வவுனியா இடைத்தங்கல் முகாம் முதியவர்கள்: இரண்டு முதியோர் இல்லங்களிடம் 93 பேர் ஒப்படைப்பு
வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ள முதியவர்களில் 93 பேர் இரண்டாம் கட்டமாக புதனன்று இரண்டு முதியோர் இல்லங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டாம் கட்டத்தில் 500 பேர் முகாம்களில் இருந்து வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்கப்பட்டிருந்தது. இவர்களில் 300 பேரை அகில இலங்கை இந்து மாமன்றத்தினரிடமும், 200 பேரை வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் முதியோர் இல்லத்தினரிடமும் ஒப்படைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆயினும் 93 முதியவர்கள் மட்டுமே வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 47 பேர் அகில இலங்கை இந்து மாமன்றத்தினரிடமும், 46 பேர் வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் முதியோர் இல்லத்தினரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள். அகில இலங்கை இந்து மாமன்றத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட 47 பேரும் திருக்கேதீஸ்வரம் ஆலயப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள். அங்குள்ள அம்மையப்பன் இல்லத்தில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை இந்துமா மன்றத்தின் சமூகநலக் குழுவின் தலைவராகிய சின்னத்துரை தனபாலா தெரிவித்துள்ளார். இடைத்தங்கல் முகாம்களில் உள்ள முதியவர்கள் வெளியில் சென்று உறவினர்களிடமும், முதியோர் இல்லங்களிலு்ம வசிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதற்கான முயற்சிகளை சமூகசேவைகள், சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Response to "வவுனியா இடைத்தங்கல் முகாம் முதியவர்கள்: இரண்டு முதியோர் இல்லங்களிடம் 93 பேர் ஒப்படைப்பு"
แสดงความคิดเห็น