jkr

அரசியல் தீர்விலும் மீள் குடியேற்றத்திலும் அரசாங்கம் அக்கறை காட்டவேண்டும் - சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தல்


தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்விலும் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தும் விடயத்திலும் அரசாங்கம் அதிக அக்கறை காட்ட வேண்டியது அவசியம். பல வருடங்களாக யுத்தத்தின் பிடியில் சிக்கியிருந்த மக்கள் இன்னும் நலன்புரி முகாம்களில் வாடுவதனை அனுமதிக்க முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சூ. சிறில் தெரிவித்தார்.

வீடு வசதிகள் அற்று எங்கு போவது என்று தெரியாத நிலையில் வந்த மக்களே நலன்புரி முகாம்களில் உள்ளனர் என்று ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்த கருத்து "வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கு'' ஒப்பானதாகும் என்றும் அவர் கூறினார்.

சபையில் நடைபெற்ற அனர்த்த நிவாரணம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் நிதி குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே சிறில் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் கூறியதாவது,

அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் நிதி குறை நிரப்பு பிரேரணையில் நாம் கனத்த இதயத்துடன் ஏமாற்றம் நிறைந்த சூழ்நிலையிலேயே பேசுகின்றோம். இந்த அமைச்சு மக்களினால் தினம் பேசப்படுகின்ற அமைச்சு. அதேவேளை உலகத்தினால் பார்க்கப்படுகின்ற அமைச்சு அது நன்மையாக இருக்கலாம் தீமையாக இருக்கலாம். ஆனால் நாங்கள் உண்மையை பேச விரும்புகின்றோம்.

கடந்த மூன்று தசாப்த காலமாக தொடர்ந்து வந்த மோதல்கள் முடிவிற்கு வந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளபோதிலும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வு காண்பது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை மீள் குடியேற்றுவது போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை இன்றைய இச்சபை விவாதத்தில் அரசையும் அமைச்சையும் அதி வினயமாக கேட்டுக்கொள்கின்றோம்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "அரசியல் தீர்விலும் மீள் குடியேற்றத்திலும் அரசாங்கம் அக்கறை காட்டவேண்டும் - சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தல்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates