தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெகான் பெரேரா தலைமையிலான தென்னிலங்கை ஊடகவியலாளர் குழுவினர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்துத் தற்போதைய யாழ்.குடா நாட்டு நிலைமைகள் தொடர்பாகக் கலந்துரையாடினர். நேற்று (08) இரவு அமைச்சரின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் தற்போதைய அரசியல் சூழ்நிலை யாழ்.குடா நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் பொதுமக்களின் சுமூகமான போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த தடைகள் படிப்படியாக நீக்கப்படுவது ஏ-9 பாதை ஊடான போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கான தீர்விற்கு ஈ.பி.டி.பி. முன்வைத்துள்ள தீர்வுத் திட்டம் குறித்த பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினர். இச்சந்திப்பின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் கடந்த கால யுத்தம் முடிவிற்கு வந்துள்ளதால் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு முன்னர் கிடைத்த பல்வேறு சந்தர்ப்பங்களைப் புலிகள் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் மாறாக அச்சந்தர்ப்பங்களை எல்லாம் தமிழ் பேசும் மக்கள் மீது மேலாதிக்கம் செலுத்துவதற்குப் பயன்படுத்தியதாகத் தெரிவித்ததுடன் புலிகளின் அத்தகைய தூர நோக்கற்ற குறுகிய சுயநலத்துடனான நடவடிக்கைகளே தமிழ் பேசும் மக்களின் உயிரழிவுகளுக்கும் சொத்தழிவுகளுக்கும் இடப்பெயர்வுகளுக்கும் காரணமாக அமைந்ததாகவும் தெரிவித்தார். இலங்கை - இந்திய ஒப்பந்தம் தமிழ் பேசும் மக்களுக்குக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாகும் என்றும் அதனை அன்றைய தமிழ் தலைமைகள் சரியாகப் பயன்படுத்தத் தவறியதாகக் குற்றஞ்சாட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ் தலைமைகள் தொடர்ச்சியாக எதிர்ப்பு அரசியலை மேற்கொண்டு எடுத்ததற்கு எல்லாம் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததாகவும் குறிப்பிட்டார். இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னர் தென்னிலங்கை அரசியலிலும் நடவடிக்கைகளிலும் குணாம்ச ரீதியாகப் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அத்தகைய சூழ்நிலையிலும் தமிழ்த் தலைமைகள் மேற்கொண்ட கண்மூடித்தனமான எதிர்ப்பு அரசியல் தமிழ் மக்களுக்கு பெரும் பாதகமாக அமைந்ததாகவும் தெரிவித்தார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தமிழ் பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்விற்கு முதற்படியாக 13வது திருத்தச் சட்டத்தையும் அதற்கு மேலான அதிகாரங்களையும் பகிரும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்னும் நடைமுறைச்சாத்தியமான கோரிக்கையை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்த ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தற்போது அதுவே நடைமுறைச்சாத்தியமானது என்பதைப் பல்வேறு தரப்பினரும் உணர்ந்து வருவதாகவும் இதற்கு இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் ஆதரவு உண்டென்றும் தெரிவித்தார். கடந்த காலத்தில் ஏனைய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மீது மேலாதிக்கம் செலுத்திய புலிகள் இறுதியில் தமிழ் பேசும் மக்களை அழித்தது மட்டுமல்லாமல் தம்மையும் அழித்துக் கொண்டதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் தமிழ் பேசும் மக்களையும் அவர்களது தற்போதைய உரிமைகளையும் பாதுகாத்தவாறு மீதமான உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்தார். தென்னிலங்கை மக்களும் அரசியல்வாதிகளும் புலிகளின் நடவடிக்கைகளைக் காரணம் காட்டி தமிழ் பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைத் தட்டிக்கழித்தது போலன்றி எதிர்காலத்தில் தமிழ் பேசும் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகளை வழங்குவதற்கு முன்வர வேண்டும் என்றும் அதற்கான சூழ்நிலை தற்போது தென்னிலங்கையில் உருவாகி வருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்தார். இதேவேளை தென்னிலங்கை ஊடகவியலாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பதிலளித்ததுடன் இச்சந்திப்பில் யாழ்.குடா நாட்டு மக்களினதும் தமிழ் பேசும் மக்களினதும் பிரச்சினைகளைத் தெளிவாக தென்னிலங்கை ஊடகவியலாளர்களுக்கு விளக்கிக் கூறியதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Response to "தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்!"
แสดงความคิดเห็น