கிறிஸ்மஸ் தீவில் இலங்கை -ஆப்கான் அகதிகளுக்கிடையே கடும் கைகலப்பு

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானையும் இலங்கையையும் சேர்ந்த அகதிகளுக்கிடையே சனிக்கிழமை இரவு திடீரென ஏற்பட்ட கைகலப்பில் 37 பேர் காயங்களுக்கு உள்ளானார்கள் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்துள்ளன. இலங்கையையும் ஆப்கானிஸ்தானையும் சேர்ந்த 150 தடுப்புக் காவல் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் தும்புத்தடிகள், துடுப்புக் கோல்கள், மரக்கிளைகள் ஆகியவற்றை இரு தரப்பினரும் பரஸ்பரம் பயன்படுத்தி ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 10 பேர் உடனடியாக கிறிஸ்மஸ் தீவிலுள்ள வைத்தியசாலையிலும் கடும் காயங்களுக்குள்ளான மூன்று பேர் விமானம் மூலம் கொண்டு சென்று அவுஸ்திரேலியாவின் பேர்த் மாநில வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் சிலருக்கு தாடை எலும்பும் சிலருக்கு முழங்கையும் முறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சனிக்கிழமை இரவு கிறிஸ்மஸ் தீவிலுள்ள கிறீன் புளோக் பகுதியில் இடம்பெற்ற இக் கைகலப்பு சுமார் 30 நிமிடத்திற்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்த அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரி, சண்டைக்கான காரணம் என்னவென்று கூற மறுத்துவிட்டார். கிறிஸ்மஸ் தீவு தடுப்பு நிலையங்களில் இதற்கு முன்னரும் ஆப்கான் அகதிகளுக்கும் இலங்கை அகதிகளுக்குமிடையே பதற்ற நிலை நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்தோனேஷியாவின் தன்ஜுக் பினாங் நகரில் அவுஸ்திரேலியாவின் நிதியளிப்பில் இயங்கும் தடுப்பு முகாமிலும் ஒசானிக் வைக்கிங் கப்பலிலிருந்து நான்கு வாரங்களாக இறங்க மறுத்த இலங்கை அகதிகளுக்கு சலுகை காண்பிக்கப்பட்டதாகக் கூறி ஆப்கான் அகதிகள் அவர்களுடன் பகைத்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணையில் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்படுவோருக்கு அவுஸ்திரேலியா 12 வாரங்களுக்குள் புகலிடம் அளிக்குமென இணங்கப்பட்டதன் பேரில் இலங்கை அகதிகள் கப்பலிலிருந்து இறங்கி இந்தோனேஷிய தடுப்பு முகாமில் தங்கியிருக்க இணங்கியமை குறிப்பிடத்தக்கது.கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டு, இந்த வருடம் அவுஸ்திரேலிய பாதுகாப்பு விசா பெற்றுக் கொண்டவர்களில் ஆப்கானியர்களே அதிகமானவர்களாவர். இந்த வருடம் அக்டோபர் 12ஆம் திகதிவரை ஆப்கான் அகதிகள் 544 பேரும் இலங்கை அகதிகள் 21 பேரும் பாதுகாப்பு விசாவை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அகதிகளாக வருவோர் உண்மையில் அகதிகள் தானா என்பதை 90 நாட்களுக்குள் பரிசீலித்து பூர்த்தி செய்வதே அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நோக்கமாகும்.இதேவேளை, ஆப்கானிஸ்தானியர்களை பொறுத்தமட்டில் 60 நாட்களுக்குள்ளேயே அது தொடர்பான நடவடிக்கைகள் பூர்த்தியடைவதுண்டு.
அகதிகளாக வரும் இலங்கையர்கள் உண்மையில் அகதிகள் தானா என்ற விபரங்களைஅவுஸ்திரேலிய அரசாங்கம், இலங்கை தூதுவராலயத்தின் ஊடாகவே மேற்கொள்வதுண்டு. எனினும், இலங்கை தூதரகம் அது தொடர்பான நடவடிக்கையை காலதாமதமாக்கி வருவதனால் இலங்கை அகதிகளின் விசா பெறும் நடவடிக்கைகள் பின்தள்ளப்படுவதாக அகதிகள் அந்தஸ்த்து கோரும் தகவல் நிலையத்தைச் சேர்ந்த பமிளா கூர் தெரிவித்துள்ளார். மேலும், அகதி அந்தஸ்த்து கோரும் தமிழர்கள் தாங்கள் செல்வதற்கு இடமில்லை எனவும், தாங்கள் எங்கே செல்வது எனவும் கேள்வி எழுப்புகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, எதிர்க்கட்சி குடிவரவு பேச்சாளரான சர்மா ஸ்டோன் இது குறித்து கருத்து வெளியிடுகையில்,
தடுப்பு முகாமில் வைத்திருப்போர் குறித்து துரிதமான மீள் பரிசீலணை அவசியம் கிறிஸ்மஸ் தீவிலுள்ள தடுப்பு முகாமில் அதிக எண்ணிக்கையானோர் தடுத்து வைத்திருப்பதாகவும் இது குறித்து தாம் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் பாதுகாப்பு சீர்குலைவிற்கு காரணம் என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.







0 Response to "கிறிஸ்மஸ் தீவில் இலங்கை -ஆப்கான் அகதிகளுக்கிடையே கடும் கைகலப்பு"
แสดงความคิดเห็น