jkr

நாட்டை காட்டிக் கொடுக்க இடமளியோம்-ஜனாதிபதி!


உயிர்களை அர்ப்பணித்து பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டிருக்கும் தாய் நாட்டை திருட்டுத் தனமாக உடன்படிக்கைகளின் ஊடாக மீண்டும் காட்டிக் கொடுக்க இடமளியோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மொனறாகலையில் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மொனறாகலை மாவட்ட ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் மொனறாகலை பிரதேச சபை பொதுமக்கள் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த எல்லா தேர்தல்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அமோக வெற்றியைப் பெற்றுத் தந்த மாவட்டங்களில் மொனறாகலையும் ஒன்றாகும். அந்த வகையில் இந்த சன சமுத்திரம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அமோக வெற்றியைப் பெற்றுத் தரும் என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கின்றது. ஆனால் நாம் இந்த வெற்றியைப் பேணிப் பாதுகாக்கவென உச்ச அளவில் செயற்படுவோம்.

மொனறாகலை மாவட்டத்திற்கு ஒரு பக்கம் கிழக்கு மாகாணம், மறுபக்கம் சப்ரகமுவ , ஊவா மாகாணங்கள் அமைந்திருக்கின்றன. இது வரலாற்றுச் சிறப்பு மிக்க பூமி. இங்கு ஒரு இலட்சம் வயல் நிலங்கள் இருந்துள்ளன என்று வரலாற்றில் பதிவாகியுள்ளது. என்றாலும் கடந்த கால செயற்பாடுகளால் அவை குறைந்துள்ளன. ஆன போதிலும் இப்பகுதி மீண்டும் வளமான விவசாய பூமியாகக் கட்டியெழுப்பப்படும்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து நாட்டை மீட்டுத் தருவேன் என்று வாக்குறுதி வழங்கினேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றி நாட்டை விடுவித்திருக்கின்றேன். மிகவும் அர்ப்பணிப்புடன் விடுவிக்கப்பட்டிருக்கும் நாட்டைப் பாதுகாப்பது எமது பொறுப்பாகும். இரகசிய ஒப்பந்தங்களின் ஊடாக நாட்டை மீண்டும் காட்டிக் கொடுக்க நாம் இடமளியோம்.

முப்படைகளையும் பொலிஸ் துறையையும் சேர்ந்த 27 ஆயிரம் பேர் தங்கள் உயிர்களை அர்ப்பணித்துத்தான் இந்த நாட்டைப் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டெடுத்திருக்கின்றார்கள். இந்த நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. நாட்டில் ஊழல், மோசடிகளை ஒழித்துக்கட்டும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். அதேநேரம் நாட்டைப் பாரியளவில் துரிதமாக அபிவிருத்தி செய்யவும் திட்டமிட்டிருக்கிறோம்.

வீதி, மின்னுற்பத்தி, துறைமுக நிர்மாணங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இவை யுத்தம் ஒரு பக்கம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மறுபக்கம் மேற்கொள்ளப்பட்டன.மொனறாகலை ஆஸ்பத்திரி 4000 லட்சம் ருபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்றது. இதற்கு தேவையான சகல வேலைத் திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம், விமான நிலையம் என்பன அமைக்கப்பட்டதும் அதன் பயனை நீங்கள் அடைந்துகொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

உங்களதும், உங்களது எதிர்கால சந்ததியினரதும் நலன்களை கருத்தில் கொண்டுதான் நாட்டை அபிவிருத்தி செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். 2015ம் 2020ம் ஆண்டுகளை இலக்காக வைத்துத்தான் இந்த அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.ஆகவே எதிர்வரும் 26ம் திகதி ஐ. ம. சு. மு. யை ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றி பெறச் செய்து, நாட்டைப் பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும் என்றார்.இக் கூட்டத்தில் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, சுமேதா ஜீ ஜயசேன, ஜகத் புஷ்பகுமார, எம்.பி. விமல் வீரவன்ச உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் உரையாற்றினார்கள்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "நாட்டை காட்டிக் கொடுக்க இடமளியோம்-ஜனாதிபதி!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates