jkr

இந்தியத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற உதவியவர் ஜனாதிபதி : லலித் வீரதுங்க


இந்தியாவின் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இந்தக் கருத்தை ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த வருடம் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில், இந்திய பொதுத்தேர்தலும் இடம்பெற்றது. .

இதன் போது, தமிழர்கள் கொல்லப்படுவதை இந்தியா நிறுத்தவேண்டும் என்ற அழுத்தங்கள் தமக்கு உலகளாவிய ரீதியில் பிரயோகிக்கப்படுவதாகத் தெரிவித்த இந்திய காங்கிரஸ் கட்சி, அவ்வாறு நிறுத்தாவிட்டால் தமிழகத்தில் உள்ள தமிழர்கள், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற வாதத்தை முன்வைத்ததாக லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

எனினும் இதற்கு இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதியில் தூரத்தில் இருந்து ஏவக்கூடிய பாரிய ஆயுதத் தாக்குதல்களை மாத்திரம் நிறுத்துவதற்கு ஜனாதிபதி இணங்கினார்.

இதனையடுத்து, இந்திய தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழக வாக்காளர்களின் வாக்குகள் கிடைத்ததாக தெரிவித்துள்ள லலித் வீரதுங்க, மஹிந்த ராஜபக்ஷவின் உதவியினால் இந்திய காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றிப்பெற்றதாகக் கூறியுள்ளார்.

அதேவேளை, பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட் மற்றும் பிரான்ஸின் வெளியுறவு அமைச்சர் பேர்னாட் குச்னர் ஆகியோர் ஜனாதிபதியிடம் இந்தப் போரை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டபோது அதற்கு இணங்காத மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை எந்த ஒரு நாட்டினதும் குடியேற்ற நாடல்ல எனத் தெரிவித்ததாக லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழிக்காமல் தாம் இருக்கப்போவதில்லை எனத்தெரிவித்த ஜனாதிபதி தம்மைத் தெரிவுசெய்த மக்களுக்குத் தாம் பொறுப்புக் கூற கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டதாக லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தாம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் செயலாளராக இருப்பதில் பெருமிதம் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின், ஆலோசனையின் அடிப்படையிலேயே யுத்தத்தில் வெற்றிபெற முடிந்ததாக குறிப்பிட்ட அவர், முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான சரத் பொன்சேகாவின் பங்களிப்புக் குறித்த கேள்விக்கு எவ்வித பதிலையும் வழங்கவில்லை.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இந்தியத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற உதவியவர் ஜனாதிபதி : லலித் வீரதுங்க"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates