jkr

தமிழ்-முஸ்லிம் கட்சித் தலைவர்களின் மாநாடு சுவிஸில் நேற்று ஆரம்பம்


தமிழ்ப் பேசும் மக்கள் தொடர்பில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று சுவிட்சர்லாந்தில் நடைபெறுகிறது.

தமிழ்-முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் இக்கலந்துரையாடல் நேற்று முதல் நாளை வரை மூன்று நாட்களுக்கு சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெறுகின்றது.

லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் தமிழர் தகவல் மையம் என்ற தன்னார்வ தொண்டர் அமைப்பே இந்த சந்திப்புக்கும் கலந்துரையாடலுக்குமான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இனங்களிடையே ஒற்றுமை, எதிர்கால அரசியல் தீர்வு யோசனைகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்துக் கருத்துக்கள் இந்த சந்திப்பிலும் ஒன்று கூடலிலும் கலந்துரையாடப்படும் எனத் தெரியவருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா (இலங்கை தமிழரசுக் கட்சி), சுரேஷ் பிரேமச்சந்திரன்(ஈ.பி.ஆர்.எல்.எப்.), கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்), ஹென்றி மகேந்திரன்(டெலோ) ஆகியோரும் ஏனைய தமிழ் கட்சிகளான தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.டி.பி செயலாளர்நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 'புளொட்'தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா அணி) தலைவர் கே.ஸ்ரீதரன்(சுகு),தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றுகின்றனர்.

முஸ்லிம் அரசியல் கட்சிகளைப் பொறுத்த வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும்,அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்,தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இக்கலந்துரையாடலில் சர்வதேச தரப்புகளைச் சேர்ந்த நிபுணர்கள், முக்கியஸ்தர்கள் ஆலோசகர்களாகக் கலந்து கொண்டு கருத்துரை வழங்குவார்கள என தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தற்போது சுவிற்சர்லாந்தில் தங்கியிருக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கட்சி ரீதியாகவும்,கூட்டாகவும் அந்நாட்டிலுள்ள புலம்பெயர் தமிழ்ப் பேசும் மக்கள் அமைப்புக்களுடன் பல்வேறு சந்திப்புகளிலும் ஒன்று கூடல்களிலும் கலந்து கொள்வர் எனவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தமிழ்-முஸ்லிம் கட்சித் தலைவர்களின் மாநாடு சுவிஸில் நேற்று ஆரம்பம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates