மதவாச்சியில் சோதனைகள் தளர்வு : வாகனப் போக்குவரத்திற்கு இன்னமும் அனுமதியில்லை

மதவாச்சி சோதனைச்சாவடிகளில் முன்பிருந்த கடும் நடவடிக்கைகளில் தற்போது தளர்வேற்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வீதியினூடான போக்குவரத்துக்கள் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பு, கண்டி உட்பட்ட தென்பகுதி பிரதேசங்களுக்கும், மட்டக்களப்பு பகுதிகளுக்கும் பஸ்களில் செல்லும் பிரயாணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கும், யாழ். மாவட்டத்திற்கும் பொருட்களை ஏற்றிச் செல்லும் லொறிகள் இங்கு சோதனையிடப்படுவது நிறுத்தப்பட்டிருக்கின்றது. இதனால், லொறிகள் பொருட்களுடன் தங்கு தடையின்றி தமது பிரயாணத்தை மேற்கொள்ளக் கூடியதாக இருப்பதாக லொறிச் சாரதிகள் தெரிவித்துள்ளனர். தடைகளின்றி பொருட்கள் கொழும்பில் இருந்து மதவாச்சியூடாக வருவதால், வர்த்தக நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.தம்புள்ளையில் இருந்து மரக்கறி வகைகள் நேரத்திற்கே வவுனியா, மன்னார் சந்தைகளை வந்தடைவதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதிகளவில் மரக்கறிகள் இப்போது வரத் தொடங்கியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.முன்னர் மன்னாரில் இருந்து மாத்திரமே வவுனியா மீன்சந்தைக்கு மீன்கள் கொண்டு வரப்பட்டதாகக் கூறும் மீன் வியாபாரிகள், தற்போது நீர்கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் இருந்தும் மீன்வகைகள் வவுனியா சந்தைக்குக் கொண்டு வரப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.இருப்பினும், வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து பொருட்களையும், இப்பிரதேசங்களின் உற்பத்திப் பொருட்களையும் ஏற்றிச் செல்கின்ற லொறிகள் மதவாச்சி சோதனைச்சாவடியில் இறக்கி சோதனையிட்டு ஏற்றப்படுவதால் ஏற்படுகின்ற காலதாமதத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேபோன்று, மதவாச்சி சோதனைச்சாவடியூடாக பயணிகள் வாகனங்களிலோ அல்லது பஸ்களிலோ நேரடியாகப் பிரயாணம் செய்வதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறித்து பயணிகள், பஸ் உரிமையாளர்கள், சாரதிகள் ஆகியோர் கவலை வெளியிட்டுள்ளனர்.







0 Response to "மதவாச்சியில் சோதனைகள் தளர்வு : வாகனப் போக்குவரத்திற்கு இன்னமும் அனுமதியில்லை"
แสดงความคิดเห็น