வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று முடிவடைந்தன - யாழ் மாவட்டம் முதலிடத்தில்
மேற்படி வைபவத்தில் பிரதம அதிதிகளாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாவட்ட அரச அதிபர் கே. கணேஷ் அவர்களும் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் அவர்களும் வட மாகாண விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் திரு அண்ணாத்துறை அவர்களும் கலந்து கொண்டனர்.
நடந்து முடிந்த வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் யாழ் மாவட்டம் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. இரண்டாம் இடத்தை வவுனியா மாவட்டமும் மூன்றாமிடத்தை மன்னார் மாவட்டமும் பெற்றுக் கொண்டன. அதே நேரம் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவ மாணவிகளும் இப்போட்டியில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாக காணப்பட்டது.
மேற்படி இறுதி தின வைபவத்தில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவ மாணவிகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன் யாழ் மாவட்டத்தில் இப்போட்டி நடாத்தப்பட்டு முடிவடைந்துள்ள நிலையில் இது எமது எதிர்காலத்தின் நம்பிக்கையை எமக்கு கொண்டு தருவதாகவும் இதையொரு விடிவெள்ளியாக கருத வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இன்னும் பல போட்டிகள் இங்கு நடைபெற்று எமது மாணவ மாணவிகளின் விளையாட்டுத் திறைமைகள் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் முன்னெடுக்கப்பட வேண்டும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
வடமாகாண ஆளுநர் தனது உரையின் போது இன்றைய தினம் வெற்றியீட்டிய விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் விளையாட்டுப் பயிற்சி பாசறை ஒன்றை தான் அமைக்கவுள்ளதாகவும் அதில் திறமையாற்றும் விளையாட்டு வீர வீராங்கனைகளை சர்வதேச மட்டத்திற்கு அழைத்துச் செல்வதாக தெரிவித்ததுடன் வட மாகாணத்திலே இருக்கக் கூடிய பாடசாலைகளுக்கும் விளையாட்டுக் கழகங்களுக்கும் தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்க தான் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
0 Response to "வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று முடிவடைந்தன - யாழ் மாவட்டம் முதலிடத்தில்"
แสดงความคิดเห็น