jkr

தோழர் நடராசா அற்புதராஜா ரமேஸ் அவர்களின் 10வது ஆண்டு நினைவு தினத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய பேச்சாளர்களின் கருத்துக்கள்!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் செயலாளரும் தினமுரசுப் பத்திரிகையின் நிறுவனரும் பிரதம ஆசிரியரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் நடராசா அற்புதராஜா ரமேஸ் அவர்களின் 10வது ஆண்டு நினைவு தினம் நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

நேற்று மாலை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் எம். சந்திரகுமார் அசோக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய ஊடகவியலாளர் ருஷாங்கன் கருத்துத் தெரிவிக்கையில் தினமுரசுப் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவிருந்த நடராசா அற்புதராஜா அவர்களின் எழுத்தாற்றல் ஊடக ஆளுமை தொடர்பாடற் திறன் என்பனவற்றைப் பாராட்டி நினைவு கூர்ந்ததுடன் யுத்தம் இடம்பெற்ற காலம் முதல் தற்போது வரையான ஊடகங்களின் செயற்பாட்டில் மாற்றம் ஏற்படுவதுடன் சரியான பாதையை மக்களுக்கு இனங்காட்ட வேண்டிய பொறுப்பு பத்திரிகைகளுக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஈ.பி.டி.பி.யின் மூத்த உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தோழர் சிவதாஸன் கருத்துத் தெரிவிக்கையில் அற்புதன் ஒரு அற்புதமான சகல ஆற்றல்களும் பொருந்தியவர் என்றும் ஆரம்ப காலத்தில் ஆயுதப் போராளியாகப் பயிற்சி முகாம்களில் அரசியல் வகுப்புக்களை நடாத்திய வேளையில் சந்திக்க நேர்ந்ததாகத் தெரிவித்ததுடன் பின்னர் எழுத்தாளனாக, தினமுரசுப் பத்திரிகையின் ஸ்தாபன ஆசிரியராக அப்பத்திரிகையைச் சகல அம்சங்களும் கொண்ட ஒரு முழுமை பெற்ற பத்திரிகையாக வெளிக் கொண்டு வருவதிலும் வெற்றி பெற்றார்.

அவர் தனது ஆற்றல்களைப் பல்வேறு துறைகளில் இனங்காட்டியதாகத் தெரிவித்த தோழர் சிவதாஸன் வானொலிக் கலைஞராக மக்கள் குரல் என்னும் வானொலி நிகழ்ச்சியை நடாத்தியதுடன் நாடகத் தயாரிப்பாளராகவும் நாடக ஆசிரியராகவும் சிறந்த நடிகனாகவும் தன்னை வெளிப்படுத்தியதுடன் பல்வேறு துறைகளிலும் ஏனையோர் வியந்து பாராட்டுமளவிற்கு ஆற்றல் படைத்தவராக விளங்கியதாகவும் மேலும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஈ.பி.டி.பி.யின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் கீ.பி. அவர்கள் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் தோழர் அற்புதராஜாவைச் சந்திக்கும் வாய்ப்புத் தமக்குக் கிடைத்ததாகவும், கிராமிய மக்கள் மத்தியிலுள்ள பிரச்சினைகளை முன்வைத்துச் செயலாற்றிய உழைக்கும் தொழிலாளர் சங்கங்களை ஐக்கியப்படுத்தி அம்மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காகப் பொதுவான பல போராட்டங்களை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டியது மட்டுமல்லாமல் அதற்கான ஸ்தாபன அமைப்புகளை ஏற்படுத்துவதிலும் முன்னின்று செயலாற்றியதாகத் தெரிவித்தார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஆரம்ப காலத்திலிருந்து அரசியல், சமுதாயப் பணிகளிலும் விடுதலைப் போராட்ட நடவடிக்கைகளிலும் ஒருங்கிணைந்து செயலாற்றும் வாய்ப்புத் தமக்குக் கிடைத்ததாகத் தெரிவித்த ஈ.பி.டி.பி.யின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் தனது எழுத்தாற்றலின் மூலமும் இயக்கம் சார்ந்த கொள்கைகளைப் பத்திரிகைகள் வாயிலாக முன்னெடுப்பதிலும் தமது ஆற்றலை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

ஈ.பி.டி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் கருத்துத் தெரிவிக்கையில் தோழர் நடராசா அற்புதராஜா ரமேஸ் அவர்களுடன் நீண்டகாலம் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் செயலாளராகவும், தினமுரசுப் பத்திரிகையின் நிறுவனராகவும் ஆசிரியராகவும் கடமையாற்றியதுடன் பத்திரிகைத் துறை வரலாற்றிலேயே ஒரு வாராந்தரப் பத்திரிகையை மக்கள் போட்டி போட்டு வாங்குமளவிற்கு சிறப்பானதாக வெளிக் கொண்டு வருவதில் முத்திரிரை பதித்தவர் எனத் தெரிவித்தார்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் பிரதீபன் கருத்துத் தெரிவிக்கையில் கிளிநொச்சியிலுள்ள அக்கராயன் பகுதிப் பாடசாலையில் மாணவனாக இருந்த காலத்திலேயே தமக்குத் தினமுரசுப் பத்திரிகையைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்ததாகத் தெரிவித்ததுடன் அக்காலப் பகுதியில் வாரப் பத்திரிகை அக்கராயன் பகுதிக்கு வர முடிந்தது என்றால் அது அந்தப் பத்திரிகையின் சிறப்பையும் மகத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதாகத் தெரிவித்தார்.

வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் ஸ்ரீதரன் தனது உரையில், பல்வேறு அரசியல் கருத்துக்கள் இயக்கங்கள் வாயிலாக வெளிப்பட்ட காலத்தில் அனைவராலும் தினமுரசுப் பத்திரிகை விரும்பிப் படிக்கக் கூடியதாக அமைந்திருந்தது அவரது எழுத்தாற்றலை வெளிப்படுத்தியதாகத் தெரிவித்ததுடன் அவரது சாதனைகளைப் பலரும் பட்டியலிட்டுத் தெரிவித்தாலும் இன்றைய இளைஞர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அவரது எழுத்துக்களைப் புத்தக வடிவத்தில் அச்சிட்டு வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆவன செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் புலவர் கலாபூசனம் அரியநாயகம் புலவர் திரு. தட்சணாமூர்த்தி முன்னாள் அதிபர் திரு. ஸ்ரீபதி ஈ.பி.டி.பி.யின் சிரேஷ்ட உறுப்பினர் தோழர் கே.சுப்பையா ஆகியோரும் உரை நிகழ்த்தியதும் குறிப்பிடத்தக்கதாகும்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தோழர் நடராசா அற்புதராஜா ரமேஸ் அவர்களின் 10வது ஆண்டு நினைவு தினத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய பேச்சாளர்களின் கருத்துக்கள்!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates