வவுனியா சிவன் முதியோர் இல்லத்தின் 220 முதியவர்களில் 40 வீதமானோர் நடமாட முடியாதவர்கள்

வவுனியா கோவில்குளம் (சிவன்கோவில்) அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலய அறங்காவலர் அவையினரால் சமளங்குளம் பாடசாலை வளவில் நடத்தப்பட்டு வருகின்ற சிவன் முதியோர் இல்லத்தில் 220 முதியவர்கள் இருப்பதாக அதன் பொறுப்பாளர் ஆறுமுகம் நவரட்ணராஜா தெரிவித்துள்ளார். இவர்களில் 60 பேர் பெண்கள். 40 வீதமானவர்கள் நடமாட முடியாதவர்கள். அவர்கள் படுக்கையிலேயே வைத்து பராமரிக்கப்படுகின்றார்கள் எனவும் நவரட்ணராஜா தெரிவித்துள்ளார். வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் இருந்து விசேட கவனிப்புக்காக இந்த முதியோர் இல்லத்திற்கு இந்த முதியவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், , இவர்களை வைத்துப் பராமரிப்பதற்கு சமளங்குளம் அரசினர் தமிழ்கலவன் பாடசாலையை அரசாங்கம் கோவில்குளம் சிவன்கோவில் ஆலய நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முதியோர் இல்லம் குறித்து அதன் பொறுப்பாளரும் வவுனியா கோவில் குளம் சிவன்கோவில் அறங்காவலர் அவையின் செயலாளருமாகிய நவரட்ணராஜா மேலும் தெரிவித்ததாவது: இடைத்தங்கல் முகாம்களின் குடும்பங்களைச் சேர்ந்த முதியவர்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருவது குறித்து கேள்விப்பட்டதும், அவர்களுக்கு எமது ஆலய அறங்காவலர் அவையினால் ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனை எங்களுக்கு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அரச தரப்பினரும் இந்த முதியவர்களைப் பொறுப்பேற்று பராமரிக்க வேண்டும் என எங்களிடம் கேட்டுக்கொண்டார்கள். நாங்களும் அதற்கு உடன்பட்டதையடுத்து, சமளங்குளம் பாடசாலை வளவைக் கொடுத்ததார்கள். அதில் முதியவர்களை வைத்துப் பராமரிப்பதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்தோம். கடந்த மே மாதம் இந்த இல்லத்தை நாங்கள் 100 முதியவர்களுடன் ஆரம்பித்தோம். அப்போது அந்த முதியவர்கள் பலர் மிகவும் ஆரோக்கியம் குன்றியவர்களாக இருந்தார்கள். அந்த மாதம் முதல் 29 தினங்களில் சுமார் 22 பேரளவில் இறந்து போனார்கள். நாங்கள் மனந்தளரவில்லை. படுத்த படுக்கையாக இருந்த அனேகரை. சேவையில் அர்ப்பணிப்புள்ள பணியாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டி, கூடிய கவனமெடுத்து பராமரித்தோம். வைத்திய சேவையும் எங்களுக்கு கைகொடுத்தது. இதனையடுத்து, ஆரோக்கியம் குன்றியிருந்த பலர் தேறி, சுகதேகியானார்கள். முறையான கவனிப்பு சரியான நேரத்திற்கு, சரியான உணவு என்பவற்றின் மூலம் இந்த முதியவர்களை நாங்கள் பராமரித்தோம். இங்கு வந்த முதியவர்களும் எங்களுக்கும் பணியாளர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கி எமது சேவையைத் திறம்பட செய்வதற்கு உதவினார்கள். அரசாங்கம் எங்களுக்குப் பெரிய அளவில் உதவிகள் செய்யாவிட்டாலும், சமூக சேவைகள் அமைச்சு எங்களுக்குப் பொது நிறுவனங்களின் உதவிகள் கிட்டுவதற்குப் பேருதவியாக இருந்து வருகின்றது. இங்குள்ள ஒரு முதியவருக்கு நாளொன்றிற்கு 354 ரூபா செலவாகின்றது. இந்த நிதியின் ஒரு பகுதியை கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயம் வழங்கி உதவுகின்றது. இதேவேளை, வவுனியா வர்த்தக பெருமக்களும் எங்களுக்குத் தங்களால் இயன்ற பொருள் பண்டங்களை வழங்கி இந்த முதியவர்களை நல்ல முறையில் பராமரிப்பதற்கும், அவர்களுக்கான ஆரோக்கியம் தரவல்ல உணவுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் உதவி வருகின்றார்கள். தொண்டு நிறுவனங்கள் பலவும் மா, சீனி போன்ற உலருணவுகளையும், முதியவர்களுக்குரிய படுக்கை வசதிகளுக்கான பொருட்களை வழங்கியும், இருப்பிடங்களுக்கான கொட்டில்கள் போன்றவற்றை அமைத்து வழங்கியும் உதவி வருகின்றன. நாங்கள் ஓர் இந்துசமய அமைப்பாக இருந்த போதிலும், இங்கு வருகின்ற முதியவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களை மத வேறுபாடுகளின்றி பொறுப்பேற்று அவர்களுக்குரிய வசதிகளைச் செய்து பராமரித்து பேணி பாதுகாத்து வருகி்ன்றோம். இங்கு வருகின்ற முதியவர்களுடைய உறவினர்கள் யாராவது வெளியில் இருந்து, அவர்கள் வந்து இவர்களைத் தங்களுடன் அழைத்துச் செல்வதற்கு விரும்பினால், அவர்களது பிரதேச கிராம சேவை அதிகாரியின் சிபாரிசு, பிரதேச செயலாளரின் அனுமதி, அரசாங்க அதிபரின் உத்தரவு ஆகியவற்றை உரிய முறைப்படி ஆவணமாகப் பெற்றுக் கொண்டு அவர்களுடன் இந்த முதியவர்களை அனுப்பி வைக்கின்றோம். பலர் அவ்வாறு அழைத்துச் சென்றிருக்கின்றார்கள். சில முதியவர்கள் அவ்வாறு உறவினர்கள் வந்து அழைத்த போதிலும், அவர்களுடன் செல்வதற்கு விரும்பாமல் எங்களுடனேயே இருந்து வருகின்றார்கள். எங்கள் ஆலய அறங்காவலர் அவையினரால் ஆதரவற்ற சிறுவர் சிறுமியர்களுக்கு அருளகம் என்ற சிறுவர் இல்லத்தின் மூலம் அபயமளித்து அவர்களைப் பராமரித்து வருகின்றோம். இதேவேளை, சமூகத்தில் ஆதரவற்ற முதியவர்களுக்கான ஒரு முதியோர் இல்லைத்தை அமைக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டிருந்தோம். அதற்கு அரசாங்கம் எங்களுக்கென இடம் ஒதுக்கி காணியை வழங்கியுள்ளது. அதில் முதியவர்களைப் பராமரிப்பதற்கான கட்டிடங்களை அமைத்து வருகின்றோம். அந்தக் கட்டிடப் பணிகள் முடிவடைந்ததும், சமளங்குளம் பாடசாலையில் இயங்கி வருகின்ற சிவன் முதியோர் இல்லத்தை அங்கு மாற்றுவதற்கு இருக்கின்றோம். அத்துடன் இடைத்தங்கல் முகாம்களில் இன்னும் பராமரிக்க வேண்டிய தேவையுடைய முதியவர்கள் இருப்பதாக அதிகாரிகள் எங்களுக்குத் தெரிவித்துள்ளார்கள். அவர்களையும் பொறுப்பேற்று புதிய கட்டிடத்தில் வைத்துப் பராமரிப்பதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு சிவன் முதியோர் இல்லத்தின் பொறுப்பாளராகிய ஆறுமுகம் நவரட்ணராஜா தெரிவித்தார்.







0 Response to "வவுனியா சிவன் முதியோர் இல்லத்தின் 220 முதியவர்களில் 40 வீதமானோர் நடமாட முடியாதவர்கள்"
แสดงความคิดเห็น