jkr

இலங்கை மக்கள் அனைவருக்கும் அனைத்து விதமான தேவைகளையும் பெற்றுக் கொடுப்பதோடு அவர்கள் சுதந்திரமாக வாழக் கூடிய சுதந்திரத்தை உருவாக்கியுள்ளோம். - ஜனாதிபதி

இலங்கை மக்கள் அனைவருக்கும் அனைத்து விதமான தேவைகளையும் பெற்றுக் கொடுப்பதோடு நாட்டில் கடந்த 30 வருடங்கள் இல்லாத அபிவிருத்திகள் வடக்கின் வசந்தம் செயல் திட்டத்தின் கீழ் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்றையதினம் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். மேற்படி கூட்டத்தில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா றிசாத் பதியுதீன் மில்ரோய் எஸ்.பெர்ணான்டோ புத்திரசிகாமணி ஜனாதிபதியின் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்து உரையாற்றுகையில் எமது நாடானது சகல சமூகங்களுக்கும் சொந்தமானது. தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் என்ற பேதம் இங்கில்லை. அனைத்து மக்களும் எமது இலங்கை தேசத்தின் பிள்ளைகளே. இம்மக்களது அனைத்து விதமான தேவைகளையும் பெற்றுக் கொடுப்பதோடு, அவர்கள் சுதந்திரமாக வாழக் கூடிய சுதந்திரமும் உருவாகியுள்ளது. எமது நாட்டின் மக்கள் எல்லோரும் சமமானவர்கள் என்பதை நான் உறுதிப்படுத்தியுள்ளேன். முதலாவது, இரண்டாவது மூன்றாவது என்ற இடங்களில் இருக்க வேண்டியது எமது தாய் நாடே. அதனை எவருக்கும் விட்டுக் கொடுக்கக்கூடாது.

மன்னார் மாவட்டம் பின்தங்கிய அபிவிருத்தி குறைந்த ஒதுக்கப்பட்ட பிரதேசமல்ல. அனைத்து துறைகளிலும் அபிவிருத்திகளிலும் முன்னேற்றம் அடைந்து வரும் பிரதேசம் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அதேபோன்ற அபிவிருத்திகள் எதிர்காலத்தில் உங்களை வந்தடையவுள்ளது. எனது நான்கு வருட ஆட்சிக் காலத்தில் நாட்டை மீட்டெடுத்தேன். இன்று நீங்கள் கடற்றொழிலுக்கு சுதந்திரமாக போகலாம். விவசாயம் செய்யலாம். தொழில்களுக்குச் செல்லலாம். ஏன், அச்சமின்றி எங்கும் பயணிக்கலாம். இதை நான் உங்களுக்குப் பெற்றுக் கொடுத்துள்ளேன்.

நான் அன்று கடற்தொழில் அமைச்சராக இருந்த போது வங்காளையில் மீன்பிடி கூட்டுத்தாபனத்தை ஏற்படுத்திக் கொடுத்தேன். குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் விவசாயத்துறையினை மேம்படுத்தி வருகின்றோம். அதற்கான நீர்ப்பாசனத் திட்டங்களைப் புனரமைப்பு செய்துள்ளோம். அதே போன்று விவசாயிகளைப் பாதுகாத்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவோம். இப்பிரதேச மாணவ சமூகம் கல்வித் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே எனது அவாவாகும்.

அரசாங்கத்தினதும் ஏனைய துறைகளினதும் உயர் பதவிகளை இப்பிரதேச மக்கள் வகிக்க வேண்டும். அதற்காகப் பிரார்த்தனை புரிகின்றேன். தொழிலற்ற கல்வி கற்ற இளைஞர் யுவதிகளுக்குத் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளேன். பட்டதாரிகள் தொழில்களை பெறவுள்ளனர். நான் ஒரு போதும் பொய் வாக்குறுதி அளித்ததில்லை. அளிக்கப் போவதுமில்லை. செய்வதை தான் சொல்வேன். சொல்வதை தான் செய்வேன்.

இந்த நாட்டில் இனவாதம் இருக்க முடியாது. அது எமக்கு பெரும் ஆபத்தையுயும், அழிவையுமே ஏற்படுத்தும். தமிழ்ப் பேசும் மக்கள் எமது மக்கள். நாம் அவர்களை நேசிக்கின்றோம். நீங்களும் என்னை நேசிக்கின்றீர்கள். இதுதான் யதார்த்தம். நீங்கள் கௌரவமாக வாழ்வதற்கான உத்தரவாதத்தை நான் தருகின்றேன். அதனை பாதுகாக்க வெண்டியது எனது கடமையும் பொறுப்புமாகும். எதிர்வரும் 26ஆந் திகதி உங்கள் வாக்குகளை எனக்கு அளிப்பீர்கள் என்று நம்புகின்றேன். வெற்றிலைச் சின்னம் வெற்றியின் சின்னம். வெற்றிலைச் சின்னம் உங்களின் சின்னம். 27 ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதியாக உங்களைச் சந்திக்க வருவேன். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றும்போது தெரிவித்தார்.







  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இலங்கை மக்கள் அனைவருக்கும் அனைத்து விதமான தேவைகளையும் பெற்றுக் கொடுப்பதோடு அவர்கள் சுதந்திரமாக வாழக் கூடிய சுதந்திரத்தை உருவாக்கியுள்ளோம். - ஜனாதிபதி"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates