மலேசியாவில் ஏமாற்றப்பட்ட 30 பேர் சென்னை திரும்பினர்

மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறியதை நம்பி, தமிழகம், ஆந்திரா, ஒரிசா, பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 30 பேர் மும்பையைச் சேர்ந்த டிராவல் ஏஜென்ட் எஸ்.என்.நாயர் என்பவரிடம் தலா ரூ.60 ஆயிரம் வழங்கினர்.இவர்கள் அனைவருக்கும் கட்டுமானத் துறையில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக நாயர் உத்தரவாதம் அளித்தார். ஆனால், அந்த 30 பேரும் மலேசியா சென்றடைந்த போது அவர்களுக்கு உணவு விடுதிகளில் பாத்திரம் கழுவும் பணியும், சுகாதாரப் பணியும் சொற்ப சம்பளத்தில் வழங்கப்பட்டது.இந்தப் பணியை ஏற்காத காரணத்தால் நாயருக்கு நெருக்கமான மலேசிய ஆட்கள் ஒரு சிலரை தாக்கியதுடன், அவர்களுக்கு உணவு வழங்காமல் பட்டினி போட்டனர்.ஏமாற்றப்பட்ட ஊழியர்களில் ஒரு சிலர் அயல்நாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவிக்கு தங்களின் அவல நிலை குறித்து மின்னஞ்சல் அனுப்பினர். இதையடுத்து மலேசிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசிய வயலார் ரவி அந்த 30 பேரும் நாடு திரும்பத் தேவையான நடவடிக்கைகளை எடுத்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து அந்த 30 பேரும் இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். அவர்களில் ஒரு சிலர் பேசுகையில், மலேசியாவில் உள்ள இந்திய அதிகாரிகள் தங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும், தங்களின் சொந்த செலவில் இந்தியா திரும்பியதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.







0 Response to "மலேசியாவில் ஏமாற்றப்பட்ட 30 பேர் சென்னை திரும்பினர்"
แสดงความคิดเห็น