jkr

இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்து மழை. விநியோக நடவடிக்கைகள் பாதிப்பு


வவுனியா மனிக்பாம் பகுதிகளில் தொடர்ந்து மழைபெய்து வருவதனால் இடம்பெயர்ந்த மக்களுக்கான குடிநீர், உணவு விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கடும் மழையினால் வீதிகள் பாதிக்கப்பட்டிருப்பதனால், உழவு இயந்திரங்கள் உட்பட வாகனங்கள் முகாம் பகுதிகளுக்குள் செல்வது கடினமாகியிருப்பதாகவும், விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மழை காரணமாக பரந்த வெளியில் ஓடிச் செல்கின்ற மழைவெள்ளம் மலசலகூட குழிகளில் நிறைந்து வழிந்தோடுவதாகவும் இதனால் பெரும் சுகாதார பிரச்சினை ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸோன் – 4 எனப்படும் வலயம் – 4 மற்றும் இராமநாதன் இடைத்தங்கல் முகாம் என்பனவே பெரிதும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த முகாம்களைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
குழாய் மூலமாக நீர் மஞ்சள் நிறமாக வருவதனால், அதனைக் குடிப்பதற்குப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மழை வெள்ளம் காரணமாக முகாம்களின் வீதிகள் பல இடங்களில் அடித்துச் செல்லப்பட்டு குழிகள் ஏற்பட்டிருப்பதனால் வாகனங்கள் செல்ல முடியாமலும் குடிநீர், உணவு விநியோகங்களை மேற்கொள்ள ‘முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுச்சமையல் நடைபெறுகின்ற பொதுச் சமையலறைகள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதனால், சமையல் செய்வது பெரும் பிரச்சினையாகியிருப்பதாகவும், இன்று காலை ஒருவாறு கஞ்சி காய்ச்சப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில தினங்களாக பிற்பகல் வேளைகளில் மட்டும் பெய்து வந்த மழை ஞாயிறு இரவு கடுமையாகப் பெய்துள்ளது. இந்த மழைநேரத்தில் இரண்டு முதியவர்கள் அங்கு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களது மரணம் இயற்கை மரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
மழை மற்றும் கூடாரங்களின் வெற்றுத் தரையின் ஈரம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் கூடாரங்களுக்கு உள்ளேயும் இருக்கவோ படுக்கவோ முடியாமல் பெரும் சிரமங்களை அனுபவித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து மழை பெய்வதற்கு அறிகுறியாக காலை முதல் வானம் இருண்டு காணப்படுவதனால் அடுத்தடுத்த தினங்களும் சோதனை மிக்க தினங்களாகவே இருக்கும் என்று அஞ்சப்படுகின்றது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்து மழை. விநியோக நடவடிக்கைகள் பாதிப்பு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates