jkr

செய்தியறிக்கை


இடிபாட்டில் அகப்பட்ட ஒரு பெண்ணுக்கு சிகிச்சை வழங்கப்படுகின்றது
இடிபாட்டில் அகப்பட்ட ஒரு பெண்ணுக்கு சிகிச்சை வழங்கப்படுகின்றது

ஹெய்ட்டிக்கு உதவிகளை அனுப்புவதில் சிரமம்

பெரும் பூகம்பம் ஏற்பட்ட ஹெய்ட்டியில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானோருக்கு அவசர உதவிப் பொருட்களைக் கொண்டு சேர்க்க தாங்கள் போராடிவருவதை சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தினால் ஏற்பட்டுள்ள கடுமையான அழிவுகள் நிவாரணப் பொருட்களையும் கருவிகளையும் கொண்டு சேர்ப்பதென்பதை மிகவும் சிரமமாக்கியுள்ளதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் கூறியுள்ளது.

இருபது லட்சம் பேர் வரையிலானவர்களுக்கு உணவு உதவி வழங்க ஐ.நா. எண்ணம் கொண்டுள்ளது என்றாலும் தற்போது வெறும் நான்காயிரம் பேரை மட்டுமே அதனால் சென்றடைய முடிந்துள்ளது.

அமெரிக்காவின் விமானந்தாங்கிக் கப்பலான கார்ல் வின்சன் ஹெட்டியை சென்றடைந்துள்ளது.

அதிலிருந்த ஹெலிகாப்டர்கள் தலைநகருக்கு உணவுப் பொருட்களின் விநியோகத்தை ஆரம்பித்துள்ளன.


நீண்ட சூரிய கிரகணம்

சூரிய கிரகணம்
சூரிய கிரகணம்
ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய வருடாந்த நீண்ட சூரிய கிரகணத்தை இன்று ஆப்ரிக்க மற்றும் ஆசிய பிராந்திய நாடுகளில் காணக்கூடியதாக இருந்தது.

இதன்போது சூரியனின் மையப்பகுதியை சந்திரன் மறைத்ததன் விளைவாக, சூரியனின் வெளிவட்டமானது வைர மோதிரம் போல் ஜொலித்தது.

இந்தச் சூரிய கிரகணம் மத்திய ஆப்ரிக்க பகுதியில் முதலில் தெரிய ஆரம்பித்தது. பிறகு படிப்படியாக இந்தக் கிரகணம் கிழக்கு ஆப்ரிக்கா, தெற்காசியா மற்றும் சீனா என்று நகர்ந்து, கடைசியாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதிகபட்சமாக 11 நிமிடம் அது நீடித்து காணப்பட்டது.

இத்தகையதொரு வருடாந்த சூரியகிரகணம் 3043 ஆம் ஆண்டு வரை மீண்டும் காண முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும்.


இரானிய போராட்டங்களுக்கு குறுந்தகவல்களைப் பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கை

செல்லிடத் தொலைபேசி குறுந்தகவல் சேவையையும் மின் அஞ்சல் சேவையையும் பயன்படுத்தி இரானின் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கு எதிராக இரான் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் போன்றவை கண்காணிக்கப்பட்டுவருவதாகவும், அவற்றை அரச எதிர்ப்பு போராட்டங்களுக்கு பயன்படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்க எடுக்கப்படும் எனவும் இரானின் காவல்துறை தலைமை அதிகாரி கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் திட்டங்களை பரப்புவதென்பது கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய செயல் என்று அவர் கூறினார்.

இரானில் சென்ற வருடம் நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து எதிர்க்கட்சிகள் செய்திருந்த போராட்டங்களின் எதிரொலியாக சீர்திருத்த ஆதரவு செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களை அரசாங்கம் மூடியிருந்தது. செல்லிட தொலைபேசி குறுந்தகவல் சேவைகளையும் அரசாங்கம் நிறுத்திவைத்திருந்தது.


இந்திய விளையாட்டுப் பொருட்களில் நச்சு இரசாயனங்கள்

இந்தியாவில் விற்கப்படுகின்ற பல பிளாஸ்டிக் விளையாட்டு சாமான்களில், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்பை உண்டாக்கக்கூடிய நச்சு இரசாயனங்கள் உள்ளன என்று இந்தியாவின் முன்னணி சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு கூறியுள்ளது.

பிளாஸ்டிக்கை மென்மையாக்க உதவும் ப்தாலேட்ஸ் எனப்படும் நச்சு இரசாயனம் விளையாட்டு சாமான்கள் உற்பத்தித் துறையினரால் பயன்படுத்தப்படுவது தொடர்பில் இந்தியாவில் எவ்வித ஒழுங்கு விதியும் இல்லை என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் கூறுகிறது.

இந்தியாவில் விற்கப்பபடும் பலவித விளையாட்டுப் பொருட்களையும் ஆராய்ந்த இந்தக் குழு, அவற்றில் அதிக அளவில் தாலேட்ஸ் இரசாயனம் இருப்பதாக கண்டறிந்துள்ளது.

கிட்டத்தட்ட பாதியளவிலான விளையாட்டுப் பொருட்களில், சர்வதேச ரீதியில் அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட அதிகமான இரசாயனம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

செய்தியரங்கம்
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

புதிய தீர்வுத் திட்டத்தை முன்வைப்பேன் என்கிறார் ராஜபக்ஷ

இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் நிராகரித்துள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், நடக்ககவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தானே தனது சொந்தமான தீர்வை முன்வைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்வதற்காக இலங்கையின் அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ள போதிலும், அது முழுமையாக என்றும் அமல்படுத்தப்படவில்லை.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் தனது அரசாங்கம் கடந்த வருடம் மே மாதத்தில் முழுமையான வெற்றியைப் பெற்றபோது, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தின் அவசியம் குறித்து மஹிந்த ராஜபக்ஷ பேசினார்.

ஆனால், அதனை வலுப்படுத்துவதற்கான எந்த திட்டமும் அவரிடம் கிடையாது என்று அவரை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள்.

அரசியலமைப்பின் மூலம், மாகாணங்களுக்கான அதிகாரத்தை அதிகரிப்பபதற்காக, நாடாளுமன்ற குழு ஒன்றினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை அவர் இப்போது தெளிவாக, பகிரங்கமாக நிராகரித்துள்ளார்.

இவ்வாறாக இந்த மாகாணங்களுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்படுவதை பல தமிழ் மக்கள் விரும்பியிருப்பார்கள். ஏனென்றால், இலங்கையின் 9 மாகாணங்களில் இரண்டில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.

ஆனால், பொதுவாக அனைத்து தரப்பாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்த விதமான தீர்வும் இதுவரை பரிந்துரைக்கப்படவில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ கூறுகிறார்.

ஆகவே, தேர்தலின் பின்னர் தானே தனது சொந்தமான ஒரு திட்டத்தை முன்வைக்கப்போவதாக அவர் கூறுகிறார்.

நாடாளுமன்றத்துக்கு ஒரு உயர் சபை ஒன்றும் மேலதிகமாக உருவாக்கப்படும் என்று அவர் கோடிகாட்டினாலும், இவற்றின் அர்த்தம் என்ன என்பது குறித்து அவர் தெளிவாக எதுவும் கூறவில்லை.

அதிகாரப் பகிர்வு என்பது தமிழர்கள் மத்தியில் வெகுவாக வரவேற்கப்படுகின்ற ஒரு வார்த்தையாக இருக்கின்ற போதிலும், ராஜபக்ஷவின் போட்டியாளரான சரத்பொன்சேகாவை ஆதரிக்கும் சிங்கள தேசியவாதக் கட்சி உட்பட பல சிங்களவர்களுக்கு அது ஒரு அழுக்குச் சொல்.

அந்த சிங்கள தேசியவாதக் கட்சி நிச்சயமாக மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதை எதிர்க்கிறது.

பொலிஸ், ஊழல் எதிர்ப்பு உட்பட பல பொது அமைப்புக்கள் தொடர்பில் சுயாதீன ஆணைக்குழுக்களை பரிந்துரைக்கும் அரசியலமைப்பு திருத்தத்தையும் அவர் நிராகரிப்பதாகக் கூறுகிறார்.

அரசியல்வாதிகளால், ஆணையாளர்கள் நியமிக்கப்படுகின்ற பட்சத்தில், அந்த ஆணைக்குழுக்கள் சுயாதீனமானவையாக இருக்கமுடியாது என்று அவர் கூறுகிறார்.

இந்த அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாத பட்சத்தில், இலங்கைக்கு ஒரு சுயாதீன தேர்தல் ஆணையம் கூட கிடைக்காது. ஒருவர் மாத்திரமே தேர்தல் ஆணையாளராக இருக்க முடியும்.


கனகரத்தினம் எம்.பி விடுதலை

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம்
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம்
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சதாசிவம் கனகரத்தினம் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

விடுவிக்கப்பட்ட போதிலும், அவர் தற்போது வவுனியாவில் உள்ள அரசாங்க விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

அவரை சக நாடாளுமன்ற உறுப்பினரான கிஷோர் சிவநாதன் சென்று பார்வையிட்டுள்ளார்.

எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி பல மாதங்களுக்குப் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாக கிஷோர் தெரிவித்துள்ளார்.

வன்னியில் நடந்த இறுதிக்கட்ட மோதல்களின்போது அவர் அங்கு சிக்குண்டிருந்தார். சுமார் 12 மாதங்கள் அங்கிருந்த அவர் பின்னர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தபோது இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டார்.


சரத் பொன்சேகாவை ஆதரிக்கிறார் சேகு இஸ்ஸதீன்

சேகு இஸ்ஸதீன்
சேகு இஸ்ஸதீன்
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னமும் 11 நாட்களே உள்ள நிலையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் சேகு இஸ்ஸதீன் இன்று தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளதோடு எதிர் கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சியான தேசிய ஐக்கிய முன்னனியைச் சேர்ந்த இவர் அந்தக் கட்சியிலிருந்தும் விலகி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இன்று இணைந்துள்ளார்.

நாட்டு மக்கள் ஆட்சி மாற்றமொன்றை எதிர்பார்ப்பதாகவும், தனி நபர் ஆட்சியிலிருந்து நாட்டை விடுவித்து ஜனநாயக ஆட்சியை நிலை நாட்டுவதற்காகவே இந்த முடிவை தான் எடுத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்

அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடும் முன்னாள் பிரதி கல்வி அமைச்சரான மையோன் முஸ்தபாவும் போட்டியிலிருந்து விலகி, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்க போவதாக இன்று ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அறிவித்துள்ளார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates