக்கை அது.

அதனால் தான் என்னிடம் வந்த சம்பந்தனிடம் முடியாது என்று ஒரேயடியாகக் கூறிவிட்டேன்.

அதனால் தான் சுயநிர்ணய உரிமை வழங்குதல், இராணுவ முகாம்களை அகற்றுதல், சிறையிலுள்ள புலிகளை விடுதலை செய்தல் போன்ற விடயங்களை மேற்கொள்ள முடியாது என நான் அடித்துக் கூறிவிட்டேன்.

நாம் பயணிக்கும் பாதை தெளிவானது, நாட்டை முன்னேற்றும் பயணம் அது. அதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் 26ம் திகதி ஆரம்பமாகும். ஆசியாவில் சிறந்த நாடாக இலங்கையை உருவாக்க நாம் இணைந்து செயற்படுவோம். வெற்றிலையின் வெற்றி நம் அனைவரினதும் வெற்றி. அது நாட்டின் வெற்றி என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தேர்தலில் வெற்றி பெற்ற முதல் வருடத்தில் 2 இலட்சம் பேருக்கு வெளிநாட்டு வேலை:ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates