சென்னையில் தனியாக இருந்த வயதான லட்சாதிப் பெண் படுகொலை

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த வயதான லட்சாதிப் பெண் கொடூரமாகக் கொல்லப்பட்டார். கொலை காரன் அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்ததோடு, கத்தியையும் அப்படியே கழுத்திலேயே தொங்க விட்டுச் சென்றுள்ளான். வீட்டில் நகைகளும் திருடு போயுள்ளன.
சென்னையில் தனியாக இருக்கும் பெண்களைக் குறி வைத்துக் கொலை செய்யும் செயல்கள் சற்று இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.
அசோக் நகரில் தாய், மகன் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். பனையூரில் வயதான தம்பதி சுட்டுக் கொல்லப்பட்டனர். வேளச்சேரியில் வயதான பெண் படுகொலை செய்யப்பட்டார். சைதாப்பேட்டையில் வயதான தம்பதியை சங்கீதா என்ற பெண் கொலை செய்தார்.
இந்த நிலையில் அதே சைதாப்பேட்டையில் மீ்ண்டும் ஒரு கொலை நடந்துள்ளது.
ஜெயலட்சுமி (65) என்பவர், சைதாப்பேட்டை சி.ஐ.டி. காலனி 1-வது மெயின் ரோட்டில் உள்ள தேவ் அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் தனது கணவர் கஜபதியுடன் (74) வசித்து வந்தார்.
இந்தத் தம்பதிக்கு 3 மகன்கள். மூவருக்கும் கல்யாணமாகி விட்டது. கண்ணன், சூரியநாராயணன் என்ற 2 மகன்கள் அமெரிக்காவில் வேலை பார்க்கிறார்கள். அங்கேயே குடும்பத்துடன் வசிக்கிறார்கள். அருண் கவுசி என்ற 3-வது மகன் கனடாவில் வேலை பார்த்துக்கொண்டு அங்கேயே குடும்பத்துடன் வாழ்கிறார்.
5 வருடங்களுக்கு முன்பு இந்த ஃபிளாட்டை வாங்கி குடியேறினர் கஜபகதியும், ஜெயலட்சுமியும். வீட்டில் இவர்கள் மட்டுமே. வேறு யாரும் உடன் இல்லை.
கஜபதி தினமும் மாலை 3 மணிக்கு கிண்டி ரேஸ் கிளப்புக்கு வாக்கிங் போய் விடுவார். 6 மணியளவில்தான் திரும்புவார். அதேபோல நேற்றும் அவர் கிண்டி போய் விட்டார்.
மாலை 6 மணியளவில் அவர் வீடு திரும்பியபோது வெளிப்பக்கமாக வீடு பூட்டப்பட்டிருந்தது. குழப்பமடைந்த அவர் வீட்டைத் திறந்து உள்ளே போனார். அங்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
வீட்டின் ஹாலில், ஜெயலட்சுமி மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. நெஞ்சுப் பகுதி, தொடை உள்ளிட்ட இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்தியிருந்தனர். கழுத்தை அறுத்த கத்தியை அப்படியே விட்டுச் சென்றிருந்தான் கொலைகாரன்.
சுவர் முழுவதும் ரத்தம் தெறித்துக் கிடந்தது. இதைப் பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்த கஜபதி அலறினார். அதைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
ஜெயலட்சுமி வீட்டில் இருந்த நகை, பணம் எதுவும் கொள்ளை போகவில்லை. அவர் அணிந்திருந்த 15 பவுன் நகை மட்டுமே திருடு போயிருந்தது.
போலீஸார் விரைந்து வந்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டிலிருந்து வெளியேறி தி.நகர் பஸ் நிறுத்தம் வரை சென்று நின்று விட்டது.
ஜெயலட்சுமிக்குத் தெரிந்த நபர்தான் கொலை செய்திருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். கொலை செய்தது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
3 தனிப்படைகளை போலீஸார் அமைத்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.







0 Response to "சென்னையில் தனியாக இருந்த வயதான லட்சாதிப் பெண் படுகொலை"
แสดงความคิดเห็น