கே.பியுடன் தொடர்புடைய தாய்லாந்து முன்னாள் பிரதமரின் வருகை குறித்து ஜேவிபி சந்தேகம்
விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் குமரன் பத்மநாதனுடன் (கே.பி) நெருங்கிய தொடர்பு வைத்திருந்த தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும் பிரபல வர்த்தகருமான தக்ஷின் ஷினாவத்ராவின் இலங்கை வருகை குறித்து மக்கள் விடுதலை முன்னணி சந்தேகம் வெளியிட்டுள்ளது.
அத்தோடு, விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் குமரன் பத்மநாதனுடன் (கே.பி) நெருங்கிய தொடர்பு வைத்திருந்த தக்ஷினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இருமுறை சந்தித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
இன்று முற்பகல் பத்தரமுல்லையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தாய்லாந்து அரசுக்கு விரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தக்ஷினை, நாடு கடத்தவிருந்த சமயம் கம்போடியா நாட்டுக்கு அவர் செல்லவிருந்தார். அச்சமயம் அவருடன் ஐவர் அடங்கிய குழுவினர் கடந்த டிசம்பர் மாதம் 12 ம் திகதி பிரத்தியேக விமானம் மூலம், விமான நிலையத்தின் விசேட வருகையாளர் பிரிவினூடாக இலங்கை வந்துள்ளார்.
கே.பியுடன் ஆயுத கொள்வனவுகளில் தக்ஷினுக்கு தொடர்புள்ளதாக எமக்கு நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் இலங்கைக்கு வந்த தக்ஷின் அரசாங்கத்துக்கு வாகன விநியோகம் செய்யும் நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனமொன்றையே பயன்படுத்தியுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அநுராதபுரத்தில் ஒருதடவையும் கொழும்பில் மற்றுமொரு தடவையும் அவர் சந்தித்துள்ளார்.
புலிகளின் முக்கியஸ்தர் குமரன் பத்மநாதனுக்கு சுதந்திரமான நடமாட்டத்தை தாய்லாந்து வழங்கியிருந்தமை யாவரும் அறிந்த விடயம். கே.பி வசமுள்ள புலிகளுக்குச் சொந்தமான பணம் தக்ஷினுடன் ஏற்பட்ட உடன்பாட்டையடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பயன்படுத்துவதாக சந்தேகம் எழுந்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒருதொகை பணமும் மகிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தாருக்கு ஒருதொகை பணமும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கலாம் என நம்புகிறோம். கே.பியுடன் தொடர்பு வைத்திருந்த தக்ஷினை அரசாங்கம் எவ்வாறு நாட்டுக்குள் அனுமதித்தது என்பதனை விளக்க வேண்டும் என சோமவன்ச அமரசிங்க மேலும் தெரிவித்தார்.
0 Response to "கே.பியுடன் தொடர்புடைய தாய்லாந்து முன்னாள் பிரதமரின் வருகை குறித்து ஜேவிபி சந்தேகம்"
แสดงความคิดเห็น