jkr

1000 ரன் கடந்த டோணி- என்ன புண்ணியம்?!


நடப்பு ஆண்டில் ஒரு நாள் போட்டிகளி்ல் 1000 ரன்களைக் கடந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி. ஆனால் ஆஸ்திரேலிய அணியிடம் மோசமான முறையில் ஆடி தொடரை இழந்துள்ளதால், டோணி மீது கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனர்.

2009ம் ஆண்டில் 1000 ரன்களைக் கடந்துள்ளார் கேப்டன் டோணி. இப்படி ஒரு நாள் போட்டியில் ஒரு ஆண்டில் ஆயிரம் ரன்களைக் கடந்த 4வது கேப்டன் டோணி.

நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 6வது ஒரு நாள் போட்டியில் 5 ரன்கள் எடுத்த போது, இந்த ஆயிரமாவது ரன்னை முடித்தார் டோணி.

இந்த ஆண்டில் 26 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 8 அரைசதம் உள்பட 1019 ரன்கள் குவித்து இருக்கிறார் டோணி.

என்ன புண்ணியம்...

ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 6வது போட்டியில் இந்தியா விளையாடிய விதம் டோணி மீதான ரசிகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையைத் தகர்ப்பதாக அமைந்தது.

போட்டியை இழந்ததோடு, தொடரையும் இழந்து வந்து நிற்கிறது இந்தியா.

இந்தப் போட்டியில் இந்தியா வென்றால், தொடரைத் தட்டிச் செல்லும் வாய்ப்பு பிரகாசமாகும். மாறாக தோற்றால் தொடர் ஆஸ்திரேலியாவுக்கு என்ற மிகவும் இக்கட்டான நிலையில், நேற்றைய போட்டியை சந்தித்த இந்தியா படு மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியாவிடம் வலியக்கப் போய் சரணடைந்து விட்டது.

மற்றவர்களை மட்டும் குறை கூறும் டோணி...

ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் மற்ற பேட்ஸ்மேன்களையும், பவுலர்களையும் மட்டும் தொடர்ந்து குறை கூறி வருகிறார் டோணி. தானும் ஒரு முன்னணி பேட்ஸ்மேன் என்பதை அவர் வசதியாக மறந்து விடுகிறார். தனது ஆட்டத்தைப் பற்றி அவர் ஒருமுறை குறைபட்டுக் கொண்டதே இல்லை.

நேற்றைய போட்டியின் இறுதியிலும் அதே பல்லவியைத்தான் பாடினார் டோணி.

போட்டியின் முடிவில் டோணி பேசுகையில், டாஸ் ஜெயிக்கும் போதே முதல் அரை மணி நேரம் தான் நமக்கு மிகவும் முக்கியம் என்று சொல்லி இருந்தேன். அவற்றை சமாளித்து இருந்தால் நல்ல ஸ்கோரை பெற்றிருக்கலாம்.

ஆனால் முதல் 15 நிமிடத்திற்குள்ளேயே எல்லாம் முடிந்து போய் விட்டது. தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்த பிறகு சரிவில் இருந்து மீள முடியவில்லை. ஒரு கட்டத்தில் 150 ரன்கள் எடுப்பதே கடினம் என்று நினைத்தேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக அதனை கடந்து விட்டோம். இருப்பினும் 50 முதல் 55 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம்.

இந்த ஆடுகளத்தில் பந்தில் கொஞ்சம் சுழற்சி இருந்தது. ஆனால் ஒட்டுமொத்தத்தில் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு உண்மையிலேயே அபாரமாக இருந்தது. இங்குள்ள சூழலுக்கு நாங்கள் 2 வது பேட்டிங் செய்திருக்கலாம். ஆனால் அதன் பிறகு நமது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கடினமாகி விடும்.

மொகாலி மற்றும் அதை தொடர்ந்து ஐதராபாத்தில் நடந்த ஆட்டங்களில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இரு ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா வெற்றியை பறித்து விட்டது. களத்தில் செய்த சில தவறுகளால் இந்த ஆட்டங்களில் தோற்று விட்டோம்.

நமது அணியில் தொடர்ந்து சீரான பேட்டிங் இல்லை. பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் ஒரே நேரத்தில் தங்களது சிறந்த பங்களிப்பை அளிக்கவில்லை. இந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடவில்லை. மிடில் வரிசையும் கைகொடுக்கவில்லை. சீரற்ற பேட்டிங்கால் தொடரை இழந்து விட்டோம் என்றார்.

இதைத்தான் ரசிகர்கள் குறை கூறுகிறார்கள். எந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும், ஆடு களத்தையும், மற்ற பேட்ஸ்பேன் மற்றும் பந்து வீச்சுக்காரர்களை குறை கூறுகிறார் டோணி. சில சமயங்களில் டோனி தான் ஒரு பேட்ஸ்மேன் என்பதை மறந்துவிட்டு கூறுகிறார்.

அணியின் சீரான ஆட்டத்தை நிரூபிக்க வேண்டியது ஒரு கேப்டனின் கடமை. ஆனால் டோனியோ சீரற்ற பேட்டிங்கால் தொடரை இழந்துவிட்டோம் என்று கூறுகிறார்.

சீரான ஆட்டம் கொண்டு வராத டோனி மீதும் சில குறைபாடுகள் உள்ளன. இதற்கு முன்னதாக நடைபெற்ற ஆட்டத்தில் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் 175 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு பிரகாசமான வழியை ஏற்படுத்தி வைத்தார். ஆனால் அன்றைய ஆட்டத்தில் அவருக்கு எந்தவொரு பேட்ஸ்மேன்களும் ஒத்துழைப்பு தராததுபோல் தெரிந்தது.

இவ்வாறாக இருந்தால் இந்திய கிரிக்கெட் அணி என்ன ஆகும் என்றும், அணியின் சீரான ஆட்டத்தை கொண்டு வருவது கேப்டனின் முக்கியப் பணி, அதை இனிமேலாவது டோனி செய்வாரா என்று கேட்கிறார்கள் ரசிகர்கள் .

அசாருதீன் கருத்து...

இந்திய அணியின் தோல்வி குறித்து முன்னாள் கேப்டனும், எம்.பியுமான அசாருதீன் கருத்து தெரிவிக்கையில்,

இந்த தொடரில் இந்திய அணி சில ஆட்டங்களில் வெற்றியின் விளிம்புக்கு வந்து தோற்றது. நம்பிக்கை இல்லாததால் இந்த தோல்வி ஏற்பட்டது.

இந்திய அணி திறமை வாய்ந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆஸ்திரேலியா போன்ற உலகின் நம்பர் ஒன் அணியுடன் விளையாடும் போது வீரர்களுக்கு நம்பிக்கை தேவை. அது இல்லாததால் தான் தொடரை இழந்தோம்.

வீரர்கள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்து இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியமானது. பெரும்பாலான வீரர்கள் காயத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

தங்களது உடல் தகுதி பற்றி வீரர்கள் உடல் இயக்க நிபுணர் அல்லது டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். தொடர்ந்து விளையாட வேண்டுமென்றால் இந்த விஷயத்தில் கவனமுடன் இருக்க வேண்டும் என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "1000 ரன் கடந்த டோணி- என்ன புண்ணியம்?!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates